Friday Dec 27, 2024

நிம்மேலி விஸ்வநாதர் சிவன்கோயில்

முகவரி

அருள்மிகு நிம்மேலி விஸ்வநாதர் சிவன்கோயில், நிம்மேலி, சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் – 609 116.

இறைவன்

இறைவன்: விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி

அறிமுகம்

நிம்மேலி, நெம்மேலி என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர் நெல்மலி என இருந்திருக்கவேண்டும். நெல்வயல்கள் பரந்து இருக்கும் ஊர் தான் இது. சீர்காழியின் மேற்கில் கொண்டல் சாலையில் 3கிமி தூரத்தில் உள்ளது. வடரங்கம் செல்லும் 8, 8Aபேருந்துகள் இவ்வழி செல்லும். இக்கோயில் இறைவன் விஸ்வநாதர், இறைவி விசாலாட்சி. இக்கோயில் பிற்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. எனினும் மேலதிக தகவல்கள் இல்லை. தனக்கு பீடித்த நோயை போக்க சனைச்சரன் எனும் சனி இக்கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் நீராடி இக்கோயிலில் உள்ள வருண லிங்கத்தை வழிபட்டதால் அவரது நோய் குணம் ஆகியது. .

புராண முக்கியத்துவம்

நிடத நாட்டை ஆண்ட மன்னன் வீரசேனனின் மகன் நளன் , பீம அரசரின் குமாரியான தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான். இந்திரன், அக்னி, வாயு, எமன் போன்றவர்களும் தமயந்தியின் மேல் ஆசை கொண்டு அந்த சுயம் வரத்தில் நளனின் உருவெடுத்து கலந்து கொள்கின்றனர். தமயந்தி தன் புத்திகூர்மையினால் நளனை அடையாளம் கண்டு அவனுக்கே மாலையிடுகிறாள். காலதாமதமாக வந்த கலிபுருஷன், நளனுக்கு தமயந்தி மாலையிட்டு விட்டாள் என்ற செய்தி அறிந்து நளனின் மேல் பகை கொள்கிறான். எனவே கலிபுருஷன் சனியின் துணையை நாடுகிறான். சனியும் தன் நடுநிலையிலிருந்து நழுவி நளனுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கிறான். கார்கோடன் என்ற பாம்பை ஏவி நளனைத் தீண்டச் செய்கிறார். நளன் திருநள்ளாற்றில் சென்று இறைவனை வேண்ட சனியை சபிக்கிறார் இறைவன். காலவ மகரிஷி தனக்கும் தன் சந்ததியினருக்கும் கிரகநிலைகளால் மிகவும் துன்பம் நேரிடும் என்பதை அறிந்து நவகிரகதேவதைகளை வேண்டி தவமிருந்து தனக்கும் தன் வம்சத்தாருக்கும் கிரக நிலைகளால் துன்பம் வராதிருக்க சனியிடம் வரம் பெற்றார். இது ஈஸ்வர விதிகளுக்கு முரணானது. இதனால் சனி மீது சிவன் கோபம் கொண்டார், முன்பே சாபத்தினால் குஷ்ட ரோகம் பெற்றிருந்த சனி, இந்த சாபமும் சேர்ந்து இரட்டிப்பாக, பல தலங்கள் பயணம் செய்து சாபவிமோசனம் தேடுகிறார். நிம்மேலி என்ற தலத்துக்கு வந்து சேர்ந்த சனி அங்கு சிவன் கோவிலின் முன் உள்ள தீர்த்தத்தில் நீராடி, உடல் குளிர்ச்சியடைந்து, அந்த ஆலயத்தில் உள்ள வருண லிங்கத்தை வழிபட, சனியை விட்டு நோய் விலகுகிறது.. இப்படி சனி பகவான் வழிபட்ட ஆலயம்தான் அருள்மிகு விசுவநாதர் ஆலயம். . சனி பகவானுக்கு அருளிய வருணலிங்கத்தையும் அருகே உள்ள சனீஸ்வரனையும் எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனிப் பார்வையால் அவதிப்படுபவர்களும், அஷ்டமச் சனி உள்ளவர்களும் நிவாரணம் பெறுவர். கோயில் இறைவன் விஸ்வநாதர் மேற்கு நோக்கியவர், அம்பிகை தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். கோயில் நுழைவாயிலை ஒட்டியபடி கிழக்கு நோக்கிய சன்னதியாக வருணலிங்கமும் அதனருகில் சனி வழிபடும் காட்சியையும் காணலாம். தென்மேற்கில் வரசித்தி விநாயகர் சிற்றாலயமும், வடமேற்கில் கிழக்கு நோக்கிய முருகன் சன்னதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவகிரக மண்டபம் உள்ளது கருவறை கோட்டத்தில் துர்க்கை, தென்முகன் மட்டும் உள்ளனர். இ.ச.அறநிலையத்துறையின் கோயிலாக காலை மாலை என இரு கால பூஜையில் நடக்கிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நிம்மேலி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top