Friday Dec 27, 2024

நார்த்தம்பூண்டி கைலாசநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,

நார்த்தம்பூண்டி,

திருவண்ணாமலை மாவட்டம் – 606802.

இறைவன்:

கைலாசநாதர்

இறைவி:

பெரியநாயகி

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நார்த்தம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும், தாயார் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம் :

 சிவபெருமானிடம் இடப்பாகத்தைப் பெறவேண்டி காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்ட உமையம்மை திருவண்ணாமலை நோக்கி செல்லும் போது வாழைப்பந்தல் என்ற இடத்தில் தங்கினாள். அங்கு சிவலிங்க வழிபாடு செய்வதற்காக லிங்கத்தை தேடி அலைந்தாள். லிங்கம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே மணலால் ஆன லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தீர்மானித்தாள்.

                லிங்கத்தை வடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டது. எனவே முருகனை வரவழைத்து தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும்படி சொன்னாள். முருகன் தனது வேலாயுதத்தை மேல் திசைநோக்கி வீசினார். அங்கிருந்த மலைகுன்றுகளை பிளந்த வேல் செந்நீரை கொண்டு வந்தது. அந்த மலையில் புத்திராண்டன், புருகூதன், பாண்டுரங்கன், போதவான், போதன், கோமன், வாமன் ஆகிய ஏழு முனிவர்கள் தவமிருந்து வந்தனர். முருகன் வீசியவேல் அந்த ஏழு முனிவர்களையும் ஊடுருவிச் சென்றதால் ரத்தம் கொட்டி செந்நீராக வந்தது. அதே நேரம் முருகனின் திருவேல் பட்ட புனிதத்தால் அந்த ஏழு பேரும் சாபவிமோசனம் பெற்று முக்தி அடைந்தனர். பின்பு உமையம்மை சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஏழு பேரை கொன்ற பாவம் முருகனை பிடித்தது. இந்த பாவம் தீர அம்பாளின் அறிவுரைப்படி முருகப்பெருமான் சேயாற்றின் வடகரையில் ஏழு கோயில்களையும், தென்கரையில் ஏழு கோயில்களையும் ஏற்படுத்தினார்.

காஞ்சிபுரம், கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகியவை வடகரையில் உள்ள சப்த கரை கண்டங்கள் என அழைக்கப்பட்டன. தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு, நார்த்தம்பூண்டி, தென்பன்றிப்பட்டு, பழங்கோவில், கரப்பூண்டி, மண்டகுளத்தூர் ஆகியவை தென்கரையில் உள்ள சப்த கைலாயங்கள் எனப்பட்டன. சப்த கைலாயங்களில் மூன்றாவதாக திகழ்வது நாரதர் பூஜித்த நார்த்தம் பூண்டி சிவன் கோயிலாகும். கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்பட்டுள்ளது. தட்சன் தனது மூன்று பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார். ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவானுபோத உபதேசம் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளை தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல் நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம் பூண்டியிலுள்ள கயிலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார். இறைவன் பஞ்சமூர்த்திகளோடு ரிஷபவாகனத்தில் நாரதருக்கு காட்சிதந்து சாபத்தை நீக்கினார்.

பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்தமுனிவர்களின் தலைமைப்பதவியை அடைந்தார். நாரதரின் பேரால் இவ்வூர் நாரத பூண்டியாக இருந்து காலப்போக்கில் நார்த்தம் பூண்டி என அழைக்கப்படுகிறது. கயிலாசநாதர் கோயிலை சம்புவராயர் மற்றும் வல்லாள மன்னர்கள் கட்டினர். விஜயநகர அரசர்களால் இந்த கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. இங்கு அம்பாள் பெரியநாயகி என அழைக்கப்படுகிறாள்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

      முருகன் தனது தோஷம் நீங்க சிவபூஜை செய்த தலங்களில் இது மிகவும் முக்கியமான தலமாகும்.

திருவிழாக்கள்:

பிரம்மோற்சவம், கிருத்திகை, மாசி மகம் ஆகியவை முக்கியமானவை

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நார்த்தம்பூண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top