நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில்
முகவரி :
நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில்
மேலக்கோட்டைவாசல்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு 611001
இறைவி:
நெல்லுக்கடை மாரியம்மன்
அறிமுகம்:
நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். அரிசி வியாபாரி ஒருவரால் கட்டப்பட்ட கோயில், அவரது கனவில் தோன்றிய அம்மன் விருப்பப்படி கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு மாய சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கோவில் ரயில் நிலையத்திலிருந்து ½ கிமீ தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
நெல் வாணிபம் செய்யும் பெரியநாகத்தம்மாளை அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும். தொழிலில் நேர்மையும், அனைவரிடமும் கருணையும் கொண்டு பழகும் அவளை எல்லோருக்கும் பிடிக்கும். ஒருநாள் மஞ்சள் நிறச் சேலை அணிந்த பெண்ணொருத்தி எனக்கு நெல்லு வேணும்; கொஞ்சம் அளந்து கொடுங்களேன் என்று கேட்டாள். அந்தப் பெண்ணின் கனிவும் சிரிப்பும் பெரிய நாயகத்தம்மாளை என்னவோ செய்தது! கடைக்குள் சென்று, மூட்டையில் இருந்து நெல்லை அளந்து கூடையில் போட்டு எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் ஆடிப்போனாள். அந்தப் பெண்ணைக் காணோம். அந்த நெல்லை அவளிடம் கொடுக்கும்போது. அவள் முகத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டது நடக்காமல் போய்விட்டதே என்று வருந்தினாள் பெரியநாயகத்தம்மாள்.
அன்றிரவு… பெரியநாயகத்தம்மாளின் கனவில் தோன்றிய அந்தப் பெண்மணி. நான் மகமாயி! உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பின் நிழலில் புற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கோயில் கட்டு. உன்னையும் இந்த ஊரையும் காப்பது என் பொறுப்பு! என்று சொல்லி மறைந்தாள். அதைக் கேட்டுச் சிலிர்த்துப் போனாள் பெரியநாயகத்தம்மாள். விடிந்ததும் விடியாததுமாக எழுந்து குளித்துவிட்டு, அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் இருந்த புற்றுக்கு மஞ்சள்-குங்குமம் இட்டு, வழிபட்டு வந்தாள், அதே நேரம், பெரியநாயகத்தம்மாளின் கனவில் அம்மன் வந்ததும், புற்றில் அம்மன் குடிகொண்டிருப்பதும் தெரியவரவே, ஊர்மக்கள் அனைவரும் வந்து வணங்கிச் சென்றார்கள். அதன்பிறகு, அங்கே அந்த இடத்தில் அம்மனின் திருவுருவத்தை செப்புத் திருமேனியாக வைத்து, மாரியம்மன் என்னும் திருநாமம் சூட்டி வழிபடத் துவங்கினார்கள். சிறிய அளவில் கோயிலும் அமைக்கப்பட்டது; அதையடுத்து அந்த ஊர் செழித்து வளர்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு.
நம்பிக்கைகள்:
நெல்லுக்கடை மாரியம்மனிடம் நெல்மணிகளையும் விதை நெல்லையும் வைத்துப் பிரார்த்திக்கின்றனர் விவசாயிகள். இதனால் விளைச்சல் செழிக்கும். லாபம் கொழிக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய அற்புதமான ஆலயம். கருவறையில், கருணை பொங்கும் மகா மாரியம்மன் கிழக்குப் பார்த்தபடி அழகுறக் காட்சி தருகிறாள். வீராசனத்தில் அமர்ந்தபடி, நான்கு திருக்கரங்களிலும் டமருகம், பாசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி காட்சி தரும் தேவியைத் தரிசித்தால் நம் மொத்தக் கவலைகளும் காணாமல் போய்விடும் என்பது ஐதீகம்! இவளுக்கு எதிரில் சிறிய உருவிலான அம்மன் விக்ரகமும் உள்ளது. வருடத்துக்கு ஒருமுறை, பெரிய அம்மனுக்கு தைலக்காப்பு சார்த்தப்படுகிறது.
சின்ன அம்மனின் விக்கிரகத் திருமேனிக்கு தினந்தோறும் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. எல்லையம்மனும் மாரியம்மனைப் போலவே தனி விமானத்துடன் கூடிய கருவறையில், நான்கு திருக்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி. ஐந்து தலை நாகம் படம் எடுத்துக் குடை பிடிக்க, வீரா சனத்தில் அமர்ந்தபடி திருக்காட்சி தருகிறாள். இவளுக்கு எதிரில், மகுடம் தரித்த நிலையில், அம்மனின் சிரசு காட்சி தருகிறது. நெல்லுக் கடை மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்டால், விரைவில் நினைத்தது நடக்கும்; கேட்டது கிடைக்கும்; நித்தமும் நம் வாழ்வில் துணைக்கு வருவாள் என்கிறார்கள் பக்தர்கள்.
திருவிழாக்கள்:
விநாயக சதுர்த்தி, கந்த சஷ்டி, மார்கழி திருவாதிரை, சித்திரைப் பெருவிழா, ஆடிசெவ்வாய், ஆடிவெள்ளி
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி