நங்கநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை
முகவரி
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், நங்கநல்லூர், சென்னை மாவட்டம். போன்: +91 94455 87171
இறைவன்
இறைவன்: ஐயப்பன்
அறிமுகம்
தமிழ்நாட்டின் சென்னை நகரத்தில் உள்ள நங்கநல்லூரில் அமைந்துள்ள இக்கோயில் ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஐயப்பன் கோயில் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் சன்னதி என்பது சபரிமலையின் பிரதியல்ல. உலகில் எங்கும் இல்லாத சக்தி வாய்ந்த இரு பிரம்மச்சாரிகள் உலகில் உள்ள பக்தர்களுக்கு முதுகுப்புறமாக நின்று அருள்பாலிப்பதாக ஐதீகம். 1991 இல் சபரிமலை கோவிலின் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) இங்கு தலைமை பூசாரியாக உள்ளார். கேரள பாணியில் கோயில் நுழைவுவாயில் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் செப்புக்கவசம் போர்த்தப்பட்ட கொடி மரம், அதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் கிழக்கு நோக்கி ஐயப்பன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். பிராகாரத்தில் கன்னி மூல கணபதி, நாகராஜர், மாளிகைபுரத்து அம்மன், கொச்சு கடுத்த சுவாமி சன்னதிகளும் மற்றும் வலிய கடுத்த சுவாமி, கருப்பசாமி, கருப்பாயி அம்பாள் ஆகிய தெய்வங்களும் பரிகார மூர்த்தங்களாகக் காட்சி கொடுக்கின்றனர்.
புராண முக்கியத்துவம்
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் உள்ள பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து, அவர்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புனிதப் பணியினை செய்து வந்தார் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். நாளடைவில் திருவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் விக்ரகம் ஒன்று செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி பக்தர்களின் கைங்கரியத்தால் ஐயப்பன் விக்ரகம் செய்யப்பட்டு பல வருடங்களாக குருசாமியின் இல்லத்திலேயே ஐயப்ப பூஜைகளும் விழாக்களும் நடைபெற்று வந்தன. அழகான ரூபத்தில் அமைந்த ஐயப்பனுக்கோ தான் ஒரு தனிக் கோயிலில் அமர வேண்டும் என்ற விருப்பம் மேலோங்க, பலரது எண்ணத்திலும் அது எதிரொலிக்க, தனிக் கோயில் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. முதலில் வேறு பகுதியில் இடம் பார்த்து கோயில் கட்ட ஆரம்பிக்க, என்ன காரணத்தினாலோ அது தொடரமுடியாமல் போனது. உடனே குருசாமி சபரிமலையிலுள்ள மேல்சாந்தியை சந்தித்து விவரம் கூற பிறகு தேவபிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டது. தேவபிரச்னத்தில் ஐயப்பனே வந்து தாம் கோயில் கொள்ள விரும்பும் இடம் பிருங்கி முனிவர் தவமிருந்த சேத்திரம், அகத்தியர் வலம் வந்த பூமியென்றெல்லாம் கூற, அப்படி பிரச்னத்தின் மூலமாக ஐயப்பன் வந்து அமர்ந்த இடம்தான் நங்கநல்லூர். இந்த தலத்து ஐயப்பன் இங்கு பிரதிஷ்டை ஆவதற்கு முன்னால் சபரிமலைக்கு சென்று பம்பா நதியில் நீராடி பிறகு பதினெட்டு படிகள் ஏறி தன்னையே தரிசனம் செய்து விட்டுதான் இங்கு கருவறையில் அமர்ந்து கொண்டார். அதாவது ஐயப்பனே ஐயப்ப சாமியாக சபரிமலை சென்று வந்திருப்பதாக கூறப்படுகிறது. சபரிமலை மூலவருக்கு நடைதிறந்திருக்காத நாட்களில் அவர்மீது விபூதி பூசி வைப்பது பழக்கம். இந்த தலத்து ஐயப்பன் அங்கு சென்றபோது அவர் மீதும் அந்த விபூதி பூசப்பட்டது. அதுமட்டுமல்ல, சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களின் போது நான் அங்கு இருப்பேன்; நடை சாற்றியிருக்கும் நாட்களில் இங்கு இருப்பேன் என்று தேவபிரசன்னத்திலேயே ஐயப்பன் கூறியிருப்பதாக தகவல்கள் உள்ளன.
நம்பிக்கைகள்
பக்தர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற இங்குள்ள ஐயப்பனை வேண்டிக் கொள்கிறார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பால்குடம் எடுத்தும், அன்னதானம் செய்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக் கொடுக்கிறதோ அதே போன்ற வடிவிலேயே இங்கும் ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. இங்கே ஐயப்பன் தானே விரும்பி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. சபரிமலையில் திருவாபரணம் கொண்டுவரும் வைபவம் நடப்பது போலவே இங்கும் நடக்கிறது. இத்தலத்து ஐயப்பனுக்குரிய திருவாபரணங்களை பந்தள மகாராஜா அரண்மனையில் வைத்து பூஜித்துவிட்டு அதை இங்கு எடுத்து வந்து இந்த ஐயப்பனுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்படுவது வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும்! மூலவர் சன்னதி சபரிமலை போலவே தக தகவென மின்னும் பொன் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. சுவாமி ஐயப்பனுக்கு ஜனவரி 14 முதல் 2 வரையில் பந்தளத்திலிருந்து எடுத்து வரப்பெற்ற திருவாபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம், தமிழ் வருடப் பிறப்பு, கார்த்திகை மாதத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை) பால்குடம் எடுத்தல், அகண்ட அன்னதானம், திருவீதி உலா, ஆராட்டு விழா என ஏக அமர்க்களமாக உற்சவங்கள் நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆஞ்சநேயர் கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பழவந்தாகல்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை