தொப்பைய சாமி மலைக் கோயில், திண்டுக்கல்
முகவரி :
தொப்பைய சாமி மலைக் கோவில்,
நாயக்கனூர், தொப்பைய சாமி மலை,
திண்டுக்கல் மாவட்டம் – 621311.
ஜெகதீசன் 9962909225 / முருகேசன் 9087564080
இறைவன்:
தொப்பேஷ்வர சுவாமி
அறிமுகம்:
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரமான கிழக்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் – கரூர் செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் கோவிலூர் சென்று, R. கோம்பை எனும் ஊருக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ செல்ல வேண்டும். அங்கு நாயக்கனூர் எனும் சிற்றூர்க்கு கிழக்கே 1.5 கி. மீ தொலைவில் தொப்பைய சாமி மலைக் கோவில் அடிவாரத்தை அடையலாம். தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் இம்மலைத் தொடர்கள் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும். அடிவாரத்தில் தொடங்கி கோவில் வரையிலும் அம்புக் குறி கற்களில் வரையப்பட்டிருக்கும்.
புராண முக்கியத்துவம் :
1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மையான சிவன் கோவில் மிக எளிமையாக திறந்த வெளியில் அமையப் பெற்றிருக்கும். சுயம்பு மூர்த்தி வடிவமான லிங்கத்தை பக்தர்கள் எடுத்து கட்டியுள்ளனர். காட்டு விலங்குகளின் பாதிப்பு ஏற்படா வண்ணம் சுற்றிலும் வட்ட வடிவில் கற்களைக் கொண்டு அழகுற சுவர் போன்று 5 அடி உயரத்தில் கட்டியுள்ளனர். நுழை வாயிலில் குனிந்து செல்லும் வண்ணம் கற்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது. இங்கு வீற்றிருக்கும் இறைவன் தொப்பேஷ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் சிலை கிடையாது.
சிவலிங்கத்தின் முன்பு அழகான நந்தி சிலை உள்ளது. இதன் வலது கால தூக்கிய நிலையில் காணப்படும். இவ்விடத்தில் அமர்ந்து வலது நாசி மூச்சு எனப்படும் சூரிய கலை தியானம் செய்ய எண்ணியது கைகூடும் என்பது சித்தர் வாக்கு. இம்மலையில் தர்ப்பைப்புல் அதிகமா இருந்ததால் இங்கு சுயம்புவாக உதித்த சிவனை தர்ப்பேஷ்வரன் என்றும் காலப்போக்கில் தொப்பெஷ்வரர், தொப்பையசாமி என்றும் அழைக்கின்றனர். இறைவன் இம்மலையில் வீற்றிருப்பதால் தொப்பைய சாமி மலை என்றே அழைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
வியாபார விருத்தி தரும் சிறப்புத் தலமாக விளங்குகிறது. கடைகள் வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் திருவண்ணாமலை, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து மாதம் தோறும் தொடர்ச்சியாக வந்து செல்கின்றனர். கடன் தொல்லை நீங்கிடவும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்திடவும் தொடர்ச்சியாக 5 பௌர்ணமி நாட்களில் வெண்மை நிற வஸ்திரம் சாற்றி, பாலபிஷேகம் செய்துவர நல்ல முன்னேற்றம் காணலாம். இக்கோவிலில் தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள், நாகாபரணம் மற்றும் பலவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
திருவிழாக்கள்:
அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் வந்து சென்று வரலாம்
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாயக்கனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை