Wednesday Oct 30, 2024

தேவனாம்பாளையம் ஸ்ரீ அமணீஸ்வரர் திருக்கோயில், கோயம்பத்தூர்

முகவரி :

தேவனாம்பாளையம் ஸ்ரீ அமணீஸ்வரர் திருக்கோயில்,

எம்மேகவுண்டன்பாளையம் சாலை தேவனாம்பாளையம்,

பொள்ளாச்சி அருகே,

கோயம்பத்தூர் மாவட்டம்,

தமிழ்நாடு 642120

இறைவன்:

அமணீஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

 தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திற்கு அருகில் உள்ள தேவனாம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தேவனாம்பாளையம் ஸ்ரீ அமணீஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீ அமணீஸ்வரர் என்றும் அன்னை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம் :

 மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.

நம்பிக்கைகள்:

சுவாமிக்கு வஸ்திரங்கள் சார்த்தி, பூஜைகள் செய்து வணங்கிட மனநோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

       தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. இங்கு முன்னோர்களுக்கு அதிகளவில் திதி கொடுக்கப்படுகிறது.

மும்மூர்த்திச்சுயம்பு : இங்கு, மும்மூர்த்திகளும் சுயம்புவாக, மேற்கு திசை நோக்கியபடி, ருத்திராட்ச மேனிகொண்டவர்களாக அருளுகின்றனர். நடுவே, சிவன் வீற்றிருக்க வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் விஷ்ணுதனித்தனியேயும், மகாமண்டபத்தில், பீடத்தில் விநாயகருடனான அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியபடியும் உள்ளனர்.

ஆற்றுக்கு நடுவே கோயில் : இக்கோயில் கற்பக ஆற்றுக்கு நடுவே ஓர் பாறையின் மீது அமைந்துள்ளது. ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும் என்பதால் அச்சமயங்களில் இறைவனை வணங்கச்செல்வது சற்று சிரமம். இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பேண்ட், சட்டைக்கு அனுமதி இல்லை: நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.

திருவிழாக்கள்:

      வழக்கமான பூஜைகள் தவிர, அத்திரி மகரிஷியின் குரு பூஜை நாட்களில் வியாழக்கிழமை, கார்த்திகை தீபம், பிரதோஷம், ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி, சித்திரை விஷு மற்றும் மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிவராத்திரி நாட்களில் சித்தர்கள் சிவபெருமானை வழிபடுவதாக நம்பப்படுகிறது.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவனாம்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பொள்ளாச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top