Thursday Dec 19, 2024

தென்திருவாலவாய் திருக்கோயில், மதுரை

முகவரி :

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில்,

தெற்கு மாசி வீதி,

மதுரை – 625 001.

போன்: +91 452 2344360

இறைவன்:

திருவாலவாய்

இறைவி:

மீனாட்சியம்மன்

அறிமுகம்:

தென்திருவாலவாய் கோயில் அல்லது தென் திரு ஆலவாய் கோயில் என்பது, தமிழ்நாட்டின் மதுரை மாநகரில், தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் உடனுறை சிவபெருமான் கோயில் ஆகும். மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மீனாட்சி. இங்குள்ள சிவமூர்த்தி அளவில் பெரியவர். இது தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில். இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் வரும் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

புராண முக்கியத்துவம் :

மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை.

அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிஷேக அர்ச்சனைகளும் செய்து அந்த திருநீற்றை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது. கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்:

இங்குள்ள தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை விலகுகிறது. இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும். இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகியன கிடைக்கின்றன. சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிட்டும். கல்வி வரம், எடுத்தகாரியம் நடைபெற இத்தலத்தில் வழிபடலாம்.

சிறப்பு அம்சங்கள்:

அது என்ன தென்திருவாலவாய் : பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்றுதெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரையையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.

இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர். மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.

எமன் வழிபட்ட தலம் : மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்தலமே தென் திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

திருவிழாக்கள்:

கந்த சஷ்டி – ஐப்பசி – 6 நாட்கள் திருவிழா- சுப்ரமணியருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள். அன்னாபிசேகம் – ஐப்பசி – பௌர்ணமி நாளில் சிறப்பாக நடைபெறும் ஆடிப்பூரம்,கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிசேகம் சிறப்பாக நடைபெறும். பௌர்ணமி தோறும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும். ஆடி வெள்ளி, தைவெள்ளி ஆகிய விசேச தினங்களில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தவிர தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு உள்ளிட்ட அனைத்து விசேச நாட்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக அர்ச்சனைகள் நடைபெறும். மாதத்தின் பிரதோச நாட்களில் வெகுசிறப்பாக அபிசேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மதுரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top