துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் சிவன் கோயில்
முகவரி
துக்காச்சி சிவன்கோயில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம்
இறைவன்
இறைவன்: தென் திருகாளத்தி நாதர் இறைவி: சௌந்தரநாயகி
அறிமுகம்
கும்பகோணம் –நாச்சியார்கோயில்- பூந்தோட்டம் சாலையில் உள்ளது துக்காச்சி பேருந்து நிறுத்தம் இங்கிருந்து அரசலாற்றினை கடந்து வடக்கில் அரை கிமி தூரம் சென்றால் துக்காச்சி கிராமத்தினை அடையலாம். ஊரின் பெயர் முற்காலத்தில் துர்க்கைஆட்சி, ராஜராஜன் ஆட்சி காலத்திற்கு முன்னரே இப்பெயர் மருவி துக்காச்சி ஆகியிருக்கிறது. துக்காசிக்கு அருகில் உள்ள கூகூரில் இருக்கும் ஆதித்தேஸ்வரம் கோயில் ராஜராஜன் 7 ம் ஆட்சிஆண்டு (992)மற்றும் 14ஆண்டு ( 999) கல்வெட்டு இவ்வூரை விடேல்விடுகு துக்காச்சி சதுர்வேதமங்கலம் என கூறுகிறது. இதனால் இவ்வூர் இரண்டாம் நந்திவர்மனின் பட்டபெயரான விடேல் விடுகு என்ற பெயரில் உளதால் இதன் பழமை 730-795க்கு செல்கிறது. நால்வேதம் கற்ற அந்தணர்கள் வாழும் ஊருக்கு சதுர்வேதமங்கலம் என பெயருண்டு பல்லவ மன்னன் அந்தண குடியேற்றம் செய்து துக்காச்சி யை அந்தணர்களுக்கு தானமளித்திருக்கலாம். (ஒரு பெயர் மருவ சில நூறாண்டு ஆகலாம், துக்காச்சி என்பது மருவிய பெயரா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது ) சோழ மண்டலம் பல வள நாடுகளாக பிரிக்கப்பட்டதில் சத்திரிய சிகாமணி வளநாட்டில் உள்ள திருநறையூர் நாட்டில் இந்த துக்காச்சி இருந்தது, பின்னர் குலோத்துங்க சோழ வள நாட்டில் இருந்ததை சாசனங்கள் குறிப்பிடுகின்றன., முதலாம் ராஜாதி ராஜனின் காலத்தில் இந்த விடேல்விடுகு சதுர்வேதிமங்கலம் எனும் பெயர் மாற்றப்பட்டு துக்காச்சி விஜயராஜேந்திர சதுர்வேதிமங்கலம் என புது பெயர் பெற்றது, இந்த துக்காச்சி சிவாலயத்தில் விக்கிரம சோழனின் நான்காம் ஆட்சி கல்வெட்டு உள்ளது விக்கிரமசோழன் காலத்தில் மீண்டும் இவ்வூர் விக்கிரமசோழ நல்லூரான இருமாபூந்துய் என புதிய பெயர் வழங்கப்பட்டது. காலச்சக்கரம் அனைத்தையும் உதறி துக்காச்சி என்றே தற்போது அழைக்கிறது. இவ்வூர் தென் திருக்காளத்தி என வழங்கப்பட்டதாக சொல் வழக்கில் உள்ளது. இதை ஆய்வு நோக்கில் பார்த்தால் முதலாம் குலோத்துங்கனின் 30 ஆம் ஆட்சி ஆண்டில் குலோத்துங்க சோழ நல்லூர் எனும் ஊரில் உள்ள தென்திருகாளத்திமகாதேவர் கோயிலில் திருப்பதிகம் பாட விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலம் எனும் துக்காச்சி ஊர் சபையோர் நிலம் அளித்த செய்தி துக்காச்சி ஊரில் கிடைத்த கல்வெட்டு சொல்கிறது. இதே விஜயராஜேந்திர சதுர்வேதி மங்கலத்து (துக்காச்சி) சபையோர் கூகூர் ஆம்ரவநேனேசுவரர் கோயிலுக்கு நிவந்தம் அளித்த செய்தியும் உள்ளது துக்காச்சி சிவாலயத்தின் பழம் பெயர் தென் திருகாளத்தி எனப்படுவதாகும். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான காளத்தி போன்றே சிறப்பு பெற்ற கோயிலாக இக்கோயில் திகழ்ந்தது. முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருக்காளத்திமகாதேவர் என வழங்கப்பட்ட கோயில் பின்னர் அவரது மகன் விக்கிரம சோழன் திருப்பணி செய்து விக்கிரமசோழீச்வரம் என பெயரிட்டழைத்தான். அதன் பின்னர் வடமொழி கலப்பால் ஆபத்சகாயேஸ்வரர் என வழங்கப்படுகிறது. அம்பிகை சௌந்தர்யநாயகி எனப்படுகிறார். மேலும் மூன்றாம் ராஜராஜன் காலத்தில் துக்காச்சியில் இருந்த சீராண்டான் முனையவரையன் என்பான் இக்கோயில் நிர்வாகத்தினை சீர்படுத்தினான். அரசலாற்றங்ககரையில் பாதிரி வனத்தில் எழுந்தருளிய ஈசனுக்கு அமைக்கப்பட்டிருந்த கோயிலை பல்லவர்கள், ராஜராஜன், குலோத்துங்கன், விக்கிரமன் ஆகியோர் போற்றி பாதுகாத்து பெருந்திருப்பணி செய்து இப்போது நாம் காணும் இரு பிரகார கோயிலாக எழுந்து நிற்கிறது.
புராண முக்கியத்துவம்
இறைவன்; தென் திருகாளத்தி நாதர் –ஆபத்சகாயேஸ்வரர் இறைவி; சௌந்தரநாயகி தல மரம்; பாதிரி தீர்த்தம்; அரசலாறு அம்பிகை இறைவனை பாதிரி பூக்களை கொண்டு பூஜித்து அருள் பெற்ற தலம், குபேரன் சன்னதி, வாராகி சன்னதிகள் கொண்டுள்ளதால் இவர்களும் இத்தல இறைவனை வழிபட்ட தலமாக இது இருத்தல் கூடும். சிவ துர்க்கை அம்மன் முதல் சுற்று திருக்கோபுரத்தின் வலது புறம் தெற்கு நோக்கியதாக சிவதுர்க்கை அம்மன் சன்னதி உள்ளது முகப்பு மண்டபத்துடன் கூடிய தனி கோயிலில் துர்க்கை அபூர்வமான காட்சியாக தெற்கு நோக்கி அருள் பாலித்த தலம் இது. இவள் பெயரிலேயே துர்க்கை ஆட்சி என இவ்வூர் வழங்கப்படுவதில் இருந்து அறியலாம். எட்டு கரங்களுடன், கோரமுகம், கரண்ட மகுடம், கொண்டு கிழே மகிஷனை சூலம் கொண்டு வதம் செய்யும் உக்ர வடிவினளாக உள்ளது விக்கிரமன் இத்தலத்தில் இத்துர்க்கைக்கு தனி கோயிலை வடகிழக்கில் அமைத்து தனி நிவந்தங்கள் வழங்கினான். சரபமூர்த்தி,- நரசிம்மர் இரணியனை வதம் செய்த பின்னரும் தனது கோபம் தணியாமல் ஆண்ட சராசரத்தினை அழிக்க இறைவன் சிம்புள் எனும் சிங்கமுகமும் கழுகு உடலும்கொண்ட சரப வடிவம் எடுத்து நரசிம்மரை காலால் பற்றி எடுத்த நொடி அவரது கோபாவேசம் அடங்கினார் எனும் வரலாற்றினை விளக்கும் சரபர் சன்னதி இங்கே உள்ளது இப்படி இரு கோபாவேச மூர்த்தங்களான சரபர், துர்க்கை எனும் இரு மூர்த்தங்களை கொண்ட திருக்கோயில். வடபுறத்தில் கிழக்கு நோக்கிய கோட்டத்தில் பெரிய உருவில் குபேரன் உள்ளார். அதனால் ஐவரும் இத்தல இறைவனை வணங்கிய பெருமைக்குரிய தலம் ஆகும். இக்கோயில் இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் (திருநாகேஸ்வரம்) அவர்களின் கட்டுப்பாட்டில் அக்கோயிலின் உப ஆலயமாக இணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பெருமைகளுக்குரிய இக்கோயில் பெரும்பொருட்செலவில் திருப்பணி செய்வோர் இல்லாததாலும், உடனுக்குடன் பழுது நீக்க வல்லார் யாரும் பொறுப்பில் இல்லாமையாலும், காலப்போக்கில் கோயில் சிதைவுற ஆரம்பித்துவிட்டது. இத்திருக்கோயில் இரண்டு திருசுற்றுக்களையும் கிழக்கில் இரு கோபுரங்களையும் கொண்டுள்ளது முகப்பு ராஜகோபுரம் ஐந்து நிலைகளில் தற்போது மூன்று மட்டும் எஞ்சி நிற்கிறது, பலகணி மாடம் கொண்ட கோபுரம் இதுவாகும். கோபுர உட்பகுதிகளில் பல பெரிய நாகங்கள் குடியிருக்கின்றன என உழவார பணிகள் செய்யும் முகநூல் அன்பர் என்னை தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். இரண்டாம் திருசுற்றில் வலது புறம் பெரிய வசந்த மண்டபம் கலையழகு மிக்க தூண்களைகொண்டுள்ளது இதுவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் சுற்றிவர இயலாதவாறு இடிபாடுகள் கொண்டுள்ளது . முதல் பிரகாரம் 211அடி x67அடி கொண்டுள்ளது. கருவறை விமானம் திரி தளம் எனும் மூன்றடுக்கு கொண்டதாகும். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், திருவிலங்கமூர்த்தி, நான்முகன் உள்ளனர். அர்த்த மண்டபம், ஸ்தாபன மண்டபம் ஆகியவை உள்ளன. தென் திசையிலும் வடதிசையிலும் மண்டபத்திற்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. இப்படிக்கட்டுகளுக்கு நவரங்கப்படிகள் என பெயர். குதிரைகளும் யானைகளும் சக்கரத்துடன் உள்ள இத்தேர் மண்டபத்தினை இழுத்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் பெரிய லிங்க திருமேனியாக தென் திருக்காளத்தி மகாதேவர் உள்ளார். அம்பிகையும் பெரிய உருவில் நின்ற கோலத்தில் உள்ளார். முகப்பு மண்டபத்தில் தென்புறம் சோமஸ்கந்தர் இருந்த அறையும், வடக்கில் சரபேஸ்வரர் கல்திருமேனியும் இருந்துள்ளன. முதல் பிரகார தென்மேற்கில் விநாயகர் அழகிய பெரிய உருவத்தில் உள்ளார். மேற்கில் முருகன் சன்னதியும் உள்ளது. பிரகாரத்தில் திருமாளிகை திருசுற்று உள்ளது இதில் சப்தமாதர், விநாயகர் சிலைகள் உள்ளன. தென் புறம் ஒரு தனி வாயில் இரண்டாம் பிரகாரத்திற்கு செல்வதற்கு உள்ளது. முகப்பு மண்டப விதானத்தில் சோழர்கால ஓவியங்கள் சிதைந்து உள்ளன. மேலும் இக்கோயிலில் அழியும் நிலையில் இருந்த தமிழ், கிரந்த ஓலைசுவடிகள் திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் கண்டுஎடுக்கப்பட்டு பாதுகாப்பு பெற்றன. கோயிலின் பரிவார மூர்த்திகளும், சரப, துர்க்கை மூர்த்திகளும் வெளியில் பெரும் தகர கொட்டகை போடப்பட்டு பூசைகள் செய்யப்படுகிறது, மூலவர்களான இறைவன் அம்பிகை இருவரின் சக்திநிலையை ஒரு சிறு லிங்க, அம்பிகை வடிவங்களில் ஏற்றப்பட்டு பூசைகள் நடைபெறுகின்றன. பெரிய அளவில் வருமானம் இல்லாவிட்டாலும் ஓர் சிவாசாரியார் குடும்பம் இறைவனுக்கு பணி செய்து வருகிறது. அவர்களில் திரு.ராம்குமார் குருக்கள் முழு ஈடுபாட்டுடன் நான்கு கால பூசை செய்கிறார். அவரை இத்தருணத்தில் வாழ்த்தி வணங்குவோம். சில ஆண்டுகளாக இக்கோயில் திருப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வந்தது ஆனால் நிபுணர் குழு கொண்டு பணிகள் செய்யாமல் பழம் பெரும் பொக்கிஷம் தன் புராதன அழகை இழந்து வருகிறது. பல இடங்களில் புதிய கட்டுமானங்கள் செய்யப்பட்டு மாற்றம் செய்யப்படுகிறது. இதனால் நீதித்துறை தலையிட்டு குட்டு வைத்துள்ளது குட்டை வாங்கிக்கொண்டு பிள்ளையார் போல் உட்கார்ந்திருபார்களோ அல்லது பொறுப்புள்ள ஆசிரியர் வைத்த குட்டு நமது நன்மைக்கே என எண்ணி திருந்துவார்களோ இறைவனுக்கே வெளிச்சம். பள்ளி புத்தகத்தில் நமது கலாசாரம், கலைகள், இலக்கியம், புராணம், பண்பாடு வரலாறு இவைகளெல்லாம் இடம்பெற்றிருந்தால் இன்றைய அதிகாரிகள் குருட்டு கேள்விகள் கேட்டு பணிகளை குழப்பாமல் இருந்திருப்பார்கள் இது விக்கிரம சோழனின் கனவுக்கோயில் இதை நம் வாழ்நாளில் பழம் பெருமையுடன் பார்ப்போமா? பொறுத்திருக்கத்தான் வேண்டும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
2000 – 3000
நிர்வகிக்கப்படுகிறது
இந்த கோயில் தார் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாச்சியர்கோயில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி