Wednesday Nov 27, 2024

திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் (துறைகாட்டும் வள்ளலார்)திருக்கோயில், திருவிளநகர் (ஆறுபாதி)போஸ்ட்-609 309, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91-4364 – 282 129.

இறைவன்

இறைவன்:உச்சிரவனேஸ்வரர் இறைவி: வேயுறுதோளியம்மை

அறிமுகம்

திருவிளநகர் உசிரவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் வேடுவ வேடத்தில் வந்து சம்பந்தருக்கு ஆற்றைக் கடக்க உதவினார் என்பது தொன்நம்பிக்கை.இத்திருக்கோயில் ஞாழற் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி காணப்படுகின்றன. இடப்புறம் ஆஸ்தான மண்டபம் உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது இடப்புறம் நடராஜர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதியில் துறை காட்டும் வள்ளலார் உள்ளார். அவரது சன்னதிக்கு இடப்புறம் வேயுறுதோளியம்மை சன்னதி உள்ளது. மூலவருக்கு முன் பலிபீடம், நந்தி உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி தெய்வானையுட்ன் கூடிய சுப்பிரமணியர், நால்வர், அருணாசலேஸ்வரர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். தல விருட்சம்:விழல் என்ற புல்செடி தீர்த்தம்:காவிரி, மெய்ஞான, பொய்கை தீர்த்தம் ஆகமம்/பூஜை :காமிய ஆகமம்

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளிஎழுச்சி பூஜைக்காக கூடை நிறைய பூ எடுத்துக்கொண்டு ஆற்றைக்கடந்து வருவான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடச்செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆற்றின் கரையை நோக்கி செல்ல போராடினான். இதனால் இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்கு பூவை கொண்டு செல்ல காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இறைவனை பிரார்த்தித்தான். இவனது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ஆற்றின் துறையை காட்டி உதவினார். அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. இதனால் இறைவன் “துறை காட்டும் வள்ளல்’ ஆனார்.

நம்பிக்கைகள்

எந்தவித பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தலவிருட்சமான விழல் செடியில் முடிச்சு போட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பண உதவி, நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கிக் கொடுத்தல் போன்ற வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

முன் காலத்தில் இப்பகுதி முழுவதும் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் “விழர் நகர்’ எனப்பட்டது. இது காலப்போக்கில் “திருவிளநகர்’ ஆனது. திருஞான சம்பந்தர் கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில் காவிரியாறு கரைபுரண்டு ஓடியது. அப்போது வழிதெரியாமல் திண்டாடிய சம்பந்தர்,””இங்கு துறைகாட்டுவோர் யாரேனும் உளரோ” என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி துறைகாட்டி அக்கரை சேர உதவி செய்தார்.இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் வேயுறுதோளியம்மை சங்கு, சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 103 வது தேவாரத்தலம் ஆகும்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஸ்டி .

காலம்

1000-2000 வருடங்களுக்கு முன்

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவிளநகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top