Thursday Dec 26, 2024

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் திருக்கோயில் (கற்பகநாதர்), தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி – 612 302. தஞ்சாவூர் மாவட்டம் போன்: +91 435 245 4421, 245 4026

இறைவன்

இறைவன்: திருவலஞ்சுழிநாதர் இறைவி: பெரியநாயகி, பிருஹந்நாயகி

அறிமுகம்

திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதிசேடன், திருமால், பிரம்மன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இது, கும்பகோணம்-தஞ்சாவூர் இரயில் பாதையில், சுவாமிமலை நிலையத்திலிருந்து வடக்கே 1-கி. மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம்- தஞ்சை நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலில் அமுதம் கடைந்தனர். வாசுகியானது மந்திர மலையின் பாரம் தாங்காமல், தனது கொடிய விஷத்தை பாற்கடலில் கக்கியது. அதன்படி கக்கப்பட்ட ஆலகால விஷத்தின் கொடுமை தாங்காது தேவர்களும் அசுரர்களும் ஈசனிடம் சென்று முறையிட்டனர்.ஈசன் அவர்களிடம், எந்த செயல் செய்யும் முன்பு விநாயகரை வழிபட வேண்டும். எனவே நீங்கள் விநாயகப் பெருமானை வழிபட்டால் தடையின்றி அமுதம் கிடைக்க பெறுவீர்கள் என அருளினார். தேவர்களுடன் அசுரர்களும், பாற்கடலை அடைந்து கடல் நுரையினை சேர்த்து விநாயகர் வடிவமாக செய்து வழிபட்டனர். அதன்பின் பாற்கடலை கடைந்து, அமுதம் கிடைத்து மகிழ்ந்தனர். விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என பெயர் பெற்றார். தேவர்களினால் தோற்றுவிக்கப்பட்டமையால் இவ்விநாயகர் தேவர்களின் ஆத்மார்த்த பூஜா மூர்த்தியாக இருந்து அருள்பாலித்து வருகிறார்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொள்ள திருமணத்தடைகள் நீங்கும். முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சிறுவனாக வந்த சிவன்: தேவேந்திரன் அகல்யையால் ஏற்பட்ட சாபத்தை போக்கி கொள்ளும் பொருட்டு, விநாயகரை கையில் எடுத்துக் கொண்டு, பூலோகத்தில் உள்ள சிவ தலங்களை தரிசனம் செய்துவிட்டு இத்தலத்திற்கு வந்தடைந்தார். அப்போது சுவேத விநாயகர் இந்த தலத்திலேயே தங்க விருப்பம் கொண்டு, சிவனை வேண்டினார். எனவே, இத்தலத்து சிவன், ஒரு சிறுவன் வடிவில் இந்திரன் முன்பு வந்தார். இந்திரன், சிறுவனிடம் விநாயகர் இருந்த பெட்டியை சிறுவன் கையில் கொடுத்து, நான் சிவபெருமானை வழிபட்டு வரும்வரை கையில் வைத்திரு என்று கூறி சென்றார். சிறுவனாக வந்த சிவன், இந்திரன் சென்ற பிறகு விநாயகரை தரையில் வைத்துவிட்டு மறைந்தார். இந்திரன் சிவனை வணங்கிவிட்டு திரும்பி வந்தார். சிறுவனை காணாது தேடி அலைந்த அவன், பலி பீடத்தின் அடியில் விநாயகர் இருந்ததைக் கண்டு, கையில் எடுக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. எனவே, விநாயகர் இருக்குமிடத்தை சுற்றிலும், விஸ்வகர்மாவை கொண்டு, இந்திர ரதம் செய்து இந்திரலோகம் இழுத்து செல்ல முயன்றான். அப்போது, விநாயகர் அசரீரியாக தோன்றி, நீ வருடம் ஒரு முறை சதுர்த்தியன்று வந்து எம்மை பூஜை செய்தால், வருடம் முழுவதும் பூஜை செய்த பயனை அடைவாய் என்று கூறினார். இந்திரனும் மனம் மகிழ்ந்து அதன்படி வருடம் தோறும் ஆவணி மாதம் விநாயக சதுர்த்தியன்று இங்கு வந்து விநாயகரை பூஜை செய்து அருள் பெற்று செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. கற்பூர அபிஷேகம்: சுவேத விநாயகர் பாற்கடல் நுரையினால் செய்யப்பட்டவர் என்பதால் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. வஸ்திரம், சந்தனம், புஷ்பம் ஆகியவைகளும் சாத்தப்படுவதில்லை. அபிஷேகத்திற்கு பதிலாக பச்சைக் கற்பூரம் மட்டுமே பொடி செய்து, திருமேனியில் கைபடாமல் தூவப்பட்டு வருகிறது. சிறப்பம்சம்: முருகனுக்கு ஆறு படை வீடு இருப்பதுபோல விநாயகருக்கு இந்தியா முழுவதும் 10 படை வீடுகள் உள்ளன. அதில் இத்தலமும் ஒரு படை வீடு என்பது சிறப்பு. இங்குள்ள விநாயகர் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறார் என்பது மிகவும் விசேஷம். விநாயகர் திருமண தலம்: மகாவிஷ்ணுவின் நேத்திர கமலங்களிலிருந்து தோன்றிய இந்திரதேவியாகிய கமலாம்பாளையும், பிரம்மாவின் வாக்கிலிருந்து தோன்றிய புத்தி தேவியாகிய வாணியையும் இத்தலத்தில் சுவேத விநாயகப் பெருமான் திருமணம் செய்துகொண்டார். எனவே திருமணம் தடை படுபவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் இங்குள்ள சுவேத விநாயகப் பெருமானை வழிபட்டால் தாங்கள் எண்ணிய எண்ணம் ஈடேறும் என்பது நம்பிக்கை. பொங்கிய காவேரி : மகாகணபதியின் திருவருட் கருணையினாலேயே அகஸ்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து வெளிப்பட்ட காவிரி அன்னை சோழ நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் செய்தி அறிந்த சோழ மன்னன் ஹரித்துவஜன் தனது பரிவாரங்களுடன் சென்று, காவிரி அன்னையை வழிபட்டு எதிர்கொண்டு அழைத்து வந்தான். சக்திவனம் எனப்படும் இத்தலத்திற்கு வரும்போது இங்குள்ள சிவனை காவிரி அன்னை வலம் வந்து வழிபட்டு ஈசான்ய பாகத்தில் உள்ள பிலத்துவாரத்தின் வழியாக வலம் சுழித்த வண்ணம் உட்புகுந்தாள். இதைக் கண்ட மன்னர், பலவித யுத்தி உபாயங்களை மேற்கொண்டும் பிலத்துவாரம் அடைபடாமல் போனது. உடனே அருகில் உள்ள கொட்டையூர் என்ற ஸ்தலத்தில் தவம் இயற்றி வந்த ஹேரண்ட மகரிஷி என்ற முனிவரிடம் சென்று மன்னன் முறையிட்டான்.இதைக் கேட்ட முனிவரும் திருவலஞ்சுழி வந்தடைந்து சிவனை வழிபட்டு பிலத்துவாரம் அடைபட்டு காவிரி மீண்டும் மேலெழுந்து ஓட வேண்டினார்.அப்போது சிவன் அசரீரியாக தோன்றி, சடையுடன் கூடிய முனிவரோ அல்லது முடியுடன் கூடிய மன்னரோ ஒருவர் இந்த பிலத்துவாரத்தினுள் புகுந்தாலொழிய காவிரி அடைபடாது என கூறினார். உடனே ஹேரண்ட மகரிஷி காவிரித்தாயை வணங்கி அதன் சீற்றத்தை குறைத்ததுடன், அப்படியே தன்னுள் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top