திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி :
திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் திருக்கோயில்,
புதுக்கோட்டை மாவட்டம் காளையபுரம்,
தமிழ்நாடு – 622005.
இறைவி:
முத்துமாரிஅம்மன்
அறிமுகம்:
முத்துமாரியம்மன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புதுக்கோட்டையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோகர்ணம் திருவப்பூரில் அமைந்துள்ளது. மூலவராகிய முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். கோவிலின் முன் மண்டபம் மற்றும் துவஜஸ்தம்பம், பலி பீடம் மற்றும் கருவறை உள்ளது. பிரகாரத்தில் மதுரை மீனாட்சியும், காஞ்சிபுரம் காமாட்சியும் காணப்படுகின்றனர். ஆடி (ஜூலை-ஆகஸ்ட்) வெள்ளிக்கிழமைகள் இக்கோயிலில் பிரசித்தி பெற்றவை.
புராண முக்கியத்துவம் :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், பூமியில் புதைந்துகிடந்த முத்து மாரியன்னை, பூசாரி ஒருவரின் அருள்வாக்கில் வெளிப்பட்டாள். அருள் வாக்கின்படி, அம்மனின் திருவருவை பூமியிலிருந்து தோண்டி எடுத்து பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில், புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்குச் சொந்தமானதாய் இருந்ததால், சமஸ்தானமாக பெரும்புகழோடு விளங்கியது. பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.
மன்னர், முத்துமாரி அம்மன் ஆலயம் வந்து, தனது மகனைக் காப்பாற்றித் தருமாறு மன்றாடினார். ஆனால், விதிப் பயன் காரணமாக அரசரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும் அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அம்பாளை அந்த இடத்தில இருந்த வேறு இடம்மாற்ற உத்தரவிட்டார். அரசரின் ஆணைப்படி, சுவாமி சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில், திருவப்பூர் மக்கள் சிலர் வழிமறித்துக் கெஞ்சி, அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். (அந்த இடம் தற்போது காட்டு மாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது). அன்று இரவு, அரசரின் கனவில் முத்துமாரி தோன்றி, உனது மகன் விதிவசத்தால் உன்னை விட்டுப் பிரிந்தாலும், அவனை எனது மகனாக ஏற்றுக் கொண்டேன் எனக் கூறினாள். தவறை உணர்ந்த மன்னர், அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டார்.
நம்பிக்கைகள்:
குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலைவாய்ப்புக் கேட்டு வருவோர், குடும்பப் பிரச்சனைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் கைகூட, தடைப்பட்ட திருமணம் நடந்தேற வேண்டுவோர் என அனைவரது குறைகளையும் நீக்கி அருள்மாரி பொழிகின்றாள் அன்னை முத்துமாரி. அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட, அம்பிகையில் அருளால் அம்மைநோய் விரைவில் குணமடையும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயில் 600 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. திருக்கோகர்ணம் பிரகதாம்பாள்-கோகர்ணேஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப்பட்டு புதுக்கோட்டை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் இயங்கி வந்த இக்கோயில், தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வருகின்றது
திருவிழாக்கள்:
ஆடி (ஜூலை-ஆகஸ்ட்) வெள்ளிக்கிழமைகள் இக்கோயிலில் பிரசித்தி பெற்றவை.
காலம்
600 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி