Sunday Nov 24, 2024

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி பெருமாள் திருக்கோயில் – கேரளா

முகவரி

அருள்மீகு அனந்த பத்மநாபாப் பெருமாள் திருக்கோயில் – திருவனந்தபுரம், மேற்கு நாடா, கோட்டை, கிழக்கு கோட்டை, பழவங்காடி திருவனந்தபுரம் கேரளா – 695 001.

இறைவன்

இறைவன்: அனந்த பத்மநாபன் இறைவி: ஸ்ரீ ஹரி லக்ஷ்மி

அறிமுகம்

பெருமாளின் மங்களாசனம் பெற்ற 108 திவ்யதேசங்களில் இத்தலம் 76 வது தலமாகும். மலைநாட்டு திவ்யதேசமாகும் . நம்பெருமாள் இத்தலத்தில் 12,000 சாளக்ராமங்களால் உருவான 18 அடி நீள அற்புத மகா அதிசயம்.இந்தக் கோவில் 100 அடி உயரத்துடன் ஏழு-வரிசைகள் கொண்ட கோபுரம் கொண்டதாகும். இந்தக் கோவில் பத்ம தீர்த்தத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. இந்தக்கோவில் வளாகத்தில் காணப்படும் தாழ்வாரம், கருங்கல்லில் செதுக்கிய தூண்கள் கொண்டதாகும். கோயில் உள்ளே செல்லும் போது கோயிலின் தாழ்வாரங்கள் மிக பெரியதாக இரண்டு புறங்களிலும் உள்ள தூண்கள் அதில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் ஆகியவை பார்ப்பதற்கே கோடி கண்கள் வேண்டும் . கொடிமரத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூண்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது . மற்றும் கோயில் உள் பிரகாரத்தில் தாழ்வாரத்தில் ஒருபுறத்தில் கடல் மணலால் ஆன பகுதி நாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது . கோயிலின் தென்புறம் பிரகாரத்தில் யோக ந்ருஸிம்ஹனும், ஸந்நிதிக்கு முன்னால் ஹனுமானும் ஸந்நிதிக்குப் பின்னால் கிருஷ்ணனும் காட்சி தருகின்றனர். ஹனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை. லக்ஷ்மி வராஹர் கோயிலும், ஸ்ரீநிவாஸர் கோயிலும் தெற்குப் பக்கத்தில் உள்ளன.சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் ஸ்ரீ பத்மநாபர் கோவில் மற்றும் அதன் சொத்துக்களை எட்டுவீட்டில் பிள்ளமார் என்ற சக்தி வாய்ந்த ஜமீன்தார்கள் ஆண்டுவந்தனர், மேலும் எட்டர யோகம் என்ற அமைப்பு அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது. பிறகு மார்த்தாண்ட வர்மன், பிள்ளமார்கள் மற்றும் அவர்களுடைய வம்சத்து “குஞ்சு தம்பிகளை” போரில் தோற்கடித்து, கோவிலைக் கைப்பற்றினார். முந்தைய திருவாங்கூர் சமஸ்தான த்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை கடைசியாக புதுப்பித்தார்.ஒரு முறை 1686-ல், கோவில் வளாகத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அந்த இலுப்பை மரத்தால் ஆன விக்ரக மூர்த்தியின் ஒரு பாகம் எரிந்து அழிந்தது, அப்பொழுது, இறைவன் அந்நாளில் இராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்த அரசரிடம் சிறிது கோபமாக இருந்ததை அந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12008 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” பிரதிஷ்டை செய்யப்பட்டது.

புராண முக்கியத்துவம்

வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ! (சின்ன கண்ணா) தொந்தரவு செய்யாமல் இரு’ எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “”பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும்,” எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், “இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன்,” என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக’ இருக்கவில்லை. ஒரு இலுப்பை மரத்தின் அடியில் பூமாதேவி மற்றும் லட்சுமியுடன், அனந்தன் என்ற பாம்பு மீது பரந்தாமன் பள்ளி கொண்டிருப்பதை கண்ட சாமியார், மகிழ்ச்சியுடன் அவர்களை வணங்கினார். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

நம்பிக்கைகள்

திருமண விஷயத்தில் தடைகளை நீக்க பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள் குழந்தை வரம் மற்றும் நல்ல கல்விக்கு.

சிறப்பு அம்சங்கள்

ஆரம்பத்தில் இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட மூல விக்ரகம் 1686-ல் தீப்பிடித்தது. அதன் பின்னர் கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 12 ஆயிரம் சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து புதிய சிலை உருவாக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ சிலையாகும். அதையே இப்போது தரிசனம் செய்கிறோம். அனந்தன் மீது பள்ளி கொண்ட அனந்த பத்மநாப சுவாமி விக்ரகம் 18 அடி நீளம் உடையது. உடல் முழுவதும் தங்கத்தகட்டால் பொதியப்பட்டிருக்கிறது. ராஜாவின் தானப் பட்டயம் :- 1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா இக்கோயிலின் இறைவனான பத்மநாபஸ்வாமிக்கு தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.இதனால் பத்மநாபஸ்வாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. கோயிலின் ரகசிய அறைகள் : இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

பங்குனி , ஐப்பசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 41 நாட்கள் நடக்கும் முறை ஜபத்தின் போது லட்சதீபம் நடக்கும்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பழவங்காடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவனந்தபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top