Wednesday Dec 18, 2024

திருவண்ணாமலை கோவில் எதிரே வணிக வளாகம் கட்டுவதா?: பக்தர்கள் கோபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை வழிபட முடியாத வகையில், வணிக வளாகம் கட்டும் பணிக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பக்தர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கோவில் நிர்வாகத்தை கண்டித்து போராடி வருகின்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே இருக்கும், 11 கால் மண்படத்தை ஒட்டிய பகுதியில், இரண்டு அடுக்குகளில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

கோவிலில் நுழைவாயிலாக அமைந்துள்ள ராஜகோபுரம், 11 நிலைகளுடன், 217 அடி உயரமுடையது. ‘கோபுர தரிசனம், கோடி புண்ணியம்’ என்பதால், 20 கி.மீ., துாரம் வரை தெரியும் இந்த ராஜகோபுரத்தை, வெகு துாரத்தில் இருந்தே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கோவிலினுள் செல்ல முடியாத பல லட்சம் பக்தர்கள், தொலைவில் இருந்தே ராஜகோபுரத்தை பார்த்து தரிசனம் செய்து கிரிவலம் செல்வர்.

இவ்வளவு சிறப்பு மிக்க ராஜகோபுரம் எதிரே, ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றி விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 40 அடி வரையிலான உயரத்திற்கு, அடுக்குமாடி வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த வணிக வளாகம் முழுதும் கட்டி முடிக்கப்பட்டால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது சம்பந்தமாக எந்த விபரங்களையும், கோவில் நிர்வாகம் வெளியிடவில்லை.

இதுகுறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் கூறியதாவது:

திருவண்ணாமலை கோவில் வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக, கோவிலின் மூலதன நிதியில் இருந்து, 6.4 கோடி ரூபாயை எடுத்துள்ளனர். கோவில் உபரி நிதியை பொது காரியங்களுக்கு செலவிட வேண்டும் என்றாலே, ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன.

அதேநேரத்தில், கோவில் மூலதன நிதியில், எந்த காரியத்துக்காகவும் கைவைக்க, யாருக்கும் அனுமதி கிடையாது; இது தான் சட்டம். ஹிந்து அறநிலைய துறை விதிகளும் இதையே தெரிவிக்கின்றன.

கடந்த, 2002ல் தொல்பொருள் ஆய்வு துறை, திருவண்ணாமலை கோவிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இருந்தது. அப்படி அறிவித்தால், கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், தொல்லியல் துறை அனுமதியின்றி துரும்பையும் அசைக்க முடியாது.

எனவே,, ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் சிலர், மத்திய அரசின்முயற்சிக்கு எதிராக உள்ளூர்மக்களை துாண்டி விட்டனர். அதனால், மத்திய அரசு அதிகாரிகள், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் முயற்சியை கிடப்பில் போட்டு விட்டனர்.

அன்று திருவண்ணாமலை கோவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தால், இன்றைய விதிமீறல்கள் எதுவும் நடக்காது.

ஹிந்து அறநிலைய துறை சட்டம் பிரிவு – 77, ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்கிறது.

அதாவது, கோவில் வளாகத்துக்குள், அறங்காவலர்கள் முடிவு எடுத்து யாருக்காவது ஒப்பந்த அடிப்படையில் இடம் கொடுத்திருந்தால், கோவில் நன்மை, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு கருதி, அந்த ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் ரத்து செய்ய, அறநிலைய துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி பார்த்தால், கோவில் இடம் கோவிலுக்கு தான் சொந்தம்; கோவில் பணிகள் தவிர, வேறு எந்த பணிகளும் அங்கு நடக்கக் கூடாது. கோவில் வளாகத்துக்குள்வணிக வளாகம் கட்டுவது என்பது, அந்த சட்ட பிரிவுக்கு எதிரானது. கோவில் இடத்தை தனியாருக்கு கொடுக்க ஒப்பந்தம் போட்டிருந்தாலும், சட்டப்பிரிவு – 77ன் கீழ், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்.

கடந்த, 2013 ஜூன் 29ல், ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 100 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருந்தால், அதன் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். அந்த கோவில்களில் பராமரிப்பு பணியை மட்டுமே மேற்கொள்ள முடியும். தவிர, புதிய கட்டுமானங்களை ஏற்படுத்த முடியாது.

அந்த அரசாணையையும் மீறியே, திருவண்ணாமலையில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. மகாபலிபுரத்தின் புராதனம் சிதைக்கப்படுவது தொடர்பாக, 2017ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

அப்போது, தமிழகத்தின் பழமையான பழவேற்காடு, திருவிடந்தை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, தாராபுரம் உள்ளிட்ட 10 கோவில்களின் நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி, ‘யுனெஸ்கோ’ அமைப்பை நீதிபதிகள் கேட்டனர்.

உடன், யுனெஸ்கோ குழுவினர் திருவண்ணாமலை கோவிலில் ஆய்வு நடத்தி, 28 பக்க அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதில், ‘திருவண்ணாமலை கோவில் வளாகத்துக்குள், ஏராளமான கட்டுமான பணிகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அங்குள்ள நிர்வாக தரப்பினருக்கு புராதன சின்னங்களை பாதுகாக்கும், எந்த அடிப்படை அறிவும் இல்லை. தொல்லியல் துறையின் முழுமையான ஆய்வுக்கு, திருவண்ணாமலை கோவில் உட்படுத்தப்பட வேண்டும்’ என்று, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

யுனெஸ்கோ அறிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், 2021ல் அளித்த தீர்ப்பில், ‘திருவண்ணாமலை கோவிலில், மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். கோவில் புராதனம் காக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.

ஆனால், மத்திய தொல்லியல் துறை, இதுவரை எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. தற்போது நடக்கும் கட்டுமான பணியை இனியும் தொடரக் கூடாது.

கோவிலின் புனிதம் மற்றும் புராதனம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், திருவண்ணாமலை கோவிலை தேசிய பாரம்பரிய சின்னமாக, மத்திய தொல்பொருள் துறை அறிவித்து, மொத்த கோவிலையும் தன் பராமரிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

திருவண்ணாமலையில் நடந்து வரும் வணிக வளாக கட்டுமான பணி தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


திருவண்ணாமலை கோவில் கிழக்கு ராஜகோபுரத்துக்கு எதிரே, ஏற்கனவே கடைகள் இருந்தன. அந்த கடைகள் எழில் இல்லாமல் இருந்ததால், ராஜகோபுரம் எழில் குன்றி காணப்பட்டது. அதை சீர் செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்தே, கிழக்கு ராஜகோபுரம் எதிரில் கடைகள் கட்டுவதற்காக, கோவில் நிதியில் இருந்து பணம் எடுத்து, வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டது. சட்டப்படியே எல்லாம் நடந்துள்ளது.

சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டால், கிழக்கு ராஜகோபுரம் பகுதியே சிறப்புறும்.

– ஜோதி,

இணை ஆணையர்,

அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை.

– நமது நிருபர் –

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top