திருமாலிருஞ்சோலை கள்ளழகர் (அழகர்) திருக்கோயில், மதுரை
முகவரி
அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் :- திருமாலிருஞ்சோலை (எ) அழகர் மலை.அஞ்சல், மதுரை – 625 301.
இறைவன்
இறைவன்: அழகர், கள்ளழகர், இறைவி: கல்யாண சுந்தரவல்லி தாயார்
அறிமுகம்
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தலம் சோலை மலை, திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம் என்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கருவறையில் பெருமாள் ஸ்ரீபரமசுவாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர், அல்லது சுந்தரராசப் பெருமாள் எனப்படுகிறார் பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோரின் திருப்பணிகளை இக்கோயில் கொண்டுள்ளது. கோலம் : நின்ற திருக்கோலம் திசை : கிழக்கு விமானம் : சோம சுந்தர விமானம் தீர்த்தம் : நூபுரகங்கை தீர்த்தம்
புராண முக்கியத்துவம்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழகிய சோலைகளாகவே காட்சி கொடுத்து மிளிரும் அற்புத மலை மீது திவ்யநாத மூர்த்தியாம் திருமால் வந்து குடிகொண்டுள்ளமையால் இத்தலத்திற்கு “திருமாலிருஞ்சோலை” என்பது பெயர்.இத்தலத்தைப் பபற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம், ஆத்ரேய புராணம் ஆகியவற்றில் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தர்மதேவனுக்காக இறைவன் நாராயணன் அழகிய திருமேனியாகக் காட்சி தந்து அருளியதால் “அழகர்” என்ற திருநாமம் பெற்றார். இவர் வாழும் மலையும் “அழகர் மலை” என்றே பெயர் பெற்று விளங்குகிறது. சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாள் நாச்சியார் இத்தல இறைவனின் அழகில் மயங்கியதால் அழகர் என்ற திருநாமம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக் கூடியவர் பெரும்புதூர் மாமுனி உடையவர் “இராமானுஜர்” ஆவார். வைணவத்தை மேலும் தமிழகத்தில் ஆழமாகப் பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்கள் மீதும் பெரும்பக்தி கொண்டவர். “திருப்பாவை ஜீயர்” என்றே இராமானுஜர் போற்றப்படுகிறார். ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த காலத்தில் அவளது ஆசையை திருமாலிருஞ்சோலை இறைவன் மீது பாடிய பாசுரத்தில் பதிவு செய்துள்ளார்.ஆண்டாள் இந்த திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து அரங்கனை மணம் செய்தால் நூறு அண்டா அக்காரஅடிசில் செய்வதாக வேண்டுதல் வைத்தாளாம். வேண்டுதல் நிறைவேற்றும் முன் ஆண்டாள் ஸ்ரீரங்கம் அரங்கனிடத்தில் ஐக்கியமாகிவிட்டாள். அதனால் ஆண்டாள் நாச்சியாரால் அக்காரஅடிசில் செய்து, வேண்டுதலை நிறைவேற்ற இயலவில்லை. இறைவனிடத்தில் கோரிக்கை வைத்து வேண்டிக் கொண்டால், பிரார்த்தனை நிறைவேறியதும் நாம் சொன்ன வேண்டுதலைச் செய்து விட வேண்டும். நம்மால் செய்ய இயலவில்லை என்றாலும், நம்மைச் சார்ந்தவாராவது நமக்குப்பதில் செய்துவிட வேண்டும் அல்லவா!!! சரி, ஆண்டாள் இறைவனிடத்தில் வைத்த வேண்டுதலை யார் நிறைவேற்றியிருப்பார்கள்???? அதை அறியலாமா?? பிற்காலத்தில் வந்த இராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோவில்) ஆண்டாளின் பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப, நூறு தடா (தடா என்றால் அண்டா) முழுக்க அக்காரவடிசலும் (சர்க்கரைப் பொங்கல்), வெண்ணையும் சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர் நிறைவேற்றினார். வாருங்கள் என் அண்ணா!!! :- இராமானுஜர் ஒவ்வொரு தலமாக இறைவனை சேவித்துக் கொண்டு, பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து இறைவனை சேவிக்க வந்தார். இராமானுஜர் கோவிலினுள் நுழைந்த பொழுது, “வாரும் என் அண்ணலே” என்ற அழகிய பெண் குரல் ஒன்று இராமானுஜரை நோக்கி அழைத்தது. இராமானுஜர் சுற்றும், முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து ஆண்டாள் அசைந்து அசைந்து, “வாருங்கள் என் அண்ணா” என்று அழைத்தாள். பக்தியுடன் பவசமானார் இராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் பிறந்தவர் இராமானுஜர். அப்படியிருக்க ஏன் ஆண்டாள் நாச்சியார் இராமானுஜரை அண்ணன் என்று அழைக்க வேண்டும்???? இக்கேள்விக்கு ஆண்டாள் நாச்சியாரே பதிலும் கொடுக்கிறாள், கேளுங்கள்!!! எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை என் வேண்டுதலை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் என்ற ஸ்தானத்தில் நிறைவேற்றியவர் தாங்கள்தான். ஆகையாலே நான் இராமானுஜராகிய தங்களை “அண்ணா” என்று அழைக்கிறேன் என்றாள். இராமானுஜர் பூரித்து போய் நின்றார். பின்ன இறைவனின் பதியாகிய ஆண்டாள் நாச்சியாரே தன்னை அண்ணா என்று அழைக்கும் போது அவரால் பக்திப் பரவசப்படாமல், பூரித்துப் போகாமல் எப்படி இருக்க முடியும்!!. இந்த காரணத்திலேயே அழகர் கோவிலில் ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இதனாலேயே நம் முன்னோர்கள் பாடியுள்ளார்கள்.
நம்பிக்கைகள்
காட்சிகண்டவர்கள் : மலையத்வஜபாண்டியன், தர்மதேவதை
சிறப்பு அம்சங்கள்
ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருளும் திருத்தலம். ஆறு ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலம். அழகர் மலைக்கு மேல் முருகப் பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை அமைந்திருக்கும் அற்புதத் தலம். அதன் மேல் நூபுரகங்கை தீர்த்தம் அமைந்திருக்கும் அற்புதத்தலம். இந்த தீர்த்தம் எங்கே இருந்து வருகிறது, எங்கு சென்று அடைகிறது என்பதை இன்றும் அறிய முடியவில்லை.
திருவிழாக்கள்
சித்ரா பௌர்ணமி நன்னாளில் மதுரையை ஆளுகின்ற மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும். இதில் தனது சகோதரியான மீனாட்சியின் திருமணத்தைக் காண அழகர் பெருமான் திருமாலிருஞ்சோலை தலத்திலிருந்து அலங்காநல்லூர், தேனூர் வழியாக மதுரை வந்து வைகையில் இறங்கி, பிறகு வண்டியூரில் தங்கி மீண்டும் மலையை அடைவது வழக்கம். ஆற்றில் இறங்கும் முன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடித்தந்த மாலையை அணிந்து கொண்டு சேவை சாதிக்கிறார். சித்திரைத் திருவிழா மதுரையிலும், திருமாலிருஞ்சோலை தலத்திலும் ஒரே சமயத்திலும் கொண்டாடுவது வழக்கம். மீனாட்சி அம்மன் கோவில் வைபவம், அழகர் திருவிழா இரண்டும் ஒரே சமயத்தில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமாலிருஞ்சோலை (எ) அழகர் மலை.
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை