Wednesday Jan 15, 2025

திருமங்கலம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் (விக்கிரம சோழீசுவரர் ஆலயம்), மயிலாடுதுறை

முகவரி

திருமங்கலம் பூலோகநாத சுவாமி திருக்கோவில் (விக்கிரம சோழீசுவரர் ஆலயம்), திருமங்கலம், மயிலாடுதுறை மாவட்டம் – 609811.

இறைவன்

இறைவன்: பூலோகநாத சுவாமி / விக்கிரம சோழீசுவரர் இறைவி: பூலோகநாயகி

அறிமுகம்

மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம்- திருமணஞ்சேரி இடையே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலம் திருத்தலம் இருக்கிறது. இவ்வூரின் அருகாமையில் புகழ்பெற்ற திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி), திருவேள்விக்குடி, முருகமங்கலம் போன்ற கோவில்களும் அமைந்துள்ளன. காவிரி ஆறு பாய்ந்து வளப்படுத்தும் தஞ்சைத் தரணியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று திருமங்கலம் விக்கிரம சோழீசுவரர் ஆலயம். தற்போது இந்த ஆலயம் ‘பூலோகநாத சுவாமி திருக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. கல் வெட்டுகளில் ‘விக்கிரம சோழீசுவரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் ‘பூலோகநாத சுவாமி’, லிங்கத் திருமேனியாக உள்ளார். கோவிலின் இடதுபுறம் அம்மன் சன்னிதி தனிக்கோவிலாக உள்ளது.

புராண முக்கியத்துவம்

திருமணஞ்சேரியில் ஈசனுக்கும், தேவிக்கும் திருமணம் முடிகிறது. இந்த திருமணக் காட்சியை தரிசிக்க, தேவலோகமே திரண்டு விட்டது. எங்கு பார்த்தாலும் தேவர்கள்தான். பூலோகவாசிகளான, சாதாரண மக்களால் இறைவனின் திரு மணக் காட்சியைக் காண முடியவில்லை. அவர்களின் வருத்தத்தை புரிந்துகொண்ட அம்மையும், அப்பனும் ‘சப்தபதி’ என்ற சடங்கை நிறைவேற்றுவதுபோல், ஏழு அடி எடுத்து வைத்தனர். அப்படி அவர் ஏழு அடியில் வந்து நின்ற இடம் ‘திருமங்கலம்’ திருத் தலம். இங்குதான் இறைவனின் திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டது. மகாலட்சுமியே, திருமாங்கல்யத்திற்கான பொன்னை குபேரனிடம் கொடுத்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும். ஈசனும், அம்பாளும் மக்களுக்கு அருள்பாலிக்க இங்கு வந்த அதே தருணத்தில், வசிஷ்டர்- அருந்ததி முதலானோரும் இங்கு வந்தனர். அவர்கள் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்ய தலைப்பட்டனர். அதனை அவர்கள் செவ்வனே நடத்தி பூர்த்தி செய்யும் வேளையில், அந்த வேள்வித் தீயில் இருந்து, சிவபெருமான் ‘காலசம்ஹார மூர்த்தி’யாக காட்சி தந்தார். அதுவும் எமனை காலால் உதைத்து, சூலத்தால் குத்துவதற்கு எத்தனித்தபடியும், மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை தழுவியிருக்கும் நிலையிலும் அந்தக் காட்சி இருந்தது. வசிஷ்டர் – அருந்ததி தம்பதியர் மற்றும் பூலோகவாசிகள் அனைவரும் இந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள். அவர்களின் வாய், சிவநாமத்தை உச்சரித்தபடி இருந்தது. இதன் காரணமாக இந்த ஆலயத்தில் காலசம்ஹார மூர்த்தி சன்னிதியில் வைத்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வுகள், வேள்விகளோடு நடத்தப்படுகிறது.

நம்பிக்கைகள்

இறைவனின் திருமணத்திற்கு இங்குதான் திருமாங்கல்யம் செய்யப்பட்டது. மகாலட்சுமியே, திருமாங்கல்யத்திற்கான பொன்னை குபேரனிடம் கொடுத்ததாக ஐதீகம். எனவே இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால், திருமணம் கைகூடும். மாங்கல்ய தோஷம் இருந்தால் அகலும். சிவராத்திரி அன்று, முதல் ஜாம பூஜையை இந்த திருமங்கல பூலோகநாதர் சன்னிதியிலும், இரண்டாம் ஜாம பூஜையை அருகிலுள்ள மாங்குடியில் சிவலோகநாதர் ஆலயத்திலும், மூன்றாம் ஜாம பூஜையை அதற்கும் அருகிலுள்ளபொய்கைகுடி நாகநாதர் ஆலயத்திலும், நான்காம் ஜாம பூஜையை மீண்டும் இதே திருமங்கலம் பூலோக நாயகி சமேத பூலோகநாதர் சன்னிதியிலும் தரிசித்து வந்தால், மூவுலகிலும் உள்ள அனைத்து சிவலிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

பூலோகவாசிகளுக்கு, ஈசன் தனது திரு மணக் கோலத்தை தரிசிக்க அருள்புரிந்த தலம். திருமணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய குபேரன், பொன் பெற்று மாங்கல்யம் செய்த தலம். வசிஷ்டர் – அருந்ததி தம்பதியர் ‘மிருத்யுஞ்ஜெய ஹோமம்’ செய்தபோது, பிரயோக கால சம்ஹார மூர்த்தியாக, எமன், மார்க்கண்டேயர் சகிதம் ஹோமத் தீயில் இருந்து ஈசன் வெளிவந்த தலம் என பல்வேறு சிறப்பு களைக் கொண்டதாக திருமங்கலம் திருத்தலம் விளங்குகிறது. இத்தலத்து முருகன் கையில் ஜெப மாலையுடன், மயில்மேல் அமர்ந்தபடி, ‘பிரம்ம சாஸ்தா’ நிலையில் காட்சி தருகிறார். இத் தலத்து நந்தியம் பெருமான் தனது வலது முன் காலை தூக்கி வைத்து, புறப்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது போல், எம்பெருமான் முன் அமர்ந்த நிலையில் உள்ளதும் மிகவும் விசேஷமானது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top