Thursday Dec 26, 2024

திருப்பாடகம் பாண்டவதூதர் திருக்கோயில் – காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம் காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம் போன் +91- 44-2723 1899

இறைவன்

இறைவன்: பாண்டவதூதர் இறைவி: சத்யபாமா, ருக்மணி

அறிமுகம்

திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பம்சமாகும். கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால், இத்தல இறைவன் “பாண்டவ தூதப்பெருமாள் என” அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் இவரை “தூதஹரி” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புராண முக்கியத்துவம்

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் தூது சென்றவர் பகவான் கிருஷ்ணர். இவர் தான் பாண்டவர்களின் மிகப்பெரிய பலம். இவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன். எனவே கண்ணன் தூது சென்ற போது அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, பூமியில் ஒரு பெரிய நிலவறையை உண்டாக்கி அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க வந்த மல்லர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார். பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையை கேட்க வந்தார். அப்போது ராஜா, கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விசுவரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள் என ரிஷியிடம் வேண்டினார். ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தல தீர்த்தத்தில் அமர்ந்து தவம் செய்த ஜனமேஜய மன்னனுக்காக பெருமாள், தன் பாரத கால தூது கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினார்.

நம்பிக்கைகள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள கல்வெட்டுக்களில் தூதஹரி என குறிக்கப்படுகிறார். திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது பெரிய விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். இத்தலத்தில் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆசாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். மணவாள மாமுனிகள் இங்கு எழுந்தருளியுள்ளார். ரோகிணி நட்சத்திரம்: ரோகிணி தேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில், ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்தார். ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம்.

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப்பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் நடக்கிறது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்பாடகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top