திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில், சிவகங்கை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2017-09-11-2-1.jpg)
முகவரி :
அருள்மிகு திருநோக்கிய அழகிய நாதர் திருக்கோயில்,
திருப்பாச்சேத்தி,
சிவகங்கை மாவட்டம் – 630610.
போன்: +91 4574266 303, 266 495
இறைவன்:
திருநோக்கிய அழகிய நாதர்
இறைவி:
மருநோக்கும் பூங்குழலி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருநோக்கிய அழகியநாதர் கோயில் உள்ளது. மூலவர் திருநோக்கிய அழகியநாதர் என்றும் தாயார் மருநோக்கும் பூங்குழலி என்றும் அழைக்கப்படுகிறார். தல விருட்சம் என்பது பாரிஜாதம். தீர்த்தம் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
சிவாலயம் என்றாலே அர்ச்சனைக்கு வில்வம் தான். இக்கோயிலில் சிவனுக்கு சோமவாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். மரகதத்தால் ஆன லிங்கம் இங்கு அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
சிவன் நெற்றிக்கண் கொண்ட கோபக்காரர். மன்மதன் ஒரு நல்ல காரியத்திற்காக சிவனை எழுப்பப்போக, அவனையே எரித்து சாம்பலாக்கி விட்டவர். இவர் அடிக்கடி கோபப்பட்டால் உலகம் தாங்காது என்பதால், பிரம்மா சிவனின் கோபத்தை அனலாக திரட்டி கடலுக்குள் சென்று புகுத்தி விட்டார். அந்த கோப அனல் சிறு குழந்தையாக ஜலத்தில் பிறந்தது. பிரமன் அந்த குழந்தைக்கு ஜலந்திரன் என பெயரிட்டார்.
ஜலந்திரன் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் மிகவும் தொந்தரவு கொடுத்தான். இதை தேவர்கள் திருமாலிடம் தெரிவித்தனர். இவனை அழிக்க வேண்டுமானால் இவனது மனைவி பிருந்தையின் பதி விரதத்தை முதலில் அழிக்க வேண்டும் என திருமால் உணர்ந்தார். (பிருந்தை என்றால் துளசி என்று பொருள்). திருமாலே ஜலந்திரன் உருவெடுத்து பிருந்தையிடம் சென்றார். வந்திருப்பது திருமால் என்பதையும், தனது பதி விரதத்தை சோதிக்க அவர் வந்திருப்பதையும் அறிந்த பிருந்தை தீயில் புகுந்து உயிரை விட்டாள். பிருந்தை இறந்தவுடனேயே ஜலந்திரன் தன் வலிமையை இழந்து சிவனிடம் தோற்று போனான்.
இதனை உணர்ந்த சிவன் பூமியில் ஒரு வட்டத்தை வரைந்து அதை ஜலந்திரனிடம் எடுக்க கூறினார். வலிமையில்லாத ஜலந்திரன் அந்த வட்டத்தை தூக்கிய போது அது மாபெரும் சக்கரமாக மாறி அழித்து விட்டது. இதன் பின் பிருந்தையின் சாம்பலில் கலந்தார் திருமால். இதனால் வைகுண்டம் இருண்டது. திருமகள் வருந்தினாள்.
இதனை அறிந்த பார்வதி, மகாலட்சுமியிடம், “பூமியில் திருப்பாச்சேத்தி எனப்படும் உன்னதபுரியில் தங்கி பாரிஜாத வனத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் புற்றிடங் கொண்டாரை சிவ தீர்த்தத்தால் வழிபட்டால் உன் கணவனை அடையலாம்,” என்றாள். திருமகளும் திருப்பாசேத்தியில் ஒரு மண்டலம் தங்கியிருந்து அப்படியே செய்ய சிவன் மகிழ்ந்து திருமகளுக்கும் திருமாலுக்கும் காட்சி தந்தார். பின் இருவரும் அருகிலுள்ள வேகவதி (வைகை) ஆற்றுக்கு சென்று நீராடி சிவனை பூஜை செய்து வழிபட்டனர்.
சிவன் சில விதைகளை திருமாலிடம் கொடுத்து பிருந்தையின் சாம்பலில் தூவ சொல்கிறார். அதன்படியே செய்ய அதிலிருந்து துளசி தோன்றியது. திருமால் அந்த துளசியை எடுத்து சிவனை அர்ச்சித்து விட்டு மீதியை மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொண்டார். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒரு சோமவார நாளில் தான். எனவே இன்றைக்கும் இந்த சிவாலயத்தில் சோமவாரத்தில் சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
நம்பிக்கைகள்:
திருமணமாகி கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அழகிய நாதரை வழிபட்டால் போதும். பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். நளமகாராஜன் இத்தல இறைவனை வழிபட்டு பிரிந்த மனைவி, குழந்தையை அடைந்தான். மகாலட்சுமியே வழிபட்ட தலம் ஆதலால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணம் கைகூடுகிறது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், சனி தோஷம் நிவர்த்தி, கலி தோஷ நிவர்த்தி, பிரம்மகத்தி தோஷ நிவர்த்தி வேண்டுபவர்களும் இத்தலம் வந்து தரிசனம் செய்ய சிறந்த பலன் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
இசைக்கு அதிபதியான நடராஜர் இங்கு ஒலிவடிவாக இசைக்கல் நடராஜராக இருக்கிறார். சிவாலயம் என்றாலே அர்ச்சனைக்கு வில்வம் தான். ஆனால், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியிலுள்ள மருநோக்கும் பூங்குழலி சமேத திருநோக்கிய அழகிய நாதர் கோயிலில் சிவனுக்கு சோம வாரத்தில் துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். மரகத்தால் ஆன லிங்கம் இங்கு அமைந்துள்ளது.
திருவிழாக்கள்:
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, சோமவாரம்.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-09-11-1-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-09-11-2.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-09-11-2-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-12-18.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/IMG_20180112_203816.jpg)
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பாச்சேத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை