Saturday Jan 18, 2025

திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) நெய்யாடியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில், தில்லைஸ்தானம் (திருநெய்த்தானம்) திருநெய்த்தானம் போஸ்ட் – 613 203. திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 4362-260 553.

இறைவன்

இறைவன்: நெய்யாடியப்பர், கிருதபுரீஸ்வரர், இறைவி: பாலாம்பிகை, இளமங்கையம்மை

அறிமுகம்

திருநெய்த்தானம் தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. சரஸ்வதி, காமதேனு, கௌதம முனிவர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 52வது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவன் நெய்யாடியப்பர். இறைவி பாலாம்பிகை.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது. தினமும் இப்படி செய்ததால் வெயிலுக்கும், மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. ஒரு நாள் மாடு மேய்க்கும் இடையன் மறைந்திருந்து பார்க்க பசு மறைந்து விட்டது. காமதேனுவே பசுவாக வந்து பால்சொரிந்த விஷயம் இவனுக்கு தெரியவில்லை. இடையன் கூறியதைக்கேட்ட மக்கள், நெய் இருந்த இடத்தை தோண்டி பார்த்த போது, அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் இந்த செய்தி பரவியது. சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார். இத்தலத்தில் நடந்த இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சிவனடியார் தினமும் இறைவனுக்கு நெய் விளக்கு போட்டு திரும்பும் போது, பிரகாரத்தில் உள்ள கீரைகளை பறித்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவர் சிவனிடம், “”இறைவா! நான் தினமும் உனக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கிறேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு அருள்புரிந்து காக்க வேண்டும்,”என வேண்டினார். இறைவன் அசரீரியாக,””நீ எனக்கு நெய் விளக்கு போட்டதற்கு கைமாறாக, கோயில் பிரகாரத்திலிருந்த கீரையை பறித்து சென்றாய். ஆகவே உனக்கு வேறு எப்படி அருள்புரிய முடியும்,”என்றார். இவ்வாறு தல வரலாறு கூறுகிறது. கிழக்குநோக்கிய ராஜகோபுரம். முதற்பிராகரம் விசாலமானது. அம்பாள் கோயில் தனிக்கோயிலாகத் தெற்கு நோக்கியுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.

நம்பிக்கைகள்

கோயில் சொத்து, அடுத்தவர் சொத்து ஆசைப்படாத எண்ணத்தை பெற இங்கு வேண்டுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத திருநாவுக்கரசர், இத்தல அம்மனின் அழகில் மயங்கி,”ஏந்திளமங்கையும் நீயும் நெய்த்தானத் திருந்ததுவே’ என பாடுகிறார். ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார். சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது. திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம். சுந்தர் வைப்புத்தலமாக பாடியுள்ளார். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்துள்ளார். ஒட்டக்கூத்தரும், புகழேந்தியாரும் பாடியுள்ளனர். காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். நர்த்தன கணபதி இங்கு சிறப்பு. தெட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவையார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top