Saturday Nov 16, 2024

திருநீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் – 609 203. மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 250 424, 250 142, 99436 68084.

இறைவன்

இறைவன்: சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் இறைவி: வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை

அறிமுகம்

சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் இறைவன் சோமநாதர், இறைவி வேயுறுதோளியம்மை. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. தலவிருட்டமாக மகிழம் மரமும், தீர்த்தமாக நவ தீர்த்தங்களும் உள்ளன. முனையடுவார் நாயனார் அவதாரத்தலமிது.

புராண முக்கியத்துவம்

ஒருசமயம் இந்திரன் பூலோகத்திற்கு வந்தபோது, காலை நேரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினான். அருகில் லிங்கத்தை தேடியும் கிடைக்கவில்லை. எனவே, காவிரி ஆற்றின் மணலை அள்ளி, லிங்கமாக பிடித்து பூஜை செய்தான். பின் சிவனது நடன தரிசனம் வேண்டி ஒரு பாடலை பாடினான். மகிழ்ந்த சிவன் அவனுக்கு நடனக்காட்சி அருளினார். எனவே இவருக்கு “கானநர்த்தன சங்கரன்’ என்றும் பெயர் உண்டு. “பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்’ என்பது இதன் பொருள். பூஜை முடிந்தபின்பு இந்திரன், லிங்கத்தை அப்படியே விட்டு சென்றுவிட்டான். பிற்காலத்தில் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. லிங்கத்தில் இந்திரனின் விரல் தடம் இருப்பதை இப்போதும் காணலாம்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள், செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

நண்டு துவார லிங்கம்: தன்மசுதன் எனும் அசுரன் முன்வினைப்பயனால் அடுத்த பிறவியில் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்டான். அவர், இத்தலத்தில் சிவனை வழிபட, விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி தன்மசுதன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி, சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவன் தனக்கும் ஐக்கியமாவதற்கு வசதியாக, லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். நண்டு சென்ற துளை தற்போதும் லிங்கத்தில் இருக்கிறது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு “கற்கடக பூஜை’ நடக்கிறது. ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. சூரியன் வழிபட்ட அம்பாள்: அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார். எனவே இவளுக்கு, “ஆதித்ய அபயவராதம்பிகை’ என்றும் பெயர் உண்டு. இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோயிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம். ஆலோசனை சொல்லும் விநாயகர்: எந்த செயலையும் செய்யும் முன்பு முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு, பின்பு பெரியவர்களின் ஆலோசனையையும், அனுபவங்களையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன்பின்பே செயலாற்றுகின்றனர்.

திருவிழாக்கள்

பங்குனியில் 10 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, திருவாதிரை.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநீடூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top