Saturday Jan 18, 2025

திருத்தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில் தேவூர் ,கீவளூர் வட்டம் , திருவாரூர். PH:9486278810

இறைவன்

இறைவன்: தேவபுரீஸ்வரர், (தேவகுருநாதர், கதலிவனேஸ்வரர், ஆதிதீட்சிரமுடையார்) இறைவி: மதுரபாஷினி

அறிமுகம்

தேவூர் தேவபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும். இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராசசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால் கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீஸ்வரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.

புராண முக்கியத்துவம்

ராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வ கலசங்களை எடுத்து சென்றான். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்கள் மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டான். அப்படி வழிபாடு செய்து வரும் போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். பூஜைக்கு மகிழ்ந்த ஈசன், குபேரனுக்கே அந்த செல்வ கலசங்கள் கிடைக்க செய்ததாக தல புராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்

சிறந்த குரு ஸ்தலமான இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்மந்தப்பட்ட தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் தேவபுரீஸ்வரரை வழிபாடு செய்வது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

தேவகுரு: வியாழ பகவான் (குரு) இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றதால் இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பாதத்தில் முயலகன் இல்லை. வியாழபகவானுக்கு குரு பட்டத்தை வழங்கியதால், இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “தேவகுரு’ என அழைக்கப்படுகிறார். சிவ விஷ்ணு துர்க்கை: பொதுவாக கோயில்களில் சிவதுர்க்கை, அல்லது விஷ்ணு துர்க்கை இருப்பாள். ஆனால் இத்தலத்தில் உள்ள துர்க்கை ஒரு கையில் சங்கும், மறுகையில் மான், மழுவும் வைத்து சிவ-விஷ்ணு துர்க்கையாக அருள்பாலிக்கிறாள். விருத்திராசுரனை கொன்ற பழி தீர, இந்திரன் முதலான தேவர்கள் வழிபட்டு அருள்பெற்றதால், இறைவன் தேவபுரீஸ்வரர் ஆனார். தலம் தேவூர் ஆனது. தேவர்கள் வழிபட்ட தலமாதலால், இங்குள்ள அனைத்து தெய்வங்களும் “தேவ’ என்ற அடைமொழியுடன் வணங்கப்படுகிறார்கள். இத்தலத்தின் தல விருட்சம் கல்லில் வளரும் அதிசய கல்வாழை மரமாகும். தேவர்கள் இறைவனை வழிபட்ட போது, தேவலோகத்தில் இருந்து வந்த இந்த வாழையும் இறைவனை வழிபட்டு தலவிருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்தது என்பர். திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் திங்கள் கிழமைகளில் இந்த வாழைக்கு பூஜை செய்கிறார்கள். பாண்டவர்களுக்கு துணை புரிந்த விராடன் தன் மகன் உத்திரனோடு இங்கு தங்கி இறைவனை வழிபாடு செய்துள்ளான். உலகில் 12 ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் கவுதம முனிவர் இத்தலத்தில் தங்கி, லிங்கம் அமைத்து வழிபாடு செய்து, பொன்னும் பொருளும் பெற்று மக்களின் பசிப்பிணி போக்கியதாக வரலாறு கூறுகிறது. மகத நாட்டு மன்னன் குலவர்த்தனன் பரிவேள்வியில் வெற்றிபெற, இங்குள்ள இறைவனை வழிபட்டு வேள்வியை நிறைவேற்றினான்.

திருவிழாக்கள்

வைகாசி பெருவிழா, மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்தேவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top