Wednesday Dec 18, 2024

திருத்திணை நகர் சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி. 608 801, கடலூர் மாவட்டம். போன்: +91-94434 34024

இறைவன்

இறைவன்: சிவக்கொழுந்தீஸ்வரர் இறைவி: பெரியநாயகி

அறிமுகம்

சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாலேயே இத்தலத்தின் தீர்த்ததிற்கு ஜாம்புவதடாகம் எனும் பெயர் வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

புராண முக்கியத்துவம்

இசைக்கும் திருமால், பிரம்மா: இத்தலத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். அவருக்கு கீழே திருமால் தனது ஆயுதமான சங்கை வாயில் வைத்து ஊதிய படியும், அருகில் பிரம்மா மத்தளம் வாசித்தபடியும் இருக்கிறார். திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. விஷ்ணு துர்க்கை கோஷ்டத்தில் இல்லாமல் தனிச்சன்னதியில் இருக்கிறாள். தெட்சிணாமூர்த்தி சிறப்பு: இத்தலத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் வித்தியாசமாக காட்சி தருகிறார். இவரது காலுக்கு கீழே முயலகனும் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியர்கள் உணவு படைத்தபோது, சிவன் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டாராம். இதன் அடிப்படையில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருக்கிறார் என்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. சிவன் நீர் இறைத்த கலம்: இங்கு சிவன், சுயம்புலிங்கமாக சதுரவடிவ பீடத்துடன் காட்சி தருகிறார். சிவன் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைத்த கலம் தற்போதும் இருக்கிறது. அம்பாள் ஒப்பிலாநாயகி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவளை “கருந்தடங்கன்னி’, “நீலதாம்பிகை’ என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். சுந்தரர் அம்பாளைக்குறித்தும் பதிகம் பாடியிருக்கிறார். முன்பு சிவனுக்கு தினமும் திணைப்பயிரை நைவேத்யமாக படைக்கும் வழக்கம் இருந்தது. தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் இப்பழக்கம் நடைமுறையில் இல்லை. திணைப்பயிரை விளையச்செய்த தலம் என்பதால் இவ்வூருக்கு, “திருத்திணை’ என்று பெயர். சிவன் பணியாளாக வந்து வேலை செய்த தலம் என்பதால், இங்கு திணைப்பயிர் நைவேத்யம் செய்து வழிபட்டால் பணிஉயர்வு கிடைக்கும் என்கிறார்கள். சிவனது உதவியாளராக இருந்து கணக்கெடுக்கும் பணியைச் செய்யும் சண்டிகேஸ்வரர் பல கோயில்களில் தனித்துதான் இருப்பார். ஆனால், இக்கோயிலில் மனைவி சண்டிகேஸ்வரியுடன் இருக்கிறார். இவர், தன் பணிக்கு உதவியாக மனைவியை வைத்துக்கொண்டிருப்பதாக ஐதீகம். இங்கு கோயிலுக்கு வெளியே “ஜாம்புவதடாக’ தீர்த்தம் உள்ளது. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி ஒருவர் இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்கி சாபவிமோசனம் பெற்றாராம். இதனால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதில் நீராடி சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்கிறார்கள்.

நம்பிக்கைகள்

விவசாயம் செழிக்கவும், நாட்டியத்தில் சிறக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினர் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால், அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் அங்கு வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டான். முதியவர் அவனிடம், “”நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்,” என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே முதியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் சாதம் பரிமாறினான். முதியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் “ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி?’ என தன் சந்தேகத்தை கேட்டான். முதியவர் அப்படியே மறைந்தார். சிவன் அவனுக்கு காட்சி தந்து, தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். மகிழ்ந்த விவசாயி சிவனை இங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

திருவிழாக்கள்

வைகாசியில் 13 நாள் பிரம்மோற்ஸவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ராதரிசனம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கடலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top