Tuesday Jan 14, 2025

திருச்சூர் வடக்கு நாதர் திருக்கோயில், கேரளா

முகவரி

அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோயில், திருச்சூர்-680 001, கேரளா. போன்: +91- 487-242 6040.

இறைவன்

இறைவன்: வடக்கு நாதர்

அறிமுகம்

வடக்குநாதன் கோவில் இது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவபெருமானின் திருக்கோவிலாகும். ஒருமுறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் நெய் தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம். இதை “தென் கைலாயம்’ என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது. இந்த கோயில் “பெருந்தச்சன்’ என்பவரது காலத்தில் நிர்மாணம் செய்யப்பட்டது. அவரது காலத்திற்கு பின் நம்பூதிரிகள் பொறுப்பேற்று, தங்களில் ஒருவரை தலைவராக (யோகதிரிப்பாடு) நியமித்து கோயிலை நிர்வகித்து வந்தார்கள். ஆனால் கொல்லம் ஆண்டு 981 ற்கு பின் கொச்சி இராஜா சக்தன் தம்புரான் காலத்தில் இந்த நடைமுறையை மாற்றி கோயிலை பொதுமக்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்தார். இவரது காலத்தில் கோயிலை சுற்றி தேக்கு மரக்காடு இருந்தது. இதை அழிப்பதற்கு ராஜா காலத்தில் முடிவெடுத்தனர். மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மரங்கள் சிவனின் ஜடாமுடியாக இருக்க வேண்டும். இதை அழிக்கக்கூடாது என்றனர். அந்த சமயத்தில் கோயிலில் 41 நாள் திருவிழா நடந்தது. மக்களின் எதிர்ப்பை மீறீ காடு அழிக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை அக்கோயிலில் திருவிழா நடக்கவே இல்லை. சிவனின் ஜடாமுடியான மரங்கள் அழிக்கப்பட்டதால் தான் இந்நிலை ஏற்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சிவசன்னதிக்கு பின்புறம் பார்வதி தேவியின் கருவறை அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவன், பார்வதியை பரசுராமரும், தெற்குப்பகுதியில் உள்ள ராமர், சங்கரநாராயணன், கணபதியை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்ததாக தலவரலாறு கூறுகிறது. எப்போது பூஜை நடந்தாலும் இந்த 5 தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நடத்தப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஸ்ரீ மூலஸ்தானம் என்ற மரம் திருக்கோயிலின் முகப்பில் உள்ளது. அதனை 7 முறை பிரதட்சணம் செய்து திருக்கோயில் நுழைவு வாயிலில் கால் கழுவி திருக்கோயிலில் நுழைந்தவுடன் இடது புறத்தில் உள்ள வில்குழி தீர்த்தத்தில் முகம் கழுவ வேண்டும். அதன் பின் அங்குள்ள கோசல கிருஷ்ணனை தரிசிக்கவும். வடக்கே உள்ள சிவபகவானை வேண்டவும். அதன் பின் விருஷப சுவாமி சன்னிதானத்தை அடைந்து அங்கு உறங்கி கொண்டிருக்கும் அவரை 3 தடவைகள் கை தட்டி தரிசிக்க வேண்டும். பின்னர் முதல் முண்டம் பிரதியையும் பின்னர் மூலவரான வடக்கு நாதரை தரிசிக்கவும், அதன் பின் முறையே கணேசன், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, ஸ்ரீ ராமசுவாமி (மூன்று தடவைகள்) பரசுராமர் மற்றும் சிம்ஹோதாரா (சிவனின் பூத கணம்) தரிசிக்கவும், திருக்கோயிலின் வடக்கு கோடியில் உள்ள பீடத்திலிருந்து நின்றபடியே ஈஸ்வரன் பாரமேக்காவு, அய்யப்பன், நாகராஜர், ஆகியவர்களின் திசை நோக்கி தரிசிக்கவும், திருக்கோயில் முன்வரும் வழியில் சங்கு சக்கர சங்கராச்சாரியார் சமாதியை அடைந்து வழிபடலாம். கடைசியாக சங்கரர் கோயிலை அடைந்து தரிசித்தவுடன் முன் வாசலை அடைந்து இரு கால் பாதங்களை திருக்கோயிலின் சுவர் மீது மூன்று முறை தட்டி அப்பனே வடக்கு நாதரே இக்கோயிலிலிருந்து நான் ஒன்றும் எடுத்து செல்லவில்லை. என்று கூறி வடக்கு நாதரின் அருளோடு மட்டும் திருப்பதியுடன் வெளிவர வேண்டும்.

நம்பிக்கைகள்

இவரை “வடக்குநாதர்’ என்கின்றனர். ஈரேழு பதினான்கு லோகத்தின் அதிபதி என்பதால் எது வேண்டினாலும் நடக்கிறது. இந்த லிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கி சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட நோய், மலட்டுத்தன்மை நீங்கும் என்பதும், ஞாபகசக்தி அதிகரிக்கிறது என்பதும் நம்பிக்கை. மூலவருக்கு இரவு 8.00 மணிக்கு நடைபெறும் திருப்புகா பூஜை தொடர்ந்து 41 நாட்கள் பார்த்தால் தாம் நினைத்த காரியம் கை கூடும் என்பது நம்பிக்கை. நெய் விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

லிங்கத்தின் அமைப்பு: 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். நெய் கட்டியாக உறைந்து வரும். கோடையின் வெப்பமோ, திடங்களின் ஆரத்தி வெப்பமோ, சூடோ இந்த நெய்யை உருகி விழச்செய்யாது. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய் மனம் கிடையாது. நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. விலகிய நந்தி: இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார். மற்றவர்கள் தொட அனுமதியில்லை வடக்குநாதரை தரிசித்தால் காசிக்கு சென்ற பலன் கிட்டும் என்பது ஐதீகம். இத்தலத்தில் உள்ள வியாசமலை-யில் முதன் முதலாக தரிசிக்க வரும் பக்தர்கள்ஹரி ஸ்ரீகணபதியே நமஹஎன்று தனது கைகளால் கற்சிலை – வியாசமலை மீது எழுத வேண்டும். (பேனா பென்சிலால் அல்ல). அடுத்த முறை இத்தலம் வரும் போது எழுதிய அந்த பக்தர் படிப்பில் உயர்வுடன் இருப்பார் என்பது ஐதீகம். உலகம் உய்ய அவதரித்த மகான் ஆதி சங்கரர் அவருடைய தந்தையார் சிவகுருவும், தாயார் ஆர்யாம்பாளும், இத்தலத்தில் வடக்கு நாதரை வேண்டி கொண்டதன் பலனாகத்தான் ஆதிசங்கர் அவதரித்தார். இத்திருக்கோயிலின் முன்புறம் உள்ள தெக்கின்காடு மைதானத்தில் நெற்றி பட்டத்துடன் அலங்கரிக்கப்பட்ட, பயிற்சியளிக்கப்பட்ட 150 யானைகள் அணிவகுப்பு பிரதி மார்ச் மாதமும் நடைபெறும். இந்தியாவின் மாபெரும் விழா ஆடிப்புரம் என்பர்.

திருவிழாக்கள்

திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திரிச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திரிச்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோழிக்குடு

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top