Thursday Dec 26, 2024

திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவிலூர்-605 757, விழுப்புரம் மாவட்டம். போன்: +91- 9842608874, 9486280030

இறைவன்

இறைவன்: வீரட்டேஸ்வரர் இறைவி: பெரியநாயகி , சிவானந்த வல்லி

அறிமுகம்

திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இச்சிவத்தலம் இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவடத்திலுள்ள திருக்கோவிலூர் ஊரில் கீழூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இது அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று ஆகும். இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி.

புராண முக்கியத்துவம்

பார்வதி ஈசனின் இரு (சூரியன், சந்திரன்)கண்களையும் விளையாட்டாக மூடியதால் இருள் சூழ்கிறது.இருள் சூழ்ந்து அந்த இருளே அசுரனாக மாறுகிறது. அந்தகம் என்பது இருள்(அஞ்ஞானம்).அந்த அந்தாகசூரனுக்கும் ஈசுவரனுக்கும் யுத்தம் நடக்கிறது.சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள். வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக 8, 8 ஆக 64 (சதுரங்களாக) பதங்களாக விழுகிறது.அந்த பதங்களில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அந்த பதங்களில் இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்கிறார். இதவே இந்நாளில் வாஸ்து சாந்தி என்று கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் செய்யும் வாஸ்து சாந்தி தோச நிவர்த்தி ஆகும். இந்த 64 பைரவர்களே வாஸ்து பூஜை எனப்படுகிறார்கள். இவ்வாறு அந்தகனை அழித்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளியவர் வீரட்டானேசுவரர் ஆவார்.

நம்பிக்கைகள்

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். பூர்வஜென்ம பாவங்கள் விலகும்.(வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலகும். பாவ தோசங்களும் விலகும்.காரியத் தடைகள் நீங்கும். வீடுகட்டுவதற்கான தடைகள் இத்தலத்தில் வழிபட்டால் நீங்கும்.(வாஸ்து ஐதீகம் தோன்றியதே இத்தலத்தில்தான்). சுக்கிரன் சாபவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் திருமணத்தடை விலகும்.

சிறப்பு அம்சங்கள்

பாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோயிலூர் ஆண்ட தெய்வீக மன்னனுக்கு அவ்வையார், கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சிறப்பு தலம் இது. இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. சங்கப்புலவர் கபிலர் பெருமான் குடியிருந்த பெருமைக்குரிய பேரூர். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறை கபிலர் குன்று என்று பெண்ணை ஆற்றின் நடுவில் தற்போதும் உள்ளது. இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 64 நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது. அஷ்ட புஜ விஷ்ணு துர்க்கை அம்மன்: சன்னதியின் பிரகாரத்தில் இருக்கும் இந்த அம்மன் இங்கு சிறப்பு பெற்றவர். சாந்த சொரூபியாக நமக்கு இருப்பது போலவே கண்கள் இருபுறமும் வெள்ளையாகவும் நடுவில் கருப்பு கருவிழியுடனும் சாந்தமாக சிரித்த முகத்துடன் இயற்கையாக இருப்பது போலவே இருக்கிறார்.இவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்குகிறது. கஷ்டங்கள் நீங்கும்.வேலை வாய்ப்பு தடை கல்யாணத் தடை ஆகியவை விலக விசேசமாக பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. எலுமிச்சம் பழ விளக்கு பூஜை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் ராகு கால பூஜை செய்கிறார்கள். பெரிய யானைக் கணபதி: சுந்தரர் சேரமான் இருவரும் வான்வழியாக கயிலை செல்லும் போது அவ்வை இந்த தலத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்தாராம்.உடனே விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்ய அருளினார். சீதக் கபை எனத் தொடங்கும் விநாயக அகவல் பாடி பூஜை செய்த பிறகு விசுவரூபம் கொண்டு தன் துதிக்கையால் அவ்வையாரை சுந்தரர், சேரமான் ஆகியோர் சென்றடையும் முன்பே கயிலையில் விட்ட கணபதி இவர்.இவர் விசுவரூபம் எடுத்ததாலேயே பெரிய யானை கணபதி என்று பெயர் பெற்றார். சண்முகர்: முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த அம்பாள் தன் கையிலிருந்த வேல் விழுந்த இடம் திருக்கை வேலூர் என்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.முருகன் சிவனை பூஜை செய்த தலம் இது.இவர் அருணகிரநாதரால் திருப்புகழ் பாடப் பெற்றவர்.

திருவிழாக்கள்

மாசிமகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – இந்த விழாவில் ஏராளமான அளவில் பக்தர்கள் கோயிலில் கூடுவது சிறப்பு. கார்த்திகை – 3 ம் சோம வாரம் சங்காபிசேகம் ஆடிவெள்ளி கிழமைகள் விசேசம் புரட்டாசி – நவராத்திரி ஐப்பசி மாதம் – அன்னாபிசேகம்,கந்த சஷ்டி உற்சவம்,சூரசம்காரம் மார்கழி – மணிவாசகர் உற்சவம் திருவாதிரை உற்சவம், ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை விழா நாட்கள் ஆகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கோவிலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top