Wednesday Dec 25, 2024

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில், திருக்கூடலையாற்றூர் – 608 702 கடலூர் மாவட்டம். போன் +91- 4144-208 704.

இறைவன்

இறைவன்: நர்த்தனவல்லபேஸ்வரர் இறைவி: ஞானசக்தி, பராசக்தி

அறிமுகம்

திருக்கூடலையாற்றூர் நர்த்தனவல்லபேசுவரர் – நெறிக்காட்டுநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சுந்தரரால் தேவாரம் பாடப்பெற்ற இச் சிவாலயம் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு இறைவன் அந்தணர் வடிவில் வழிகாட்டியதும், பிரமனுக்கு இறைவன் நர்த்தனம் செய்து காட்டியதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 214 வது தேவாரத்தலம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் மனைவி, மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு சொரிநாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும், தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று, நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால், திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்மன், அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.

நம்பிக்கைகள்

கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக படிக்கிற குழந்தைகளுக்கு மறதி பெரிய மைனஸ் பாயின்டாக இருக்கிறது. எவ்வளவு படித்தாலும், மறுநாளே மறந்து விடுகிறார்கள். மகரிஷி அகத்தியர் கூட இத்தலத்தில்தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டலாம். மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இதைக் கருதுகின்றனர். பிரம்மாவும், சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வல்லபேஸ்வரர் மீது சுந்தரர் பதிகம் பாடியுள்ளார். மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. எமதர்மராஜாவின் பிரதிநிதியான சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்த சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. தனி சன்னதியில் பொங்கு சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஏழரை சனி நடப்பவர்கள் பிரதோஷ காலத்தில் நந்தியையும் பொங்கு சனியையும் தரிசித்தால் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமி அவதாரம் அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது, தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.

திருவிழாக்கள்

மாசிமகத்தில் 13 நாள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கூடலையாற்றூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top