Sunday Nov 24, 2024

திருக்குடந்தைக் காரோணம் சோமேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்

முகவரி

அருள்மிகு சோமேஸ்வரர் (குடந்தைக்காரோணம்) திருக்கோயில், கும்பகோணம். தஞ்சாவூர்- 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0349.

இறைவன்

இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: சோமசுந்தரி

அறிமுகம்

கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார். சிவபெருமான் அவரிடம், “”நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத்தோடு சேர்த்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய். அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயை வை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில் நூல் சுற்று. அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய். அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன்,” என்றார். இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. கும்பம் மிதந்தது. அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

இக்கோயிலில் உள்ள கல்யாண விநாயகரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 91 வது தேவாரத்தலம் ஆகும். அமுத குடம் உடைந்தபோது சிதறிய தீர்த்தம் இத்தலத்தின் முன்பு குளம்போல பெருகியது. இக்குளத்திற்கு சந்திரபுஷ்கரணி என பெயர். காலப்போக்கில் இக்குளம் அழிந்துவிட்டது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம். ஒரே பிரகாரத்தைக் கொண்ட இக்கோயிலில் சந்திரனும், வியாழனும் பூஜித்துள்ளனர். எனவே திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இத்தலத்தை வழிபடுவது சிறந்தது. இக்கோயிலுக்கு மூன்றுவாசல்கள் உள்ளன. ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். திருமால் வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. உள் மண்டபத்தில் சோமாஸ்கந்தர் அருள்பாலிக்கிறார். கருவறை சுவர்களில் எட்டுபேர் வணங்கிய நிலையிலான சிற்பங்கள் உள்ளன. காணா நட்டம் உடையார் இத்தலத்தில் நடராஜ பெருமான் தனி சன்னதியில் சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். இவருக்கு “காணா நட்டம் உடையார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரைப் பார்க்காமல் சென்றால், சென்றவருக்குத்தான் நஷ்டமே ஒழிய, இறைவனுக்கு ஏதும் இல்லை என்ற பொருளில் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரை வணங்கினால் வியாபார விருத்தி, தொழில் விருத்தி, உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top