திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
ருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோவில், திருக்கருகாவூர், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 302.
இறைவன்
இறைவன்: முல்லைவனநாதர் இறைவி: கர்ப்பரக்ஷம்பிகை
அறிமுகம்
திருக்கருக்காவூர் – திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சோழ நாட்டு காவிரி தென்கரை தலம் சிவன் கோவிலாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் காவிரி வெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் இத்தலம் இருக்குமிடம் முல்லைவனமாக இருந்தது. அந்த அழகிய வனத்தில் கௌதமர், கார்க்கேயர் என இரு முனிவர்கள் இறைவனை வேண்டி தவமிருந்தனர். இந்த இரு இறை அன்பர்களுக்கும் நித்துருவர்-வேதிகை தம்பதியினர், முல்லை வனத்திலேயே தங்கி இருந்து சேவை செய்து வாழ்ந்து வந்தனர். தம்பதியர் இருவரும் இறைப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மனதில் பெரிய குறை ஒன்றிருந்தது. தங்களுக்கு குழந்தைப் பேறு இல்லையே என்று வருத்தம் இருந்தது. அந்த மனக்குறையை முனிவர்களிடம் கூறினர். அதற்கு அம்முனிவர் பெருமான்கள் இந்த முல்லைவனத்தில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் வணங்கிட நீங்கள் வேண்டி நிற்பது கிடைக்கும் என வாழ்த்தினர். அவ்வாறே அம்மையப்பனை வணங்கி மக்கட்பேறு கிடைக்கப் பெற்றனர். இவ்வாறு வேதிகை கருவுற்றிருந்த சமயம், கணவர் இல்லாமல் வேதிகை மட்டும் தனித்திருந்த நேரத்தில் சுகமான சுமையான கருவை சுமந்திருந்த காரணத்தினால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்த காரணம் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, இறைவன் அருளினால் அவள் பெற்ற கரு கலைந்தது. அம்பாளிடம் சென்று தன் நிலையை எடுத்து இயம்பினாள் வேதிகை. தன் பக்தையின் நிலை அறிந்து அன்னை கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்து குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றிநைந்துருவன் என்ற பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை. கருகாத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம் இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவுலகில் கருத்தரித்தவர்களையும் கருவையும் ஒருசேர காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்ய அன்னை அவ்வாறே இத்தலத்தில் வீற்றிருந்து நமக்கெல்லாம் அருளுகின்றாள். இதன் காரணமாகவே இத்தலம்திருக்கருகாவூர் என்றும், இத்தல இறைவி கர்ப்பரட்சாம்பிகை என்றும் பெயர் விளங்கப் பெற்றது. இந்த நேரத்தில் அருட்குழந்தை நைந்துருவனுக்கு கொடுக்க வேதிகையிடம் தாய்ப்பால் இல்லாத காரணத்தால், அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதன் காரணத்தால் பால்குளம் தோன்றியது.இந்த புனித குளம் இன்றும் திருக்கோயிலின் முன்புறம் க்ஷீரகுண்டம் என்ற பெயரில் இருந்து வருகிறது.
நம்பிக்கைகள்
இத்தல கருகாத்த நாயகியை மனதார வேண்டி வணங்கிட கரு உண்டாகிறது, கரு கலையாமல் நிலைக்கிறது, சுகப்பிரசவம் உண்டாகிறது என்பது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. இத்தல இறைவன் முல்லைவனநாதர் சுயம்புலிங்கமாகத் தோன்றியவர். இந்த லிங்கத்தின் சிறப்பு புற்று மண்ணினால் ஆன லிங்கம் என்பதே. அதனாலேயே இந்த லிங்க மேனிக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆகவே இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சாத்தி வணங்கினால் சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து இருந்தமைக்கான வடுவினை, அடையாளத்தினை இன்றும் காணலாம்.
சிறப்பு அம்சங்கள்
லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். இங்குள்ள நந்தியும், தல விநாயகரான கற்பக விநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள் .
திருவிழாக்கள்
வைகாசிவிசாகம், பிரம்மோற்சவம், நவராத்திரி
காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி