தியாகசமுத்திரம் மகாலிங்கசுவாமி சிவன் கோயில், தஞ்சாவூர்
முகவரி
தியாகசமுத்திரம் மகாலிங்கசுவாமி சிவன் கோயில் தியாகசமுத்திரம், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 301
இறைவன்
இறைவன் : மகாலிங்கசுவாமி இறைவி : ப்ருக சுந்தரகுஜாம்பாள்
அறிமுகம்
கும்பகோணம் – கபிஸ்தலம் சாலையில் சுவாமிமலைக்கு மேற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது தியாகசமுத்திரம். இது ஒரு பிரதான நெடுஞ்சாலையை ஒட்டிய கிராமம். விக்கிரம சோழனுக்கு தியாகசமுத்திரம், அகளங்கன் எனும் பெயர்கள் இருந்தன என்பதை விக்கிரம சோழனுலா மூலம் அறியலாம். வண்ணக்குடி என்ற ஊருக்கு தியாகசமுத்திர நல்லூர் என புதிய பெயர் சூட்டி திருஇடைமருதூர் கோயிலுக்கு இறையிலி நிலமாக தானமளித்தான் என அவ்வூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது, அது இந்த தியாகசமுத்திரமாக இருக்கலாம். இக்கோயில் இறைவன் மகாலிங்கசுவாமி, இறைவி ப்ருக சுந்தரகுஜாம்பாள். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தானோ என்னவோ ஒருகால பூஜையுடன் பெரும்பாலான நேரங்களில் கோயில் மூடியே கிடக்கிறது, கோயில் மிகவும் பழுதடைந்துள்ளது, கருவறை விமானத்தில் மரங்கள் முளைத்துள்ளன. மூர்த்திகள் எண்ணையின்றி பழைய வஸ்திரம் தரித்து நிற்பதை பார்கும்போது வரம் கேட்டு வந்த நாம் வாயடைத்து போகும்படி உள்ளது.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய திருக்கோயில் எனினும் பிரதான வாயில் தெற்கில் நெடுஞ்சாலையை நோக்கியபடி உள்ளது. இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார் அதனால் தான் மகாலிங்கசுவாமி எனப்படுகிறார் போலும். இறைவி பெயருக்கு ஏற்ற வகையில் அழகிய தோற்றம்கொன்டுள்ளார். இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியபடியும் உள்ளனர். இருவரையும் இணைக்கிறது உயர்ந்த மண்டபம் ஒன்று. கருவறை கோட்டங்களுக்கு சில படிகள் மேலேறி செல்லும் வண்ணம் உள்ளது. எனினும் கோயிலின் அமைப்பிற்கு ஏற்ற வகையில் கோஷ்ட மூர்த்திகள் இல்லை மிக சிறிய அளவினதாக உள்ளன. எனில் கோயில் பெரும் சிதைவுக்கு ஆளாகி மூலமூர்த்திக்கள் மட்டும் இருந்திருக்கலாம். கோஷ்ட மூர்த்திகள் சிறியனவாக இடைக்கால பட்ஜெட் போல் வந்தமர்ந்துள்ளன. பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகர், ஆறுமுகன் சிற்றாலயங்களும், கையில் சூலம் வஜ்ராயுதம் ஏந்திய முருகன் நின்ற கோலத்தில் உள்ளார். அதனை ஒட்டி ஐயப்பன், ஆஞ்சநேயர் என புதிய சிலைகள் இடைசெருகல்களாக உள்ளன. துர்க்கையின் எதிரில் பழமையான சண்டேசர் சிற்ப்பத்தை காணலாம். வட்டவடிவ பீடத்துடன் (தாமரையாக காட்ட எண்ணியிருக்கலாம்) அமர்ந்திருக்கும் சண்டிகேஸ்வர மூர்த்தி மிக பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது வழமையாக இவருக்கு இரு கைகளே கட்டப்பட்டிருக்கும், இங்கு சண்டேசர் நான்கு கைகளுடன் உள்ளார், அவரின் மேல் வலது கையில் மழு ஆயுதம் ஒன்றினை கையில் ஏந்தியிருப்பதை காணலாம். முன் வலக்கை அபய ஹஸ்தமாக உள்ளது, பின் இடக்கை தண்டம் ஒன்றை தோளில் வைத்துள்ளமையும் முன் இடக்கை வரதமுத்திரையுடன் உள்ளது. அனைவரும் பார்த்து அருள் பெறவேண்டிய சண்டேசர் என்பதில் ஐயமில்லை. இவரது சன்னதியை ஒட்டி பெரிய பலா மரம் ஒன்றுள்ளது. வடகிழக்கில் நவக்கிரகம், பைரவர் சனைச்சரன் சன்னதிகள் உள்ளன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்டளைச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி