Saturday Nov 16, 2024

திண்டல் முருகன் கோவில்

ஈரோடு மாவட்டம் திண்டல் மலையில் அமைந்துள்ளது திண்டல் முருகன் கோவில் என்னும் அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோவில்.

 அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல் மலை வேலாயுத சுவாமி கோவிலும் ஒன்று.

திண்டல் மலை மீது தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இங்கு தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இக்கோவிலில் உள்ள இடும்பனார், பஞ்சம் ஏற்பட்டபோது மழை பொழிய வேண்டியதாகவும் வேண்டுதலை கேட்டு மழை பொழிந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஆகையால் இங்கு உள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெருவது இன்றும் நடைமுறையில் உள்ளது.

 இந்தக் கோயிலில் இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து பூஜிக்கும் பக்தர்கள், அதில் ஒன்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். அதை நறுக்கி வீட்டின் நான்கு பக்கங்களிலும் வீசினால், துஷ்டர்களாளும் எதிரிகளாலும் ஏற்படும் ஆபத்துகள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. பங்குனி உத்திரம், கந்தசஷ்டி முதலான விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கோவிலில் முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர், நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு சென்றால் பக்தர்களின் குறைகள் தீரும் என்பது ஐதீகம். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது. இது சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இக்கோவிலின் முன் மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலையும், படிகளை கடந்தால் இடும்பன் கோவிலும் அமைந்துள்ளது.

காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிறார். நகரின் வளத்திற்கும் செழிப்பிற்கும் தீர்க்கமாய் திண்டல் முருகன் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே ஈரோடு நகரத்தின் கூடுதல் சிறப்பாகும்.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top