Thursday Dec 19, 2024

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில், தண்டலைச்சேரி, வேளூர் – 614 715, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். போன் +91- 98658 44677

இறைவன்

இறைவன்: நீள்நெறிநாதர், இறைவி: ஞானாம்பிகை

அறிமுகம்

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 110ஆவது சிவத்தலமாகும். ஆமை அவதாரம் எடுத்த திருமால் செருக்கால் கடலைக் கலக்கிய போது சிவபெருமான் ஆமையைக் கொன்று ஆமை ஓட்டினை அணிந்தருளிய தலம்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது. சோழநாட்டிற்கு வளத்திற்கு இலக்கணமாக இவ்வூர் அமைந்திருந்தது. இவ்வூரில் வேளாளர் குலத்தில் தாயனார் என்ற சிவனடியார் அவதரித்தார். இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இந்த கோயிலுக்கு தாயனார் பல திருப்பணிகள் செய்து வந்தாலும், நைவேத்தியம் வைக்கும் பணியை முக்கிய திருப்பணியாக செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளரவில்லை. தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப்பொருள்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப்பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு “அரிவாள் தாய நாயனார்’ என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. முகப்புவாயில் உள் நுழையும் போது இடப்பால் அதிகார நந்தி சன்னதி உள்ளது. கொடி மரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரத்து விநாயகர் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சன்னதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூசித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சன்னதிகளும் உள்ளன. பக்கத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் திருச்சிற்றேமம், திருவாய்மூர், திருக்குவளை, திருக்கள் முதலியன.

நம்பிக்கைகள்

விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயிர் செய்வதற்கு முன் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அரிவாள்தாய நாயனார் பிறந்த தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 174 வது தேவாரத்தலம் ஆகும். குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் நோய் விலகும் என்பது நம்பிக்கை.பொதுவாக அனைத்து கோயில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்கா தேவி இத்தலத்தில் நடராஜரின் பாதத்தில் அருள்பாலிக்கிறாள். குஷ்ட நோய் தீர்க்கும் தலம் கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு நூற்றுக்கணக்கான மாடக்கோயில்கள் கட்டியவன். ஒரு முறை இவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்கு சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி,””கல்மாடு புல் திங்கும் தலத்திற்கு சென்று வணங்கு. உன் நோய் தீரும்,”என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்து தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது குஷ்ட நோயும் நீங்கியது. மனம் மகிழ்ந்த மன்னன் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து இறைவனை வழிபட்டான்.

திருவிழாக்கள்

தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அரிவாள்தாய நாயனாரின் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டலைச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top