தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில், நாமக்கல்
முகவரி :
தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில்,
தட்டான்குட்டை,
நாமக்கல் மாவட்டம் – 637207.
இறைவி:
பச்சைத் தண்ணீர் மாரியம்மன்
அறிமுகம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது தண்ணீரில் கோயில் விளக்கை எரிய வைப்பது வழக்கம். திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோயில் கிணற்றில் புனித நீராடி, குடத்தில் தண்ணீரை எடுத்து வருவார்கள். அப்போது, அவர்கள் அம்மன் முன்பு சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்துவிட்டு கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை அந்த விளக்கில் ஊற்றுவார்கள். பின்னர், அந்த விளக்கில் தீபம் ஏற்றியபோது, விளக்கு, எண்ணெயில் எரிவது போல் தண்ணீரிலும் சுடர்விட்டு எரியும்.
இந்த அதிசயக் காட்சியை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு, பக்தி பரவசம் அடைவார்கள். தண்ணீரில் அதிகாலையில் பற்ற வைக்கப்பட்ட விளக்கு, சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் எரிந்து பின்னர் அணைந்தவிடும். அதன்பின்னர் எண்ணெயை கொண்டு விளக்கில் மீண்டும் தீபம் ஏற்றப்படும். தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம், திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே நடைபெறும். மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணெயை கொண்டுதான் விளக்கு எரிய வைக்கப்படும்.
இந்த கோயில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
முன்னோர் காலத்தில் ஒருமுறை கோயில் விளக்கில் எண்ணெய் தீர்ந்து போனதாகவும், அப்போது கோயில் பூசாரி ஊர் தர்மகர்த்தாவிடம் அம்மனுக்கு விளக்கு வைக்க எண்ணெய் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த தர்மகர்த்தா, ஒரு வித விரக்தியுடன் பணம் இல்லை என்றும், சக்தியுள்ள மாரியம்மன் தானே, தண்ணீரை ஊற்றி பற்றவை விளக்கு எரியும் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல் கோயில் பூசாரிகள் தண்ணீர் ஊற்றி விளக்கை பற்ற வைத்தனர். அப்போது அம்மன் முன்பு பற்ற வைக்கப்பட்ட விளக்கு சுடர் விட்டு எரிந்துள்ளது. அப்போது தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயத்தை பார்த்த கோயில் பூசாரிகளும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனால் அன்று முதல் இங்குள்ள மாரியம்மன் ‘பச்சைத் தண்ணீர் மாரியம்மன்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தட்டான்குட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி