Thursday Dec 26, 2024

ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம் – 600 067

இறைவன்

இறைவன்: புஷ்பரதேஸ்வரர் இறைவி: சொர்ணாம்பிகை, பாலசுகாம்பிகை

அறிமுகம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை நீங்கும் சக்தி பெற்றதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால், இத்தல சிவபெருமானுக்கு, ‘புஷ்பரதேஸ்வரர்’ என்று பெயர்.

புராண முக்கியத்துவம்

தேவலோகத்தின் பிரதான சிற்பியாக இருப்பவர், விஸ்வகர்மா. இவரது மகள் சமுக்ஞா. இவளைத்தான் சூரிய பகவான் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாமல், சமுக்ஞா தவித்து வந்தாள். இதனால் தன்னுடைய நிழலை, தன்னைப் போன்ற உருவமாக மாற்றினாள். அந்த நிழல் பெண்ணின் பெயர் ‘சாயா.’ அவளை தன்னுடைய கணவனிடம் விட்டுவிட்டு, சமுக்ஞா தனது தந்தையிடம் சென்று விட்டாள். எமதர்மனின் மூலமாக இந்த விஷயத்தை அறிந்த சூரியன், தன்னுடைய மனைவி சமுக்ஞாவை அழைத்துவருவதற்காகப் புறப்பட்டார். அதற்கு முன்பாக, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்தார். அப்போது ஒரு ஜோதி வானில் தோன்றி நகர்ந்தது. அதைப் பின் தொடர்ந்து சென்றார், சூரியன். வானில் சென்ற ஜோதியானது, இந்த திருத்தலம் இருக்கும் இடத்தில் உள்ள தடாகத்தில் பூத்திருந்த தாமரை மலரில் ஐக்கியமானது. அதில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், சூரியனுக்கு காட்சி கொடுத்து, சமுக்ஞாவை சூரியனுடன் சேர்த்து வைத்து மகிழ்ச்சியாக வாழ அருளினார். அதன்பின்பு, சூரியனின் வேண்டுகோளின்படி, இங்கேயே எழுந்தருளினார். சூரியன் பூஜித்த லிங்கம், தாமரை மலருக்குள்ளேயே இருந்தது. பின்னாளில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன், இந்த வழியாக தன்னுடைய படை பரிவாரங்களுடன் சென்றான். அப்போது தடாகத்தில் இருந்த ஒரு தாமரை மட்டும் பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட மன்னன், அந்த தாமரையைப் பறிக்க நினைத்து, தடாகத்தில் இறங்கி, தாமரையை நோக்கிச் சென்றான். அவன் அருகில் வரவர, தாமரையும் நகர்ந்து சென்றுகொண்டே இருந்ததே தவிர, அவனது கையில் அகப்படவில்லை. இதனால் ஆச்சரியம் அடைந்த மன்னன், தன்னுடைய உடைவாளை எடுத்து தாமரைப்பூவின் தண்டுப்பகுதியை வெட்டினான். அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிப்பட்டது. மேலும் தாமரையின் மின்னல் ஒளி பாய்ந்து, மன்னனின் பார்வையும் பறிபோனது. தன்னுடைய செயலுக்கு வருந்திய மன்னன், சிவபெருமானை நினைத்து வேண்டினான். இதையடுத்து அவனுக்கு கண்பார்வையை வழங்கிய சிவபெருமான், மன்னனுக்கு காட்சியும் கொடுத்தார். அதோடு தான் இந்த தடாக தாமரையில் லிங்க வடிவில் இருப்பதாக கூறினார். மன்னன் அந்த லிங்கத்தை எடுத்து தடாகத்தின் கரையில் பிரதிஷ்டை செய்து, ஆலயம் எழுப்பினான். தாமரை புஷ்பத்தில் எழுந்தருளியவர் என்பதால், இத்தல சிவபெருமானுக்கு, ‘புஷ்பரதேஸ்வரர்’ என்று பெயர். சுந்தரமூா்த்தி நாயனாரின் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்துகொண்டார். ஆகையால் சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது.

நம்பிக்கைகள்

சூரியன், கண் தொடர்பான நோய்களை நிர்ணயிக்கும் கிரகமாக இருப்பதால், பார்வையில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு சிவன், சூரியனுக்கு நெய் விளக்கு ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். பிரச்னையால் பிரிந்திருக்கும் தம்பதியர் சூரியனுக்கு கோதுமைப்பொங்கல், கோதுமை பாயசம் படைத்து வேண்டிக்கொள்கின்றனர். இங்குள்ள பல்லவ விநாயகரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மூலஸ்தானத்திற்கு முன்புள்ள மண்டபத்தில் சூரியன், புஷ்பரதேஸ்வரர் சன்னதியை பார்த்தபடி இருக்கிறார். இவர் எப்போதும் இங்கு சிவனை வழிபட்டுக்கொண்டிருப்பதாக ஐதீகம். சித்திரை பிறப்பின்போது, முதல் 7 நாட்கள் புஷ்பரதேஸ்வரர், சொர்ணாம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது. அந்த நாட்களில் சிவனுக்கான பூஜையை, சூரியனே செய்வதாக ஐதீகம். எனவே, அன்று உச்சிக் காலத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும், சூரியன், வடக்கு நோக்கிய பயணத்தை (உத்தாரயண புண்ணிய காலம்) துவங்கும் நாளான மகர சங்கராந்தியன்றும் (தைப்பொங்கல்) சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. சூரியன், பிற கிரகங்களுக்கு தலைமை கிரகம் என்பதால், இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்குள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். பல்லவ விநாயகர்: விநாயகர் தலையில் கிரீடத்துடன்தான் இருப்பார். ஆனால் இங்கு கிரீடம் இல்லாத விநாயகரை தரிசிக்கலாம். தந்தைக்கு மரியாதை செய்யும் விதமாக, இவர் இவ்வாறு காட்சி தருவதாக சொல்கிறார்கள். இவரை “பல்லவ விநாயகர்’ என்றழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொள்ள பொருளாசை, பதவி மீதான விருப்பம் குறையும் என்பது நம்பிக்கை. கண்வ மகரிஷி இங்கு சிவனை வழிபட்டிருக்கிறார். இவருக்கும் இங்கு சிலை இருக்கிறது. பல் தொடர்பான நோயுள்ளவர்கள் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, யோக பட்டையுடன் காட்சி தருகிறார். கால பைரவர், கமல விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் ஆகியோரும் இருக்கின்றனர். கோயிலுக்கு வெளியில் சூரிய புஷ்கரிணி உள்ளது.

திருவிழாக்கள்

தமிழ் புத்தாண்டில் சூரியபூஜை, நவராத்திரி, தைப்பொங்கல்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஞாயிறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மீஞ்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top