செருவந்தூர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
செருவந்தூர் சிவன்கோயில், செருவந்தூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610107
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
நன்னிலம் – நாச்சியார்கோயில் சாலையில் உள்ள திருவாஞ்சியம் தாண்டியதும் இடதுபுறம் உள்ள குடமுருட்டியாற்றினை கடக்கும் ஒரு பாலத்தின் வழியாக பருத்தியூர் சாலையில் இரண்டு கிமி சென்று பருத்தியூருக்கு முன்னதாக திரும்பும் சாலை செருவந்தூர் கொண்டு சேர்க்கும். செருவத்தூர் எனவும் அழைக்கின்றனர். வண்டு பூஜித்ததால் இவ்வூர் சிறுவண்டூர் என அழைக்கப்பட்டு தற்போது செருவண்டூர்- செருவந்தூர் என அழைக்கப்படுகிறது. மிக சிறிய ஊர் பத்து – இருபது வீடுகள் தான் இருக்கின்றன. ஊரின் கிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது சிவன்கோயில். கடந்த முப்பது ஆண்டுகளின் மேலாக கோயில் புறக்கணிக்கப்பட்டு இறைவன் இறைவி இருவரது கருவறை தவிர முகப்பு மண்டபம் பைரவர் சன்னதிகள் இடிந்து குட்டிசுவராக காட்சியளிக்கின்றது. இறைவனது சன்னதியில் விமானத்தில் மேல்புறம் பெரும் நுணா, அரச மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இறைவன் சன்னதி எதிரில் நீண்டஅழகிய மண்டபம் இருந்தது தற்போது இடிந்து கிடக்கிறது. பிரகார சிற்றாலயங்ககள் அனைத்தும் இடிந்து தரை மட்டமாகிவிட்டன. கருவறை இரண்டும் இறைவனில்லாமல் பார்க்கும்போது மனம் கனக்கிறது. மூலவர், அம்பிகை, விநாயகர், தென்முகன், நந்தி, பைரவர் சந்திரன் சிலைகள் தனியாக ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் விநாயகருக்கு சிறிய கோயில் எழுப்பியுள்ளனர். எதிரில் பெரிய குளம் இருக்கின்றது. இதன் வருவாயை வைத்தே இக்கோயிலை நிர்வகித்திருக்கலாம்.
புராண முக்கியத்துவம்
அருகில் உள்ள ஆண்டியூரில் சொல்லப்படும் கதையில் கந்தர்வன் சித்திரசேனன் அப்சரஸ் மேனகை போன்ற தேவலோக பெண்களுடன் ஆடிகளித்திருக்கும் வேளையில் அகத்தியர் வந்ததை கவனியாமல் கொண்டாட்டத்தில் இருந்தமையால் சாபம் பெற்று ஆண்டியூரில் சாப நிவர்த்தி பெற்றான். உடன் இருந்த அப்சரஸ் சாப நிவர்த்தி பெற வழிபட்ட தலம் இது என கூறுகின்றனர். அப்சரசின் உடைந்த சிலை கோயில் கருவறை அருகில் உள்ளது. ஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர், அதை நிந்திக்கின்றனர். சிலர் அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ ‘நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன். யாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை. ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை’ என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர். ஆலயங்கள் ஆற்றலின் இருப்பிடம், சிவலிங்கம் ஆற்றல் தரும் ஒரு பருப்பொருள். நமக்கு ஆற்றலை தரும் இவரை நாம் அன்றாடம் முறையான அபிஷேகங்கள் செய்வித்து , உரிய மந்திரங்கள் ஓதி அதன் சக்திநிலையை உயர்த்தவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த இறைவனை வலம் வரும் நம்மையும், நம் ஊரையும் ஓர் சக்தி நிலை பரவி காக்கும். இதனால் இறைவனையும், கோயிலையும் குளத்தினையும், தல விருட்சத்தினையும் போற்றி பாதுகாக்கவேண்டும். இதனை அறிந்தே மன்னர்கள் ஊரின் அளவு, மக்கட்தொகை இதற்கேற்றாற்போல் கோயில்களை கட்டிவைத்தனர். இதனை அறியாமல் நாம் உள்ளூர் கோயில்களை புறக்கணித்து கட்டண கோயில்களில் கால்கடுக்க நிற்கின்றோம். கூரையேறி கோழி பிடிக்கதெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக எத்தனித்த கதை தான் இது. நாம் ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் இருக்கும் சிவாலயங்களை போற்றி பராமரித்தால் இறைவன் இம்மைக்கும் மறுமைக்கும் எல்லா நன்மையையும் அருள்வார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பருத்தியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி