செய்துங்கநல்லூர் கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
செய்துங்கநல்லூர் கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
செய்துங்கநல்லூர்,
திருநெல்வேலி மாவட்டம் – 628809.
இறைவன்:
கல்யாண வரதராஜப் பெருமாள்
இறைவி:
ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்:
ஆதியில் ஜெய்துங்கநல்லூர் என்றிருந்த பெயரே காலப்போக்கில் மருவி இன்றைக்கு செய்துங்கநல்லூர் என அழைக்கப்படுகிறது. ஊருக்கு கிழக்கே பரந்த குளத்தின் கரையில் கிழக்கு பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. திருநெல்வேலி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கிபி.16-17ஆம் நூற்றாண்டில் தென்காசி பாண்டியர் ஆட்சியில் முகமண்டபம் ஆஸ்தான மண்டபம் கட்டப்பட்டுள்ளன. திருப்பணி செய்த மன்னனின் உருவச்சிலை முக மண்டபத்தில் அமைந்துள்ளது. கோயிலின் எதிரே வெண்தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் மத்வ தீர்த்தம் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கற்றளியாக கோயில் கட்டப்பட்டுள்ளது. மகாமண்டபத்தில் கருடாழ்வார், சந்தான கோபால கிருஷ்ணனுக்கும், அர்த்தமண்டபத்தில் ராமானுஜர் விக்ரமும் உள்ளது. கருவறையில் மூலவராக நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வரதராஜப் பெருமாள் எழுந்தருளி உள்ளார்.
மைசூர் மத்வ மடத்தின் 13வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீ ராம மாதவ தீர்த்தர் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு இந்த செய்துங்கநல்லூர் நதிக்கரைப் பகுதியில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் தங்கியிருந்து மக்களிடையே மத்வ கொள்கைகளை பரப்பி வந்தார். அதன் பின்னர் அவர் தம் சொந்த மண்ணுக்கு திரும்ப தீர்மானித்து திருக்குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்ட நிலையில் நீராடிக் கொண்டிருந்த அவர் முன் கருடவாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி அவரது அந்திம காலம் வரை இங்கேயே தங்கியிருந்து மத்வ கொள்கை பரப்பும் பணியை மேற்கொள்ளுமாறு ஆசிர்வதித்து மறைந்தார். பகவானின் கட்டளையை ஏற்று தமது முடிவை மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி இருந்து தனது ஆன்மிகப் பணியை முழு ஈடுபாட்டோடு செய்து பின்னர் பெருமாள் கோயிலில் திருச்சுற்றில் உள்ள தீர்த்த குளத்தில் அருகே முக்தி அடைந்தார். அதனை தொடர்ந்து அவரது சீடர்கள் அந்த இடத்தில் ஒரு பிருந்தாவனம் அமைத்து நாள்தோறும் பக்தியோடு வணங்கி வருகின்றனர். அதோடு அவர் சித்தியடைந்த ரதசப்தமி தினத்தில் ஆண்டுதோறும் விழா எடுத்து வருகின்றனர். உள்சுற்றில் ராம மாதவர் தீர்த்தரின் பிருந்தாவனம் சுற்று சுவர்களுடன் கூரையின்றி காணப்படுகிறது. கிருஷ்ணர், ஆஞ்சநேயர் சன்னதிகள் வடக்குச் சுற்றில் உள்ளன.
நம்பிக்கைகள்:
மாதம்தோறும் திருவோண நட்சத்திர தினத்தில் விசேஷ வேள்வியுடன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. இந்த வேள்வியில் திருமண தடை விலக ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையோடு கலந்து கொள்கின்றனர். மாங்கல்ய வரம் அளிக்கும் மிகப்பெரும் வரப்பிரசாதமாக இப்பெருமாள் விளங்குவதால் இத்தலத்து பெருமாளின் கல்யாண வரதராஜர் என்ற பெயர் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறார்கள்.
இவ்வூரில் ஒரு பிரம்மாண்டமான அன்னச்சத்திரம் உள்ளது. ஊரில் இருந்து மணமாகி செல்லும் பெண்கள் தொழில் நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கு செல்லும் உள்ளூர் மக்களும் ஒரே இடத்தில் இருந்து உணவை சமைத்து எடுத்து வந்த சத்திரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் நைவேத்தியம் படைத்து உண்ட பின்பு அங்கிருந்து கிளம்பி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் எடுத்த காரியமும் அவர்கள் வாழுக்கையும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
திருவிழாக்கள்:
தினமும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வியாழன்தோறும் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், மார்கழி முழுக்க திருப்பள்ளியெழுச்சி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.
காலம்
கிபி.16-17 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செய்துங்கநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி