Saturday Jan 18, 2025

செங்கன்னூர் பகவதி மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி

செங்கன்னூர் பகவதி மகாதேவர் திருக்கோயில், செங்கன்னூர், ஆலப்புழா, கேரளா – 689121.

இறைவன்

இறைவன்: மகாதேவர் இறைவி: பகவதி

அறிமுகம்

செங்கன்னூர் மகாதேவர் கோயில், செங்கண்ணூர் சிவன் கோயில் அல்லது செங்கன்னூர் பகவதி கோயில் என்பது, கேரளாவின் ஆலப்புழாவின் செங்கன்னூர் நகரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இங்குள்ள பகவதியும்) புகழ்பெற்றவள் என்பதால், இது பகவதி கோயிலாகவும் கருதப்படுகின்றது. மானுடப் பெண்டிருக்கு ஏற்படும் மாதவிடாய் இங்குள்ள பகவதிக்கும் ஏற்படுகின்றது என்பது அதிசயம் ஆகும். இருநூறு வருடங்களுக்கு முன்பு, கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை பாதிப்படைந்த நிலையில் புதிய ஐம்பொன்சிலை நிறுவப்பட்டது. அதன் பிறகு, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மாதவிலக்கு ஏற்பட்டு, திருப்பூத்து விழா நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இக்கோவில் கேரளாவின் தட்சிண கயிலாசமாக குறிப்பிடப்படுகிறது. ஆண்டின் வருடாந்திர விழா, டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இருபத்தெட்டு நாட்கள் இடம்பெறுகின்றது. செங்கனூர் மகாதேவா கோயில் ஆலப்புழாவிற்கு கிழக்கே ‘திருவல்லா-பந்தளம்’ சாலையில் அமைந்திருக்கிறது. செங்கனூர் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வரும் 1கி.மீ தொலைவில் இக்கோயில் இருக்கிறது. கேரள மாநிலத்தில் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து 117 கி.மீ தொலைவில் உள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

சிவாலயமான செங்கன்னூர் திருத்தலத்தில் ஈசன் கிழக்கு நோக்கி அருள்புரிய, அவர் சன்னதிக்குப் பின்னால் மேற்கு நோக்கியவளாக பகவதி வீற்றிருக்கின்றாள். திருச்சுற்றில், சாஸ்தா, பிள்ளையார், நீலக்கிரீவன் முதலானோர் வீற்றிருக்கின்றனர். கோயிற்சுவரை அண்டி “சுட்டம்பலம்” அரங்கும், கோயிற்பகுதியைச் சூழ “நாளம்பலமு”ம் அமைந்திருக்கின்றன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன. பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன. பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன. முதல் தலவரலாறு: தாட்சாயிணியின் உடல் பகுதிகள் பூலோகத்தில் 51 இடங்களில் விழுந்து, அவை அம்பிகையின் 51 சக்தி பீடங்களாக தோற்றம் பெற்றன. அம்பிகை உடலின், இடையின் கீழ்ப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் அமைந்திருப்பதாக கோவில் தல வரலாறு சொல்கிறது. செங்கனூர் சிவன் பார்வதி அம்மன் இரண்டாவது தல வரலாறு:- அகத்திய முனிவருக்குத் தங்களது திருமணக் காட்சியைக் காண்பிக்க சிவபெருமானும், பார்வதி தேவியும் தென்பகுதிக்கு வந்திருந்தனர். அவ்வேளையில், இங்கு பார்வதி தேவி வயதுக்கு வந்ததற்கான அடையாளமாக ருது என்ற பூப்பு நிகழ்வு நடந்தது என்பதன் அடிப்படையில், அம்மனுக்கு இங்கு பூப்புனித நீராட்டு விழா என்ற ருது சாந்தி கல்யாணம் நடைபெற்றது. அம்மன் வயதுக்கு வந்த நிகழ்வு நடைபெற்ற இந்த மலைப்பகுதி செந்நிறமாகிப் போனது என்றும், அதனால் இந்த இடம், மலையாளத்தில் செங்குன்னூர் என்று அழைக்கப் பெற்று, பிற்காலத்தில் செங்கன்னூர் என்று மாறி விட்டதாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்று அம்மனுக்கும், மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அம்மன் சன்னிதி அடைக்கப்பட்டு, உற்சவர் சிலை, கோவிலின் ஒரு பகுதியில் தனியாக வைக்கப்படும். மூன்று நாட்கள் கடந்த பின்னர், நான்காவது நாளில் சிலை மித்ரபுழை கடவு நதிக்குக் கொண்டு சென்று நீராட்டிய பின்னர் அலங்காரத்துடன் ஊர்வலமாக கோவிலுக்குக் கொண்டு வரப்படும். செங்கனூர் மகாதேவர் மூன்றாவது தல வரலாறு:- பகவதியின் மற்றொரு தோற்றமாகக் கருதப்படும் கண்ணகி, தனது கணவன் கோவலனுடன் மதுரைக்குச் சென்றார். கோவலன், தான் செய்து வந்த வணிகத்தை தொடங்குவதற்காகக் கண்ணகியின் காற்சிலம்பு ஒன்றை விற்க சென்ற நிலையில், அரசியின் சிலம்பைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடனாகக் குற்றம் சுமத்தி அரசவைக்குக் கொண்டு சென்றான். அங்கு, கோவலனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு கோவலன் கொல்லப்பட்டான். செய்தியறிந்த கண்ணகி, அரசவைக்குச் சென்று வழக்குரைத்தாள். வழக்கின் முடிவில், தனது தவறான தீர்ப்பை அறிந்த மன்னன் உயிர் துறந்தான். அதனைக் கண்டும் கோபம் குறையாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை நகரை தீக்கிரையாக்கினாள். அதன் பிறகு, கண்ணகி இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்து, தவமிருந்து, கோவலனுடன் சேர்ந்து தேவலோகம் சென்றதாக ஐதீகம். சேரன் செங்குட்டுவன், அங்கு கோவில் அமைத்து அம்மன் சிலையை நிறுவி, ‘செங்கமலவல்லி’ எனும் பெயரிட்டு வழிபட்டு வந்ததாக வரலாறு.

நம்பிக்கைகள்

காக்கை வலிப்பு போன்ற நோய் உடையவர்கள், இக்கோவிலில் வழிபாடு செய்தால், நலம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பகவதியை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கே மாதவிடாய் விழா என்ற ஒன்று நடக்கிறது. செங்கனூர் மகாதேவர் கோயிலில் வீற்றிருக்கும் பார்வதி தேவிக்கு பெண்களுக்கு ஏற்ப்படுவது போலவே மாதவிடாய் ஏற்ப்படுவதாகவும், அந்நாட்களில் பார்வதி தேவியின் வஸ்திரத்தில் ரத்தக்கறை தென்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மூன்று-நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பார்வதி தேவிக்கு மாதவிடாய் ஏற்படுவதாகவும், அப்படி பார்வதி தேவியின் வஸ்திரத்தில் மாதவிடாய்க்கான அறிகுறி தெரிந்ததும் ‘தாழமண்’ மற்றும் ‘வங்கிபுழா’ ஆகிய குடும்பங்களை சேர்ந்த மூத்த பெண்கள் வந்து அம்மனுக்கு மாதவிடாய் ஏற்பட்டதை உறுதிபடுத்துகின்றனர். அதன் பிறகு மூன்று நாட்களுக்கு அம்மனின் சந்நிதி மூடப்படுகிறது. அப்போது இக்கோயிலில் வேறொரு இடத்தில் பார்வதி தேவியின் படத்தை வைத்து பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் மூன்று நாள் மாதவிடாய் காலம் முடிந்ததும் நான்காம் நாள் அருகில் உள்ள பம்பை ஆற்றுக்கு பார்வதிதேவியின் சிலை கொண்டு செல்லப்பட்டு ‘ஆராட்டு’ என்னும் தூய்மைப்படுத்துதல் நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த ஆராட்டு நிகழ்வு தான் ‘திருப்பூதர ஆராட்டு’ என்கிற பெயரில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆற்றில் ஆராட்டு முடிந்தபிறகு பார்வதி தேவியின் சிலை யானை மீது வைக்கப்பட்டு கோயில் வாயிலை அடைகிறது. அங்கே மகாதேவர் சிவபெருமான் யானை மீது வீற்றிருந்து பார்வதி தேவியை கோயிலுக்குள் வரவேற்கிறார். பின்னர் மகாதேவரும், பார்வதி தேவியும் ஒன்றாக யானை மீது அமர்ந்தபடி கோயிலை மூன்று முறை வலம் வந்தபின் அவரவர் சந்நிதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன்ர். பொதுவாக இவ்விழா மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நான்காம் நாள் நடக்கும் ஊர்வலத்தில் பெண்கள் பெரும் திரளாக கைகளில் ‘தளப்போளி’ என்னும் தீபம் ஏந்தி கலந்துகொள்கின்றனர்.

திருவிழாக்கள்

ஈசனுக்கு மூன்று, தேவிக்கு இரண்டு என்று அன்றாடம் ஐந்து சரப்பலிகள் (பூஜைகள்) இடம்பெறுகின்றன. “திருப்பூத்து ஆராட்டு” என்பது, இக்கோவிலுக்கு மட்டுமே சிறப்பான, தேவியின் மாதவிலக்கு வைபவம் ஆகும். அம்மூன்று நாட்களும் தேவியின் திருமுன் மூடப்படும். திருப்பூத்து சிந்திய தேவியின் வெண்ணிறாடை, புனிதமாகப் போற்றப்படுகின்றது. மாதமொரு முறை நிகழ்ந்துவந்த திருப்பூத்து, அண்மைக்காலமாக, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதாகச் சொல்லப்படுகின்றது. திருப்பூத்து நிகழ்ந்த நான்காம் நாள், தேவி திருக்குளத்தில் நீராட்டப்படுவதும், பின் மகளிர் தாலப்பொலி ஏந்தி வணங்குவதும் நிகழும். தனு மாதத்து திருவாதிரையில் நிகழும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்திர உற்சவம், 28 நாட்கள் தொடர்ந்து, மகர மாதத்து திருவாதிரையில் நிகழும் “ஆறாட்டுடன்” (தீர்த்த உற்சவம்) முடிவுறுகின்றது.

காலம்

18 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செங்கனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

செங்கனூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top