Saturday Jan 18, 2025

சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம் – 629704. போன்: + 91- 4652 – 241 421.

இறைவன்

இறைவன்: தாணுமாலையர்

அறிமுகம்

தாணுமாலயன் கோயில், ஸ்தாணுமாலயன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. தாணுமாலயன் கோயில் சைவ மற்றும் வைணவப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் ஸ்தாணுமாலயன் என்ற பெயர் திரிமூர்த்திகளைக் குறிக்கிறது; “ஸ்தாணு” என்றால் சிவம்; “மால்” என்றால் விஷ்ணு; மற்றும் “அயன்” என்றால் பிரம்மா. கருவறையில் உள்ள ஒரே உருவத்தால் குறிப்பிடப்படும் மூன்று வெவ்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இந்தியா முழுவதிலும் உள்ள தனித்துவமானது. இந்த க்ஷேத்திரம் ஞானரண்யா என்றும் அழைக்கப்படுகிறது. தாணுமாலயன் கோயிலின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, சமய சமயத்தைச் சேர்ந்த பல கடவுள்களின் பிரசன்னம் மற்றும் ராமர் மற்றும் கிருஷ்ணர் உட்பட வைஷ்ணவம் போன்ற பல்வேறு பிரிவுகளான அம்மன் / தேவி மற்றும் முருக வழிபாட்டிற்கு உள்ளூர்மயமாக்கப்பட்ட தமிழ் பாரம்பரிய வழிபாடு ஆகும். இக்கோயில் சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலையில் நிறைந்துள்ளது. கன்னியாகுமரியுடன் இணைந்த நகரம் திருவிதாங்கூரின் ஒரு பகுதியாக இருந்தது. இது 1956 இல் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி உண்டு ஆனால் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர். ஒரு சமயம் அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர். அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர். திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க பச்சிளங்குழந்தைகளாக மாறினர். பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்க செய்தாள். சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவை கொடுத்தாள். அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகமிக மகிழ்ந்தவராய் மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர். இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர

நம்பிக்கைகள்

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

அயன், அரி அரன் ஆகிய முப்பெருங் கடவுளரும் இக்கோயிலில் வழிபடப் படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணுஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும். அனுமன்: இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது. பிரம்மாண்டமானது. இதன் உயரம் 18 அடியாகும். அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிகவும் விசேஷம். சிற்பக்கலை சிறப்பு: பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும். மண்டபங்கள் : இக்கோயிலில் கலை வேலைப்பாடுகள் மிகுந்த சில மண்டபங்கள் உள்ளன. அவை; 1. கலைநயத்துடனான சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம். 2. இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம். 3. திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம். 4. வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம். 5. பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை. சிறப்புகள்: • இக்கோயில் 5400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. • இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது. • இக்கோயிலில் கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பம் உள்ளது. இதை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள். • இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன. கொன்றையடி மிகவும் பழமை வாய்ந்தது. அங்குள்ள கொன்றை மரம் 2000 வருடங்களுக்கு முன் உயிருடன் இருந்ததாக ஆராய்ச்சியில் அறியப்பட்டது. ஆலயத்தின் உள் கருவான இந்த மையத்தை வைத்துதான் இந்த கோவில் எழுந்துள்ளது. முக்கிய மூலஸ்தானமாகிய கோவில் சுயம்புவாக கருதப்படுகிறது. வடகேடம் என்ற அதில் தாணு மாலய மூர்த்தியாக வழிபட்டு வருகிறார்கள். தெக்கேடம் என்ற மகாவிஷ்ணு திருவெங்கிடபெருமாளாக காட்சி தருகிறார். பாறையின் மேல் உயரமாக அமைந்துள்ள கைலாய நாதர் கோவில் மண்டபம் 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் சாட்சியம் அளிக்கிறது. 1238-ம் ஆண்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் கண்டியூர் உண்ணி என்பவரால் கட்டப்பட்டு அதன் நித்திய செலவுக்கு உள்ள வஸ்து வகைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளது. அறம் வளர்த்தம்மன் கோவில் 1444-ம் ஆண்டு தேரூரில் உள்ள பள்ளியறை நாச்சியார் குடும்பத்தாரால் கட்டப்பட்டதாகும். வீர பாண்டியன் மணி மண்டபத்திற்கு முன்பாக மிகப்பெரிய அரிய வகை கலை சிற்பங்கள் நிறைந்த செண்பக ராமன் மண்டபம் வேணாட்டு ராஜாவான ராமவர்ம ராஜாவால் 1471-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1545-ம் ஆண்டு மிகவும் எழில்மிக்க ராஜகோபுரம் விஜயநகராட்சி காலத்தில் வித்தல மகாராஜாவால் கட்டப்பட்டது. 1888-ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் கோபுரம் சீர் செய்யப்பட்டது. 1587-ம் ஆண்டு கோவில் நிர்வாகிகளான யோகஸ் தானிகர் தெற்கு மண்டபத்தில் புருஷோத்தமரு நீலகண்டரு என்பவரால் பெரிய பிள்ளையார் கோவில் கட்டப்பட்டது. முக்குறுணி பிள்ளையார் என்று கூறும் அந்த கணபதியின் நித்திய செலவுக்கு தேவையான வஸ்து வகைகளையும் விட்டுக் கொடுத்துள்ளார். அதனால் அது “நீலகண்ட விநாயகர்” என்று இப்போதும் அழைக்கப்படுகிறது. அவரது செயல்களை பெருமைப்படுத்த கோவில் மேலாளர் அலுவலகத்திற்கு முன்னால் தெற்கு பக்கமாக அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் தெப்பத்திருவிழா – 1 நாள். ஆவணி பெருநாள் திருவிழா – 9 நாள் மார்கழி திருவாதிரை திருவிழா- 10 நாள் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் மாசி திருக்கல்யாண திருவிழா – 9 நாள் திருவிழா.

காலம்

1300 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சுசீந்திரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகர்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top