சிந்தல வெங்கடரமணர் கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி
சிந்தல வெங்கடரமணர் கோயில், தாடிபத்திரி, ஆந்திரப் பிரதேசம் – 515411.
இறைவன்
இறைவன்: வெங்கடரமணர்
அறிமுகம்
சிந்தல வெங்கடரமணர் கோயில் அல்லது சிந்தலராயசுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரி எனும் நகரத்தில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணக் கோயில் ஆகும். தாடிப்பத்திரி நகரத்தில் பாயும் பென்னா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் கருங்கல் சிற்பங்களால் புகழ்பெற்றது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை ஆந்திராவின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. இக்கோயிலின் கருட மண்டபம், கருங்கல் சக்கரங்கள் கொண்ட தேர் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் இராமாயண நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் வெளிப்புற சுவர்களில் புடப்புச்சிற்பங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளது. அந்நிய படையெடுப்புகளினால் சிற்பங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
இங்கு கோயிலின் மூலவரான வெங்கடேஸ்வரர் புளிய மரத்தில் கீழ் கோயில் கொண்டுள்ளதால், சிந்தல வெங்கடேஸ்வர் எனப்பெயர் பெற்றார். தெலுங்கு மொழியில் சிந்தா என்பதற்கு புளியமரம் எனப்பொருளாகும். இக்கோயில் 16-ஆம் நூற்றாண்டின் நடுவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. கிருஷ்ணதேவராயரின் அமைச்சர் இரண்டாம் பெம்மசானி திம்மைனயுடு என்பவர் இக்கோயிலை கட்டினார். இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
இக்கோவிலில் அனுமன் இராமரை வணங்குதல், சீதையிடம் கணையாழி மோதிரம் அளித்தல், நெற்றி சூடாமணி ஆபரணம் பெறுதல், அனுமன் அரக்கருடன் சண்டையிடுதல், இந்திரஜித்தின் பாணத்தால் கட்டுண்டது, தனக்கு இருக்கை அளிக்க மறுத்த இராவணன் முன் தன் வாலினால் அனுமன் உயர்ந்த ஆசனம் எழுப்பி இராவணிடம் உரையாடுதல் போன்றை இராமாயண நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் வெளிப்புற சுவர்களில் புடப்புச்சிற்பங்களாக அழகுற வடிக்கப்பட்டுள்ளது. சீதையுடன் இருக்கும் பொழுது உருவை சிறியதாகவும், அரக்கருடன் இருக்கும் பொழுது உருவைப் பெரியதாகவும் அனுமனின் உருவம் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
வருடாந்திர பிரம்மோற்சவம் (திருவிழா), அஷ்டமி (துர்காஷ்டமி)
காலம்
16 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
Archaeological Survey of India (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாடிபத்திரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாடிபத்திரி
அருகிலுள்ள விமான நிலையம்
கடப்பா