Friday Dec 27, 2024

சாஞ்சி ஸ்தூபி எண் 1, மத்திய பிரதேசம்

முகவரி

சாஞ்சி ஸ்தூபி, சாஞ்சி, மத்திய பிரதேசம் – 464661

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன. சாஞ்சியில் நிறைய ஸ்தூபிகள் இருந்தாலும் மூன்று ஸ்தூபிகள் மிகவும் பிரபலமானவை. அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி பிரம்மாண்டமானது. 215 அடி (16.4 மீ) உயரமுள்ள குன்றின மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

புராண முக்கியத்துவம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி மெளரிய அரசர்களால் ஆளப்பட்டுவந்தது. மௌரிய வம்சத்தின் தலைசிறந்த அரசரான அசோகர், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தைத் தழுவினார். புத்தரின் தத்துவங்களைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பரப்புவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றுதான் சாஞ்சி ஸ்தூபி. மிகப் பழமையான கல்லில் அமைக்கப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. அசோகரின் மனைவி தேவி, குன்றுகளின் மேலுள்ள அழகான இந்த நகரத்தில் ஸ்தூபி கட்ட முடிவு செய்தார். அவரின் மேற்பார்வையில் முதல் ஸ்தூபி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்களும் அவர்களுக்குப் பின்வந்த அரசர்களும் மேலும் பல ஸ்தூபிகளைக் கட்டினர். முதல் ஸ்தூபிக்கு மெருகூட்டப்பட்டது. ஸ்தூபியைச் சுற்றி மரவேலியும் நான்கு பக்கங்களில் தோரண நுழை வாயில்களும் அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சம் புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். புத்தரின் சிலைகளும் மற்ற சிற்பங்களும் வடிக்கப்பட்டன. கி.பி.7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. புத்த மதத்தின் தாயகமாகப் பார்க்கப்பட்டது. கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.

சிறப்பு அம்சங்கள்

சாஞ்சியில் நிறைய ஸ்தூபிகள் இருந்தாலும் மூன்று ஸ்தூபிகள் மிகவும் பிரபலமானவை. அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி பிரம்மாண்டமானது. 215 அடி உயரமுள்ள குன்றின மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்தூபியின் நான்கு திசைகளிலும் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிலைகளுடன் கூடிய தோரண வாயில்கள் உள்ளன. தெற்குத் தோரண வாயிலில் புத்தரின் பிறப்பு, அவர் வாழ்க்கையில் நடந்த அதிசயங்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அருகே ஒரே கல்லினால் ஆன 42 அடி உயர அசோகத் தூண் நிறுவப்பட்டு இருக்கிறது. உச்சியில் நான்கு திசைகளை நோக்கி நான்கு சிங்கங்கள் இருந்தன. காலப்போக்கில் தூண் உடைந்து விட்டது. உடைந்த பாகங்கள் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கிழக்குத் தோரண வாயிலில் இளவரசர் சித்தார்த்தன் அரண்மனை வாழ்வைத் துறந்து செல்லும் காட்சியும் தாயார் மாயா கர்ப்பமுற்றிருந்தபோது கண்ட கனவு காட்சியும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தோரண வாயிலில் புத்தரின் ஏழு அவதாரங்களும் காணப்படுகின்றன. சாரநாத் மான் தோட்டத்தில் புத்தர் பேசிய முதல் பிரசங்கக் காட்சியும் உள்ளது.

காலம்

கிமு.3 – நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போபால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

போபால்

அருகிலுள்ள விமான நிலையம்

போபால்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top