Sunday Nov 24, 2024

கோயில்-கொத்தனூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

கோயில்-கொத்தனூர் பசுபதீஸ்வரர் சிவன்கோயில் கோயில்-கொத்தனூர், வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 606302.

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர்

அறிமுகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் – வேப்பூர் குறுக்குசாலைக்கு நடுவில் இருபது கிமி தொலைவில் உள்ளது கண்டப்பன்குறிச்சி, இதன் தெற்கில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது கோ.கொத்தனூர். கோயில்-கொத்தனூர் என்பதன் சுருக்கமே இது. NH38 ல் உள்ள வேப்பூர் குறுக்குசாலை எனும் இடத்தில் இருந்து ஏழு கிமி தான். இவ்வூரில் பெரியதொரு ஏரியின் கிழக்கு கரையில் பெரிய கோயிலாக திகழ்கிறது இந்த சிவாலயம், இதனை வைத்தே கோயில் கொத்தனூர் என அழைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தொன்மம் என்றால் நாயக்கர்கள் ஆண்ட 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகலாம். முற்றிலும் கைவிடப்பட்ட கோயில், மதில் சுவர்கள் இடிந்து கிடக்கின்றன, இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவியும் இவருக்கு இணையாக இடப்பாகம் கொண்டு கிழக்கு நோக்கியுள்ளார். இறைவன் சன்னதியின் முன்புறம் உடைந்த குடிநீர் குழாயின் மூலம் தண்ணீர் தேங்கி கிடக்கிறது அதில் இரண்டு பன்றிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

புராண முக்கியத்துவம்

இறைவியின் கருவறை முகப்பு மண்டபத்தில் உள்ள தூணில் கீழ்புறம் ஒரு சிலையும் அதன் மேல் சதுரத்தில் அழகப்ப நாட்டார் குமாரர் ராமலிங்கம் நாட்டார் தர்மம் என வெட்டப்பட்டுள்ளது. மற்றொரு தூண் கல்வெட்டில் கோயில்கொத்தனூர் நாட்டார் சேதிராயர் அழகப்பனாட்டார் குமாரர் ராமலிங்கநாட்டார் கொடுத்த தர்மத்தின் விளக்கம் சில வரிகளாக உள்ளது. கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள திடலில் பெருமாள் கோயில் ஒன்றும் விநாயகர் கோயில் ஒன்றும் முருகன் கோயில் ஒன்றும் மாரியம்மன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இவை இந்த சிவாலயத்தின் இரண்டாம் பிரகாரத்தில் இருந்த மூர்த்திகளாகலாம். சமீபத்தில் பெருமாள் கோயில் குடமுழுக்குடன் வண்ணக்கோலம் பூண்டுள்ளது. இக்கோயிலின் இடையில் உள்ள வழிதான் சிவாலயம் செல்லும் முகப்பு உள்ளது. அரைஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இறைவன் பசுபதீஸ்வரர் கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல்லும், அதன்மேல் விமானம் செங்கல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்னர் இடைநாழி, அர்த்தமண்டபம் முக மண்டபம் என உள்ளது விமானம் மேல் பலவகை மரங்கள் வேருன்றி முகப்பு மண்டபங்களை பிளந்துகொண்டு எக்களிப்பாக சிரிக்கிறது. பெரும் தடிமனான கருங்கல் சுவர்கள், இருகூறாக பிளக்கப்பட்ட சூரபத்மன் மரமாக வந்தது போல் மரம் வெளிகிளம்பி உள்ளது. கருவறை கோட்டத்தில் முகப்பு மண்டபம் இரு தூண் தாங்கும் வண்ணம் முன்னிழுக்கப்பட்டுள்ளது. அதில் தென்முகன் சிலை, எதிரில் நந்திக்கு பதில் சிங்கமொன்றுள்ளது. இது மிக அபூர்வமான அமைப்பாகும். அருகில் உள்ள விநாயகர் கோட்டம் காலியாக உள்ளது. தென்முகனின் அருகில் உள்ள சுவர் பகுதியில் பக்ஷி ராஜன் இறைவனை வணங்கும் காட்சி உள்ளது. பின்புறம் லிங்கோத்பவர் உள்ளார், வடக்கில் பிரம்மன், துர்கை உள்ளனர். கம்பீரமான உடற்கட்டு கொண்டு மார்கச்சை இலாத வகையில் உருவாக்கப்பட்டுள்ள விஷ்ணு துர்கை, இவரது காலம் என்ன என அறியமுடியவில்லை. அருகில் உள்ள சன்னதியில் சண்டேசர் இதுகாறும் இக்கோயிலின் வரவு செலவுகளை பார்த்துக்கொண்டு இருந்தவர் இன்று அவருக்கு மேல் உள்ள விமான கூம்பு பகுதி உடைந்து வீழ்ந்துவிட்டதால் வானம் பார்த்து அமர்ந்திருக்கிறார். (இதை தட்டச்சு செய்யும் நேரம் பெருமழை பொழிந்து கொண்டுள்ளது) அங்கே சண்டேசர் என்செய்துகொண்டுள்ளாரோ?? இறைவனின் கருவறை வாயில் முகப்பு கதவை மெதுவாக திறந்து கொண்டு உள்ளே சென்றால் தூண்கள் தாங்கிய முகப்பு மண்டபம் சற்று தரை உள்வாங்கி கிடக்கிறது. ஆனால் இறைவன் மின் விளக்கொளியில் நேற்றைய தின அலங்காரத்தில் அழகுடன் காட்சியளித்தது இவ்வளவு வேதனையில் சற்றே ஆறுதலை தந்தது. இறைவனின் எதிரில் இடைநாழி பகுதியில் நந்தி இறைவனை பார்த்தவாறு.. இடது புற சுவற்றில் சற்றே உள்ளடங்கிய மாடத்தில் அழகப்ப நாட்டாரும் அவரது குமாரன் ராமலிங்க நாட்டாரும் இறைவனை முப்போதும் கைதொழுதபடி நிற்கின்றனர். பிரகார மதில்கள் முற்றிலும் சிதைந்து போய்விட்டது. விநாயகர் மூலையில் பிரம்மாண்டமான அரச மரம் அவரது சன்னதியை மொத்தமாக ஊடறுத்துவிட்டது என்றே சொல்லலாம். கருவறையின் நேர் பின்புறம் உள்ள சன்னதியில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்ளார். இறைவனின் கருவறை போலவே இங்கும் விமான பாகம் தவிர அனைத்தும் கருங்கல் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தென்புறம் உள்ள கோஷ்டத்தில் ஒரு தேவியின் சிலையும் இரு புறமும் முருகன் விநாயகர் சிற்பங்கள் உள்ளன ஒரு புறம் நடராஜரும் உள்ளார். பின்புற கருவறை சுவற்றில் இறைவனும் இறைவியும் ரிஷபாரூடராக உள்ளன. இறைவியின் கருவறை முகப்பு மண்டபத்தின் இருபுறமும் விநாயகர் முருகன் சிலைகள் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளன, இறைவியின் முன்னர் திருக்கோயிலின் வெளியில் ஒரு சிறிய கருங்கல் தூண் மண்டபத்தில் நந்தி உள்ளார். இறைவி கிழக்கு நோக்கிய கருவறையில் நின்றகோலம் கொண்டுள்ளார். கருவறை வாயிலில் ஒரு விநாயகரும், பைரவரும் இருத்தப்பட்டு உள்ளனர் இறைவியினது முன்னம் உள்ள முகப்பு மண்டபத்தில் ஒரு தூணில் ராமலிங்க நாட்டாரும் அவரது தலைக்கு மேல் உள்ள சதுரத்தில் தர்மம் செய்தமை பற்றியும் மற்றொரு தூணில் அழகப்ப நாட்டார் சிலையும் அவர் செய்த தருமம் பற்றிய தகவலும் உள்ளன. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

15 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோ.கொத்தனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top