Sunday Nov 24, 2024

கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில் கொட்டையூர்-612 002, தஞ்சாவூர். போன்: +91 435 245 4421

இறைவன்

இறைவன்: :கோடீஸ்வரர், கைலாசநாதர் இறைவி: பந்தாடு நாயகி, கந்துக கிரீடாம்பாள்

அறிமுகம்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவத்தலமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

திரிஹர்த்த தேசத்தை ஆண்டவர் சத்தியரதி. இவரது மகன் சுருசி ஒரு சாபத்தின் காரணமாக பிசாசு வடிவம் பெற்றான். இவனது உருவைக்கண்டு ஊரே நடுங்கி ஓடியது. தன்னைக் கண்டாலே ஓடும் மக்களை தன்வசம் மீண்டும் இழுக்க அவன் சிவபெருமானை வணங்கினான். அவரது அருளாசியின்படி கொட்டையூர் என்ற தலத்திற்கு சென்று வணங்கும்படி கூறினார். அவனும் கொட்டையூருக்கு வந்து இங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கினான். இந்த தீர்த்தம் ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்டது. இதை அமுதக்கிணறு என்கிறார்கள். இந்தக் கிணற்று நீரில் நீராடி முன்பைவிட வனப்பான உருவம் பெற்றான். இப்போதும் இந்தக்கிணறு இங்கு உள்ளது. பல பெண்கள் இந்தக்கிணற்று நீரை தங்கள் தலையில் தெளித்து அழகிய வடிவம் பெறலாம் என நம்புகிறார்கள்.

நம்பிக்கைகள்

தோஷ தொல்லை, அழகிய வடிவம் பெற இத்தலத்தில் பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

கல்வி அபிவிருத்தியை தரும் தீர்த்த ஸ்தலம் . மார்க்கண்டேயர் வழிபட்ட தலம். ஆமணக்கு கொட்டைச்செடியின்கீழ் லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. பத்திரியோகி முனிவருக்கு இறைவன் கோடிவிநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாக காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக – காய்ந்தமாதிரி காணப்படுகிறது. இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் பதக்கங்கள் பெறுவதற்காக இந்த அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அமுதக்கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாக நம்பிக்கை. கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை. * “கொட்டையூரில் கால் வைத்தால் கட்டை’ என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப்பாவம் கோடி அளவு பெருகிவிடும். புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் அதே போல கோடி அளவு கூடிவிடும். எனவே பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு ஒரு காலத்தில் வராமலே இருந்தார்கள். அவர்களுக்கு பந்தாடு நாயகி ஆறுதல் கூறி பாவங்களை உதைத்து எறிந்தாள். தீராத பாவம் செய்தவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மனம் திருந்தி செல்லலாம்.

திருவிழாக்கள்

பங்குனி உத்திரம், திருவாதிரை, சிவராத்திரி, புரட்டாசி மாதத்தில் அம்புபோடும் திருவிழா ஆகியவை முக்கியமானது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top