குதம்பைசித்தரின்தரிசனம் – மயூரநாதர்திருக்கோயில்
>> குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற ஈற்று சொல் வருகின்றது. ‘குதம்பை’ என்ற காதணி அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப் பட்டார் என்றும் கூறுவர்…
>> பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது..குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்ற குதம்பையாருக்கு குரு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார். அதற்கு மாதவர் “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொருட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.
>> ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார் . அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. ஒரு முறை தவத்தில் ஆழ்ந்த குதம்பையாருக்கு உலக நன்மைக்காக பரந்தாமனால் வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும் ..
>> யார் வாசியோகம் என்ற கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.
>> இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது.. சமாதியின் மேல் விநாயகாரின் திருவுருவம் உள்ளது மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், மழை பொழியும் என்பது நம்பிக்கை .. ஆரம்ப காலத்தில் இங்கிருந்த சந்தன மரத்தில் உருவான விநாயகர் இவர். அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் இவரை, “அகத்திய சந்தன விநாயகர்’ என்றும் அழைக்கிறார்கள்..
“மெய்ப்பொருள் கண்டு விளங்கும் மெய்ஞானிக்குக்
கற்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய்”
கற்பங்கள் ஏதுக்கடி…
கடவுளின் உண்மை உணர்ந்த ஞானிகளுக்கு உடலை வளர்க்கும் காயகற்பங்கள் தேவையில்லை என்பது குதம்பையாரின் தனிக் கருத்தாகும். நோயற்ற வாழ்வு வாழும் அவர்களுக்கு யோக சித்திகள் மூலம் உடலை வலுப்படுத்தும் காயகற்பம் தேவையா என்ற வினாவை எழுப்பிய அவர் வாசியோகமான பிரணாயமத்தை பின்பற்றும் ஒருவருக்கு யோகம்கூடத் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகின்றார்.
>> குதம்பை சித்தரின் சமாதி கொண்ட இக்கோவில் .. அருள்மிகு அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாயவரம் என அழைக்கப்படும் மயிலாடுதுறையில் உள்ளது. இவ்வூர் சிதம்பரத்தில் இருந்து 42 கிலோமீட்டரும் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 35 கிலோமீட்டரும் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த சிறப்பு மிகு மயிலாடுதுறையில் இருந்து, பல சித்தர்களின் சமாதிகள் மற்றும் நவகிரஹ ஸ்தலங்கள் சென்று வருவது சுலபம்.
>> இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை. இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார்..அம்பாள் மயில் வடிவம் கொண்டு சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்’ என்றும் பெயர் பெற்றார்..அபயாம்பிகை சன்னதியில் காலடி வைத்த உடன் ஒரு தாய் தன் குழந்தையை இரு கை நீட்டி அழைப்பது போல அம்மையின் கருணை இழுக்கும் …இங்குள்ளோர் அனைவர்க்கும் அபயாம்பா …!! என்பதில் அத்தனை ஆனந்தம் இதை நானும் உணர்ந்து இருக்கிறேன்..அன்னையின் அழகை காண கண்கோடி வேண்டும்..
>> இக்கோயில் பிரகாரத்தில் நவக்கிரக சன்னதியில் உள்ள சனிபகவான், தலையில் அக்னியுடன் “ஜுவாலை சனி’யாக இருக்கிறார். இவருக்கு அருகில் தனியே சனீஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து வடக்கு திசையை நோக்கி, சிவலிங்க பூஜை செய்தபடி இருக்கிறார். இந்த அமைப்பை காண்பது அபூர்வம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சனியின் பார்வை குறையும் என்பது நம்பிக்கை..
>> நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் இக்கோயிலில் சிவனுடன் ஐக்கியமாயினர். நாதசர்மா ஐக்கியமான லிங்கம் மேற்கு பார்த்தபடி, அவரது பெயரிலேயே இருக்கிறது. அவரது மனைவி ஐக்கியமான லிங்கம், அம்பாள் சன்னதிக்கு வலப்புறத்தில் “அனவித்யாம்பிகை’ என்ற பெயரில் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிற சேலைதான் கட்டுகின்றனர்.
>> அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம்உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
References from: https://www.facebook.com/rammy.sithargal/photos