Thursday Dec 26, 2024

குடந்தைக் கீழ்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், (குடந்தைக் கீழ்க்கோட்டம்) கும்பகோணம் – 612 001. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-243 0386.

இறைவன்

இறைவன்: நாகேஸ்வரர் இறைவி: பெரியநாயகி, பிருஹந்நாயகி

அறிமுகம்

குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகேசுவரசுவாமி கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. நரகாசுரன், சூரியன் முதலானோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சூரியன் வழிபட்ட இத்தலத்தில் இன்றும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய தேதிகளில் சூரிய கிரகணங்கள் மூலவரின்மீது நேராக விழுவதைக் காணமுடியும். இறைவன் நாகேசுவரர், இறைவி பெரியநாயகி. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 27ஆவது சிவத்தலமாகும். தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகேயுள்ள பேரையூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோயில் ஆகியன பிற நாகர் கோயில்களாகும். இத்தலத்து இறைவன் நாகேஸ்வரர். வில்வத்தில் இருந்து தோன்றியதால் வில்வனேசர் என்றும், ஆதிசேடனுக்கு அருள் செய்ததால் நாகேசுவரர் என்றும், பாதாளத்தில் இருப்பதால் பாதாள லிங்கேசர் என்றும் வழங்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி அம்மை.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான். ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் தியை தருவதாக உறுதியளித்தார். பரிபூரண தி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு காலத்தில் வெள்ளத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் உச்சியிலிருந்த வில்வம் தவறி விழுந்தது. அந்த இடம் வில்வவனம் என போற்றப்பட்டது. அவ்விடத்தில் இக்கோயில் அமைந்ததால் சுவாமிக்கு வில்வனேசர் , பாதாள பீஜநாதர் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. மடந்தை பாகர், செல்வபிரான் என்றும் சுவாமிக்கு பெயர்கள் உண்டு.

நம்பிக்கைகள்

இந்தச் சன்னதியில் ஞாயிறு மாலை 4.30 – 6.00க்குள் ராகுகால வேளையில் பூஜை செய்தால் சகலநோய்களும் நீங்கும். இறுதிக்காலத்தில் உண்டாகும் மரண துன்பம் அறவே இல்லாமல் போகும். ரிஷபத்தின் முன்நிற்கும் உமையொரு பாகனை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றுகூடுவர். பிரியாமல் இருப்பவர்கள் எந்நாளும் பிரியமாட்டார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சித்திரை மாதத்தில் சூரியன் ஒளி 11, 12, 13 தேதிகளில் லிங்கத்தின்மீது படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 90 வது தேவாரத்தலம் ஆகும். 1923ம் ஆண்டில் இந்த கோயில் புதர் மண்டிக்கிடந்தது. பாடகச்சேரியை சேர்ந்த ராமலிங்க சுவாமி என்பவர் தனது கழுத்தில் பித்தளை செம்பு ஒன்றை கட்டிக்கொண்டு பிச்சை எடுத்து, சிறுகச்சிறுக பொருள் சேர்த்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்துவைத்தார். அதன்பிறகு 1959ல் கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. கடைசியாக 1988ல் கும்பாபிஷேகம் நடந்தது. நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது. சூரியன் இத்தலத்தில் சித்திரை 11, 12, 13 தேதிகளில் வழிபடுகிறான். அப்போது லிங்கத்தின்மீது ஒளி படும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகுதோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். அம்பாள் பெரியநாயகி தெற்கு நோக்கிய சன்னதியில் அபயகரத்துடன் காட்சி தருகிறாள். இக்கோயிலின் சிறப்பம்சமே பிரளயகால ருத்திரர் சன்னதிதான். மேலும் விஷ்ணு துர்க்கை, சூரியன் ஆகியோருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் உள்ளது. உள்ளே சென்றதும் இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக தீர்த்த கிணறும் இருக்கிறது. வலப்பக்கம் பிருகன்நாயகி சன்னதியும், நடராஜ சபையும் உள்ளன. இந்த நடராஜ மண்டபம் தேர் வடிவத்தில் உள்ளது. இரு புறத்திலும் உள்ள கல் தேர் கரம் மிக அருமையாக இருக்கும். இந்த கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டு குதிரைகளும், நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இந்த மண்டபம் மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு “ஆனந்த தாண்டவ நடராஜ சபை’ என பெயர். நடராஜரின் நடனத்திற்கு ஏற்ப தாளம் போடும் பாவனையில் சிவகாமி அம்மையும், வேறு எங்கும் இல்லாதவிசேஷமாக நடராஜரின் அருகில் மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் கண்டு ரசிக்கத்தக்கது. காவல் தெய்வமான படைவெட்டி மாரியம்மன், வலஞ்சுழி விநாயகர், அய்யனார், சப்த மாதாக்கள், சுப்ரமணியர், சப்த லிங்கங்கள், வைத்தீஸ்வரர், சோமாஸ்கந்தர், சண்டேஸ்வரர், சிவசிவ ஒலி மண்டபம், நவக்கிரக சந்நதி, தண்டூன்றிய விநாயகர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா ஆகிய ஒட்டுமொத்த தெய்வங்களை இத்தலத்தில் தரிசிக்கலாம். இது ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னிவீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இந்த சன்னதிகளின் அருகே செல்லவே பக்தர்கள் பயப்படுகிறார்கள். அந்த அளவுக்கு இரு சிலைகளும் உக்கிரமாக உள்ளது.

திருவிழாக்கள்

மகாமகத்தன்று சுவாமி இங்கிருந்து மகாமக குளத்திற்கு தீர்த்தவாரிக்கு செல்வது மிகப்பெரிய விசேஷம். இதுதவிர நவராத்திரி, திருவாதிரை, பங்குனி பெருவிழா ஆகியவை விசேஷம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top