கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் – 611 104. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 276 733.
இறைவன்
இறைவன்: அட்சயலிங்கேஸ்வரர், கேடிலியப்பர், இறைவி: சுந்தராகுஜம்பல்
அறிமுகம்
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் அப்பர், சம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 84ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் மூலவர் கேடிலியப்பர். தாயார் வனமுலையம்மன். இச்சிவாலயம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், வசிட்டர், முருகப்பெருமான் முதலானோர் வழிபட்ட திருத்தலம். முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு தடங்கல் ஏற்படா வண்ணம் காவல்காத்த அஞ்சுவட்டத்தம்மன் காளி கோயில் சிறப்பானது.[1] இத்தல விநாயகர் பதரிவிநாயகர்.
புராண முக்கியத்துவம்
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரனை கொன்ற கொலைப்பாவம் நீங்க சிவனை வேண்டினார். கீழ்வேளூர் திருத்தலத்தில் குளம் உண்டாக்கி சிவனை வழிபட்டால் பாவம் விலகும் என சிவன் அருளினார். அதன்படி முருகப்பெருமானும் நவவீரர்களுடன் இத்தலம் வந்தார். முதலில் முழுமுதற்கடவுளான விநாயகரை மஞ்சளால் பிடித்து வழிபட்டார். அதுவே இப்போது கீழ்வேளூர் அருகே “மஞ்சாடி’ எனப்படுகிறது. அடுத்து சிவலிங்க பூஜை செய்வதற்காக, தேவதச்சன் மயனை கொண்டு அருமையான சிவாலயத்தை கட்டி, புஷ்கலம் எனப்படும் விமானத்தையும் அமைத்தார். கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் தனது வேலால் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் தானும், தன்னுடன் வந்த நவவீரர்களையும், சேனாதிபதிகளையும், பூதப்படையினரையும் சேர்ந்து நீராடினார். இதனால் இத்தலம் “வேளூர்’ ஆனது. பின் முருகன் சிவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். இந்த தவம் முழுமையடையாமல் இருக்க தீய சக்திகள் இடையூறு விளைவித்தன. இதிலிருந்து தன்னை காக்க பார்வதியை அழைத்தார் முருகன். முருகன் அழைத்தவுடனேயே தாய் பார்வதி, “அஞ்சுவட்டத்தம்மன்’ என்ற திருநாமம் கொண்டு நான்கு திசை மற்றும் ஆகாயத்திலுமாக சேர்த்து காவல் புரிந்தார். சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால் தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆஸ்ரமத்துக்கு சென்று, அரசன் என்ற ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால், தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, “கழுதை போல் கத்துகிறாயே, நீ கழுதையாகப் போ,” என்று சபித்தார். மற்றொரு காட்டரசன் விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்க சென்றவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர் சபித்தார்.அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றை பொருள் சுமக்க பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன. கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன. ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின் நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள் என்று அசரீரி ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன. சிரஞ்சீவியாக விளங்கும் மார்கண்டேய முனிவர் ஒரு நாள் தம் நித்திய சிவ பூஜையை துவங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து, கடல் பொங்கி அண்டபகிரண்டங்கள் அழியத் துவங்கியது. “எந்தக்காலத்திலும் அழியாத தென்னிலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாய்”என்று அசரீரி ஒலித்தது. அதன்படி மார்கண்டேய முனிவர் வணங்கி பேரு பெற்ற இடம் அட்சயலிங்க சுவாமி கோயில். இது உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலமாக விளங்குமென குறிப்பு உள்ளது.
நம்பிக்கைகள்
பாவங்கள்,தோஷங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
வேளூர் என்ற பெயருடைய தலங்கள் பல இருந்ததால் கிழக்கே உள்ள இத்தலம் “கீழ்வேளூர்’ ஆனது. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோயில்களுள் இதுவும் ஒன்று. இங்குள்ள அஞ்சுவட்டத்தம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அகத்தியர் பூஜித்த லிங்கமும் உள்ளது. இங்குள்ள நடராஜர் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கிய நிலையில் பத்து திருக்கரங்களுடன் அகத்தியருக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். நோய் தீரும் பிரார்த்தனை: படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை வழிபட்டார் பிரம்மா. அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் கிடைத்தது. இங்குள்ள திருமஞ்சனக்குளம் தோஷ நிவர்த்தியை அளிக்கிறது. நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் மூழ்கி தன் சாபம் நீங்கப் பெற்றான். தென்மேற்கு மூலையிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் தோல் நோய் குணமடைவதாக நம்பிக்கையுள்ளது. சிற்ப வேலைப்பாடு: அம்பிகை பிம்பம் சுதையால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித்தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. முருகன் வடக்குப்பார்த்து பாலரூபமாய் புன்சிரிப்புடன் நின்று தவம் புரிகிறார். தேவநாயகர் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருவுருவம் சிறப்பானதாகும். கோயிலிலுள்ள சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும், வளைந்து தொங்கும் சட்டங்களும், அவற்றின் நுனியில் வாழைப்பூத் தொங்கல்களும், அதைத் தம் மூக்கால் கொத்தும் கிளிகளும் சிற்ப வேலைப்பாடுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. விசேஷ அம்பாள்: மூலவர் அட்சயலிங்க சுவாமி என்ற கேடிலியப்பர் என்றும், அம்பாள் சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பத்ரகாளியின் அம்சமான “அஞ்சுவட்டத்தம்மன்’ என்ற தெய்வமும் இங்கு குடியிருக்கிறாள். நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக விளங்குவதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இவள் ஒரு சமயம் ஐந்துமுறை ஆகாயத்தில் வட்டமடித்து நடனமாடியதாகவும், அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. எப்படியாயினும், இவள் ஆகாய தெய்வம் என்பதால், அடிக்கடி விமானபயணம் மேற்கொள்வார், இந்த அம்பாளை வணங்கி விபத்தின்றி பயணம் செய்ய வேண்டிக் கொள்ளலாம். பாலசுப்பிரமணியர், அகஸ்தியர், ஆளுங்கோவேஸ்வரர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் சன்னதிகளும் இங்கு உள்ளன. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன கணேசரும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழாக்கள்
நவராத்திரி, கந்தஷஷ்டி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம் சித்ராபவுர்ணமியில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழ்வேளூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி