Saturday Nov 16, 2024

கீழக்காட்டூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

கீழக்காட்டூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கீழக்காட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்- 612502

இறைவன்

இறைவன்: வரதராஜப்பெருமாள் இறைவி: மஹாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி

அறிமுகம்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்- மணல்மேடு பேருந்து சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கீழக்காட்டூர் என்ற இந்த தலம். ஆலயம் அமைப்பதில் பல்லவர்கள் வல்லவர்கள். அவர்கள் கட்டிய ஆலயங்கள் தமிழ் நாட்டில் ஏராளம். அவைகள் இன்றும் பல்லவ மன்னர்களுடைய பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருப்பது நிஜம்.மாமன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் (கி.பி.600-630), அவன் செய்த தெய்வத் தொண்டுகளும், ஆலய திருப்பணிகளும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. வரதராஜ பெருமாளுக்கு திருக்கோவில் கட்ட நினைத்த மன்னன் நான்கு வேதங்களிலும் சிறந்த வேத விற்பன்னர்களை ஓரிடத்தில் குடியமர்த்தினான். அவன் குடியமர்த்திய அந்த இடத்திற்கு அவணிமாணிக்கம் எனப் பெயரிட்டான். அந்த ஊரில் வரதராஜ பெருமாளுக்கு ஆலயம் ஒன்றை கட்டுவித்தான். அவணி மாணிக்கம் என்ற பெயர் காலப்போக்கில் ‘கீழக் காட்டூர்’ என மாறியது. மகேந்திர வர்மன் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டிய அந்த ஆலயமே கீழக்காட்டூரில் உள்ள வரதராஜப்பெருமாள் ஆலயம். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே கருடாழ்வார் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார்.

புராண முக்கியத்துவம்

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் விசாலமான மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் கீழ்புறம் பக்த ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசல் இடதுபுறம் பிள்ளையாரும், வலது புறம் நாகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் வரதராஜப் பெருமாள், பத்ம பீடத்தின் மேல் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இருபுறமும் தாயார் ஸ்ரீதேவியும், பூதேவியும் அருள்பாலிக்கின்றனர். பல்லவர் கால பெருமாள் திருமேனிகளில் இங்கு சேவை சாதிக்கும் வரதராஜ பெருமாளின் திருமேனியே மிகப் பெரிய திருமேனி எனச் சொல்கின்றனர் பக்தர்கள். சுயம்பு மூர்த்தியான இத்தல பெரு மாளின் திருவுருவம் கண்களை மகிழ்விப்பதாக உள்ளது. மேல் இரு கரங்களில் பொன்னாழியும், வெண் சங்கும் வீற்றிருக்க, கீழ் இடது கரத்தை மடி மீது வைத்த வண்ணம் இருக்க, வலது கரம் அபயம் காட்டி வரம் தரும் வரதராஜனாகவே விளங்குகிறார். இங்குள்ள பெருமாளின் உயரம் 8 அடி 2 அங்குலம் என பக்தர்கள் குறிப்பிடும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது அல்லவா?. ஆலயத்தின் தல விருட்சம் பாரிஜாதம். தீர்த்தம் மகாலட்சுமி தீர்த்தம். இங்கு மகாமண்டபத்தில் மிகச் சிறிய அளவிலான மகாலட்சுமி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி தாரு மரத்தில் உருவாக்கப்பட்டது. எனவே, இங்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது. மாறாக, ஆஞ்சநேயரின் திருமேனியில் சாம்பிராணி தைலமும், சந்தனத் தைலமும் மட்டுமே சாற்றுகின்றனர். இந்த ஆலயத்திற்கு அருகேயே வஜ்ரதம்பேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் திருமேனியில் வலது கை அருகே, பிரயோக சக்கர ஆயுதம் உள்ளது. எனவே, இத்தலத்து பெருமாளை வணங்குவோரின் பகைவர்கள் நிர் மூலமாகி, நிம்மதியான, அமைதியான வாழ்க்கையை அந்த பக்தர்களுக்கு வழங்குவதில் இத்தல இறைவன் வல்லவர் என பக்தர்கள் நம்புவது நிஜமே!

நம்பிக்கைகள்

இங்குள்ள பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டிக்கொண்டால் விரைவாக திருமணம் நடந்தேறுவதாக பக்தர்கள் சொல்கின்றனர். தங்களது வேண்டுதல் பலித்ததும் பக்தர்கள், எள்ளு சாதத்தை நைவேத்தியம் செய்து ஆலயம் வரும் மற்ற பக்தர்களுக்கு வினியோகம் செய்வதுடன், பக்த ஆஞ்சநேயருக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி மகிழ்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள பெருமாளின் உயரம் 8 அடி 2 அங்குலம். இந்த ஆலயத்தில் அர்ச்சனை தமிழிலும் நடைபெறுகிறது. இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரின் திருமேனி தாரு மரத்தில் உருவாக்கப்பட்டது. எனவே, இங்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுவது கிடையாது. மாறாக, ஆஞ்சநேயரின் திருமேனியில் சாம்பிராணி தைலமும், சந்தனத் தைலமும் மட்டுமே சாற்றுகின்றனர்.

திருவிழாக்கள்

அனைத்து சனிக்கிழமைகள், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி, தமிழ் மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு போன்ற நாட்களில் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில வருடப் பிறப்பு நாட்களில் இறைவன், இறைவி வீதியுலா வருவதுண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழக்காட்டூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குத்தாலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top