காசிபாளையம் முத்து வேலாயுதசாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
காசிபாளையம் முத்து வேலாயுதசாமி திருக்கோயில்,
காசிபாளையம்,
ஈரோடு மாவட்டம் – 638454.
இறைவன்:
முத்து வேலாயுதசாமி
இறைவி:
வள்ளி, தெய்வானை
அறிமுகம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி செல்லும் அனைத்து பேருந்துகளும் காசிபாளையம் வழியாக செல்கின்றன. கோபியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தாம் பெற்ற கவி புலமையின் பலனாக தனது நண்பனான மன்னர் சேரமானிடம் பொன்னும் பொருளும் பரிசுகள் பல பெற்று இவ்வூரின் வழியே திரும்பி கொண்டிருந்தார். தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியது. அருகிலுள்ள பிள்ளையார் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது தன்னை மதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரின் பரிசுப் பொருட்களை கொள்ளையடித்து வர சொன்னார்.
கவலையடந்த சுந்தரர் குமரன்குன்று சென்று வழிப்பறி திருடர்களிடம் இருந்து ஊரில் வழிபடும் பக்தர்களை காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இருக்கிறீர்கள் என்று தேவாரப் பதிகம் பாடிவிட்டார். உடனே சுவாமி அத்தனை பொருட்களையும் பூதகணங்கள் மூலம் திரும்பும்படி செய்தார். இதற்கு சான்றாக இக்கோயில் மண்டபத்தூண் ஒன்றில் சிவபெருமான் சிற்பமும், சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடன் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. படிபிள்ளையார் மலையடிவாரத்தில் புதுப் பொலிவுடன் கூடிய சன்னதியில் காட்சி தருகிறார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை இங்கு உள்ள பழங்கால கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏட்டுச் சுவடி ஒன்றில் இங்கே மூலவராக காட்சி தரும் முருகப்பெருமான் மூன்று கலைகளோடு காணப்படுகிறார் என்ற குறிப்புகள் இடம் பெறுகிறது. அதேபோல் பழைய ஏட்டுச் சுவடி ஒன்றில் பாடலில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.
நம்பிக்கைகள்:
தன்னை நாடி வரும் பக்தர்களின் நாக தோஷம் புத்திர தோஷம் உட்பட சகல தோஷங்களையும் பிரச்சினைகளை உடனுக்குடன் தனது பார்வையாலேயே தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு தினமும் நடக்கும் விசேஷ அர்ச்சனையில் கலந்து கொண்டால் செவ்வாய் தோஷமும் நீங்கும் எனப்படுகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின்போது பக்தர்களுக்கு சர்க்கரை கலந்த பசும்பாலை பிரசாதமாக தருகிறார்கள். சிலவேளைகளில் பிரசாதமாக மூலிகை பிரசாதமாக தரப்படுகிறது. மனநலப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது அருமருந்து என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
கோயிலின் முகப்பில் உள்ள பிள்ளையாரை வணங்கிவிட்டு படிகளேறி மேலே செல்லவேண்டும். குன்றில் கிடைத்த பல அரிய சிலைகள் அர்த்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஐந்து தலை நாகம் சிவலிங்கத்தை அராதிப்பது போன்ற மிகபழமை வாய்ந்த கற்சிலை, கொங்குச்சோழர் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர், துர்கை அம்மன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு கோஷ்டத்தில் நிறுவப்பட்டுள்ளன. மூன்று நிலைகள் இராஜகோபுரம் தாண்டியதும் கொடிமரமும் மயில்வாகனுமும் காணப்படுகிறது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முத்து வேலாயுதசாமி காட்சியளிக்கிறார்.
இந்த பகுதியில் தீவிர முருக பக்தை வாழ்ந்து வந்தார். எப்போதும் ஒரு கணவனை கவனிக்காமல் முருகனை பூஜை செய்துகொண்டிருந்தால். இதனால் கோபம் கொண்ட கணவன் ஒரு நாள் முருகனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த அவளது கையை வெட்டினான். அவள் வலியால் துடித்த போது முருகா முருகா என்று அலறினாள். முருகப் பெருமான் அவள்முன் தோன்றி கையை சேர்த்து வைத்தார். அவள் கணவன் தான் செய்த தவறுக்கு வருந்தி முருகப்பெருமானை வணங்கினான். அதுமுதல் அவன் மனைவியும் சேர்ந்து முருகனின் புகழ் பாடினார். இச்சம்பவம் இக்கோயிலின் மிக்கப் பழமை வாய்ந்த ஓலைச்சுவடி ஒன்றில் இருக்கிறதாம்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடங்குவதற்கு முன் இந்த மலை முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்துகிறார்கள். அப்போது மூலஸ்தானத்திற்கு முன்னால் இருக்கும் மண்டபத்தில் வலப்பக்கமாக பல்லி சத்தமிட்டால் நாம் தொடங்கவிருக்கும் காரியம் வெற்றி பெறும் என்றும், இடது பக்கமாக சத்தமிட்டால் காரியம் தடைபடும் என்பது நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.
இவ்வாலயத்தின் தல விருட்சமாக வில்வமரம், வன்னி மரம் விளங்குகின்றனர். முருகனுக்கு வலது புறமாக சிவன்-பார்வதி அழகிய சன்னதியில், மூல கணபதி மிகப்பெரிய உறவிலும், இதற்கு மத்தியில் தட்சிணாமூர்த்தி நின்ற திருக்கோலத்தில் அமைந்துள்ளன. மேலும் தற்போது புதிதாக 18 சித்தர்களின் சிலைகளையும், 108 சிவலிங்க திருமேனிகளையும், நவகிரகங்களை தனித்தனி சன்னதிகளில் தங்களது துணையோடு காட்சி தரும் விதமாக அமைத்து மேலும் இக்கோயிலை விரிவடையச் செய்து இருக்கிறார்கள்.
நவகிரக சன்னதிகளும் முன்னதாக அன்னை பகவதி அம்மனுக்கு ஒரு கோயில் காணப்படுகிறது ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பெண்கள் இங்கு வந்து சக்கரை பொங்கல் வைத்து இந்த பகவதி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். வீடு, வாகனம், தொழில், திருமணம் என பக்தர்களின் கோரிக்கையயை நிறைவேற்றி வைக்கிறாராளாம்.
திருவிழாக்கள்:
முருகனுக்கு உகந்த நாட்களில் இத்தலத்தில் சிறப்பு , தமிழ் வருடத்தின் முதல் நாளான சித்திரைப் பிறப்பு, கந்தசஷ்டி, தைப்பூசம், கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் விசேஷ அலங்காரங்களும் நடத்தப்படுகின்றன.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காசிபாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்