Sunday Nov 24, 2024

காகிதக்கார தெரு காசி விஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி :

காசி விஸ்வநாதர் திருக்கோயில்,

காகிதக்கார தெரு,

திருவாரூர் மாவட்டம் – 610001.

இறைவன்:

காசி விஸ்வநாதர்

இறைவி:

விசாலாட்சி

அறிமுகம்:

திருவாரூர் பெருங்கோயிலின் வடக்கு வீதியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இரண்டாவது இடது தெரு தான் காகிதக்கார தெரு. இந்த தெருவில் மேற்கு கோடியில் தெரு முடியும் இடத்தில் உள்ளது இந்த காசி விஸ்வநாதர் கோயில். அருகில் சீதளாதேவி கோயில் உள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால், தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டனர், உடலில், அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரண் அடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துயர் துடைக்க, சிவனின் ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி தோன்றியது.

பார்வதியின் அம்சமாக மாறிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று, அம்பாளாக வடிவெடுத்தது. இந்த தேவியை வழிபடுவதற்கென சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக்கொடுத்தார் சிவன். “சீதளாஷ்டகம்” எனப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி, அம்பாளை வழிபட்டால், வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். இந்த சீதளாதேவி வழிபட்ட இறைவன் இவர் எனப்படுகிறது. ஆனால் இக்கோயில் காசி விஸ்வநாதர் எனப்படுகிறது அந்த பழம்பெரும் கோயில் சிதைவுற்று பிற்காலத்தில் எழுந்த கோயில் இதுவாக இருக்கலாம். இங்கு காணப்படும் விநாயகர் மட்டும் பழமையானவராக தோன்றுகிறார். இந்த காசி விஸ்வநாதர் கோயில் கிழக்கு நோக்கியது, இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கி உள்ளார். முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது. கருவறை வாயிலில் சிறிய விநாயகரும் ஒரு முருகனும் உள்ளனர். கோயிலின் தெற்கில் ஒரு வேம்பின் கீழ் பெரிய விநாயகர் உள்ளார். வடபுறம் சண்டேசர் உள்ளார். சிறிய கோயிலாக இருந்தாலும் அருகாமை தெருமக்கள் தொடர் வழிபாட்டில் வைத்துள்ளனர்.

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map