கழுக்காணி முட்டம் கருணைபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
கழுக்காணி முட்டம் கருணைபுரீஸ்வரர் சிவன்கோயில், கழுக்காணி முட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 001.
இறைவன்
இறைவன்: கருணைபுரீஸ்வரர்
அறிமுகம்
இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கழுக்காணி முட்டம் என்னும் கிராமத்தில் கருணைபுரீஸ்வரர் சிவன்கோயில் அமைந்துள்ளது. கழுக்காணி என்பது வேங்கை மரத்தினை குறிப்பது ஆகும் இவ்வூர் வேங்கை மரக்காடாக இருந்ததால் கழுக்காணி எனவும் , முட்டம் என்பது ஆற்றோர ஊர் எனவும் கொள்ளுதல் வேண்டும். அதே சமயம் இந்த ஊரின் புராண வரலாற்றில் ஒரு சுவையான கதைக்காக இந்த கழுக்காணி வேறு பொருளில் கையாளப்பட்டுள்ளது. காவிரியின் மிகை நீர் கொணர்ந்த ஆறுகள் இப்பகுதி நிலங்களை முப்போக சாகுபடி பகுதியாக்கி வைத்திருந்தன. பச்சை பட்டுத்திய நிலங்களை பார்த்து பார்வதியே மயிலாக ஆடிய துறை இப்பகுதியாகும். சப்த மாதர்களில் ஒருவரான வராகி அம்மை பூசித்து பேறு பெற்ற தலம் .இதுவாகும், புராண காலத்தில் இந்த ஊருக்கு காணிமாடம், செரக்காணி மாடம், கழுக்காணி மாடம், துர்க்காபுரி என்று வேறு பல பெயர்களும் இருந்துள்ளன. இக்கோயில் இரண்டு ஏக்கர் பரப்பில் மேற்கு நோக்கியது மேற்கில் சிறிய வாயில், ராஜகோபுரமில்லை தெற்கிலும் ஒரு சிறிய வாயில் உள்ளது. தரை முழுதும் செங்கல் பரப்பப்பட்டுள்ளது. இறைவன் கருவறை சோழர் கால கருங்கல் வேலைப்பாடுகளுடன் ஏக தளம் கொண்டு அழகாக விளங்குகிறது. இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இரு கருவறைகளையும் ஒரு நீண்ட மண்டபம் இணைக்கிறது.அதன் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. கருவறை கோட்டத்தில் துர்க்கை, பிரம்மன், லிங்கோத்பவர், தட்சணாமூர்த்தியும், நர்த்தன விநாயகரும் உள்ளனர். வடமேற்கில் விநாயகர் சிற்றாலயமும் தென்மேற்கில் பெரிதான முருகன் கோயிலும் உள்ளன. கோமுகத்தின் அருகில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் சனி பைரவர், சீலவதி வழிபட்ட லிங்கமும் தென் கிழக்கில் நீண்ட மண்டபத்தில் இரண்டாம் குலோத்துங்கன் வழிபட்ட லிங்கமும்,சாட்சி சொன்ன விஷ்ணுவின் சிலையும் உள்ளன. துர்வாசர் வழிபட்ட லிங்கமும் உள்ளன. அருகில் சீலவதி அம்மையார் சிலையும் உள்ளன. தென்முகன் எதிரில் பெரிய வில்வமரமும் கிணறு ஒன்றுமுள்ளது. கோயில் முற்றிலும் பாராமரிப்பு இல்லாமல் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது.
புராண முக்கியத்துவம்
இவ்வூரில் சிவபக்தியில் சிறந்து விளங்கிய சீலவவதி அம்மையார், அடியார்களுக்கு உணவு படைத்த பிறகே தானும் தன் மகனும் சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் சிறுதொண்டரும் அடியார் ரூபத்தில் சீலவதி இல்லத்துக்கு வந்தார்கள். அடியார் இருவரையும் எதிரே உள்ள திருக்குளத்தில் நீராடி வரும்படியும் அவர்கள் வருவதற்குள் அறுசுவை உணவைத் தயாரித்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆனால், அவரது ஒரே மகனோ, பசி தாங்காமல் உணவை உட்கொள்ள, அதைப் பார்த்த சீலவதி கோபம் கொண்டு, உலக்கையால் மகனை ஓங்கி அடித்தாள். அடிபட்ட மகன் இறந்து போனான். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், மகனை ஒரு பாயில் சுற்றி வைத்து விட்டு, புதிய உணவை தயாரித்தாள், சீலவதி. நீராடி விட்டு வந்த சிவனடியார்களை வரவேற்று, வாழை இலை போட்டு உணவு பரிமாறத் தொடங்கினாள். அப்போது அடியாராக வந்த ஈசன், ‘‘உன் மகனையும் வரச்சொல்லம்மா, அவனோடு சேர்ந்து சாப்பிடுகிறோம்’’ என்று கூறினார். சீலவதியாரோ, ‘‘அவன் இப்போது வரமாட்டான்’’ என்றாள். இறைவனோ உன் மகன் வந்தால்தான் உணவருந்துவோம் என்று சொல்ல, சீலவதி, மிகுந்த கோபத்துடன், ‘‘நீங்கள் ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் என் மகனை அடித்த உலக்கையால் உங்களையும் அடித்து விடுவேன்’’ என்று என்று சொல்லி அழுதார். புரிந்து கொண்ட இறைவன் என்ன நீ அடங்காத கழுக்காணியா (வைரம் பாய்ந்த உலக்கை) இருக்கியே?’’ என்று கூறி , ‘‘நீ பிள்ளையை கூப்பிடு, அவன் வருவான்’’ என்றார். அம்மையாரும் கூப்பிட பாயில் சுருட்டி வைத்த பிள்ளை உயிருடன் எழுந்து வந்தான். . இந்த அதிசயம் கண்டு சீலவதியார் நெகிழ்ந்து கை கூப்ப. ஈசன் அனைவருக்கும் ரிஷப வாகனத்தில் காட்சி அருளினார். பிள்ளைக் கறி அமுது படைத்த செருக்கோடு இருந்த சிறுதொண்டர் இந்நிகழ்வு கண்டு பணிவோடு வணங்கினார். இந்தத் திருவிளையாடலை இறைவன் நடத்தியது சித்திரை மாதம், பரணி நட்சத்திரத்தன்று. ஆகையால் பரணி நட்சத்திர தினத்தில் வழிபட வேண்டிய தலம் இது. காலை மாலை என இருவேளை பூஜை கொண்டுள்ளது கோயில்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கழுக்காணி முட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி