கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மலேசியா
முகவரி
கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், ஜலன் ராஜா முசா அய்ஸ், ஈப்போ, மலேசியா – 30300.
இறைவன்
இறைவன்: சுப்பிரமணியர்
அறிமுகம்
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து வடக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கிய நகரம் ஈப்போ. பேராக் மாநிலத்தின் தலைநகரான ஈப்போ, கோடீஸ்வரர்களின் பூமி என்ற அடைமொழியால் வழங்கப்படுகிறது. கிந்தா என்ற நதியும், சுங்கை பிங்கி, சுங்கை பாரி என்ற துணைநதிகளும் பாயும் ஊர் இது. சுண்ணாம்புக் குன்றுகள் நிறைந்த நகரம். வெள்ளீயம் அதிக அளவில் வெட்டி எடுக்கப்பட்ட பூமியும் இதுவே. இங்கே மிகவும் பழைமையான சுப்பிரமணியர் ஆலயம், சென்ரோ மலைக்குகையில் இருந்து வந்தது. கி.பி. 1889-ல் நிலச்சரிவு விபத்தால் மலையடிவாரத்திற்கு கி.பி. 1930-ல் இடம் பெயர்ந்த இவ்வாலயம், இன்று கம்பீரமாய் எழுந்து நிற்கிறது. இவ்வாலயத்தில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து, அலகுக் குத்தி, காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவைகளில் ஒன்று கல்லுமலை கோவிலாகும்.
புராண முக்கியத்துவம்
ஆலயம் கிந்தா நதிக்கரையில் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் ஏழு கலசங்களைத் தாங்கி பிரம்மாண்டமாய் காட்சியளிக்கிறது. உள்ளே விசாலமான பிரகாரம், நடுவில் பிரம்மாண்ட முன்மண்டபம் அமைந்துள்ளது. விநாயகர், அம்மன், நடராஜர் சபை, அரச மரத்தடி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் சன்னிதிகள் ஒருங்கே அமைந்துள்ளன. மயில்கள் நிறைந்த தனிப்பகுதியும் இருக்கிறது. ஆலயத்தின் நடுப்பகுதியில், கல்லுமலை சுப்பிரமணியர், திருச்செந்தில் நாதனின் மறுவடிவமாக சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார். பாரிட் முனிசாமி உடையார் என்பவரிடம் வேலை பார்த்து வந்த கல் உடைக்கும் தொழிலாளியான மாரிமுத்து என்பவர், தனது பணியின் காரணமாக குனோங் சீரோவில் உள்ள கல்லுமலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இங்கே வா என யாரோ அழைப்பது போன்று குரல் கேட்டு திகைப்படைந்தார். மீண்டும் அதே போன்ற குரலொலி மலைப்பகுதியில் இருந்து வருவதைக் கண்டு திகைப்படைந்தார். இச்செய்தியை உடனடியாக தனது முதலாளியிடம் தெரிவித்தார். முதலில் அதனை பெரிதுபடுத்திக் கொள்ளாத பாரிட் முனிசாமி உடையார், பின்னர் அதனை பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் தனது தொழிலாளர்களை அழைத்து கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார். அவர்கள் ஆராய்ந்த போது பயங்கர இருள் சூழ்ந்த குகை ஒன்றை கண்டறிந்தனர். தீப்பந்தங்களுடன் உள்ளே சென்று பார்த்த போது, அங்கே சாம்பிராணி,கற்பூரம், ஊதுபத்தி போன்ற வாசனைகள் வருவதைக் கண்டு அதன் ரகசியத்தை அறிய முற்பட்டனர். அப்பொழுது திருமுருகன் சாயலில் கல்லில் அமைந்த உருவத்தைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். அக்குகை திருமுருகன் குடிகொண்டுள்ள இடமாக கருதப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 1889- ம் ஆண்டு குனோங் சீராவின் கல்லுமலைக் குகையில் அருள்மிகு சுப்ரமணியர் கோயில் அமைக்கப்பட்டது. இந்த குகைக் கோயில் மக்களின் வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைக்கப்பட்ட பின்னர், சுங்கைப்பாரியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் கோயிலுக்கும் இக்குகை கோயிலுக்கும் ஒரே நிர்வாகமாக மாற்றி அமைக்கப்பட்டது. அன்று முதல் தைப்பூச காவடி காணிக்கைகள் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து கல்லுமலை சுப்ரமணியர் கோவிலுக்கு கொண்டு செல்லும்படியான முறை ஏற்பட்டது. 1926-ம் ஆண்டு நடைபெற்ற தைப்பூச விழாவின் போது, குனோங் சிரோ சரிவில் இருந்த பெரிய பாறை ஒன்று உடைந்து விழுந்ததில் இரு அர்ச்சகர்கள் மரணமடைந்தனர். இதனால் குகாலயத்தை அங்கிருந்து அகற்றும்படி அரசு உத்தரவிட்டது. எனவே ஆலயத்தை மாற்றி அமைக்க தீர்மானிக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் புதிய கோயில் நிர்மானிக்கப்பட்டது. 1930-ம் ஆண்டு வரை குகாலயமாக இருந்த கல்லுமலை கந்தன் ஆலயம், 1932-ம் ஆண்டில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கோபுரத்துடன் தகரத்தாலான கூரை மண்டபமாக அமைக்கப்பட்டது. 1932-ம் ஆண்டு இறுதியில் இப்புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் இக்கோயிலுக்கான பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டன. தைப்பூச உற்சவம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கோயிலுக்கு இந்தியாவைச் சேர்ந்த இந்துக்கள் மட்டுமல்லாது பிற இனத்தை சார்ந்த மக்களும் வரத் துவங்கினர். 1954-ம் ஆண்டு தமிழ் உயர்நிலைப் பள்ளி அமைக்க 15,000 ரிங்கிட் செலவில் மண்டபம் ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு அரசின் அனுமதி கிடைக்காததால் அம்மண்டபம் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், முக்கிய விழாக்கள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இம்மண்டபம் திருமணமண்டபமாக மாற்றி அமைக்கப்பட்டு, திருமணமண்டபமாகவும் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படும் கூடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. 1969-ம் ஆண்டில் 34,000 வெள்ளி செலவில் இக்கோயிலுக்கான சுற்றுச் சுவரும், 6500 ரிங்கட் செலவில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயில் வளைவும் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு இக்கோயிலுக்கான விரிவாக்க பணிகள் நடத்தப்பட்டு, அவ்வாண்டு இறுதியிலேயே கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பின்னர் பெருமக்கள் பலர் பணஉதவி மற்றும் பக்தர்களின் நன்கொடைகளைக் கொண்டு விநாயகர் மற்றும் அம்மன் சன்னதிகள் அமைக்கப்பட்டது. மேலும் கோபுரத்தின் மூன்று புறங்களிலும் மாடங்கள் அமைத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
திருவிழாக்கள்
தைப்பூசம் மற்றும் கந்தசஷ்டி விழா ஆகியன இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களாகும். தைப்பூச விழாவின் போது நடபெறும் ரத யாத்திரை அருகில் உள்ள மகா மாரியம்மன் கோயில் வரை கொண்டு செல்லப்படுகிறது. இவ்விழாவின் போது காவடிகளும் எடுக்கப்படுகின்றன.
காலம்
கி.பி. 1930-ல் மலையடிவாரத்திற்கு இடம் பெயர்ந்தது
நிர்வகிக்கப்படுகிறது
மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஈப்போ
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈப்போ
அருகிலுள்ள விமான நிலையம்
ஈப்போ