கருவறையின் மேற்கூரையில் அற்புத சிற்பம்
கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது, ஹிந்து புராணங்களில் இரண்டு தலை பறவையாகும். இது ஹிந்து கடவுள் விஷ்ணுவால் அனுமானிக்கப்படும் ஒரு வடிவம்.
இந்த வடிவ சிற்பக்கலை, தமிழகத்தின் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ளது. கர்நாடகாவில் ஒரு கோவிலிலும் கருவறையின் மேற்கூரையின், கந்தபெருண்டா சிற்பக்கலை உள்ளது.
ஷிவமொகாவில் இருந்து சாகருக்கு செல்லும் வழியில், கவுதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கவுதி ஆட்சியாளர் என்று அழைக்கப்படும் சவுடப்ப நாயக்கரால் கட்டப்பட்ட, ராமேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. ஹொய்சாளா – திராவிட கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் விளங்குகிறது.
நுழைவாயிலில் இருந்து, கோவிலுக்குள் செல்லும் வழியின் இருபக்கமும், தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களை கவரும் வகையில் உள்ளது.
கோவிலின் பின்பக்கம் உள்ள 24 அடி உயர துாணில், விநாயகருக்கு மரியாதை செய்யும் பெண்ணின் சிற்பங்கள் உள்ளது. இந்த சிற்பங்கள் அவுரங்கசீப்புடன் வீரத்துடன் போரிட்ட, கவுடி ராணி சென்னம்மாவின் சிற்பமாக நம்பப்பட்டு வருகிறது. கோவிலின் முன்பு, சிவபெருமானை நோக்கி பிரமாண்ட நந்தியும் உள்ளது. கோவிலின் கருவறை மேற்கூரையில், கந்தபெருண்டா சிற்பம், பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
பல கட்டட கலைகள் பிரதிபலிக்கும் இக்கோவிலை, இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இக்கோவிலை சுற்றிக்காட்டவும், கோவிலை பற்றி பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் அர்ச்சகர்கள் உதவுகின்றனர். புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதி உண்டு.
காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
பெங்களூரில் இருந்து இக்கோவில் 400 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. சாகருக்கு பஸ் அல்லது ரயில் மூலமாக செல்லலாம். அங்கிருந்து மாற்று பஸ்கள் அல்லது வாடகை கார் மூலம் சென்றடையலாம்.
சாகரில் இருந்து 8 கிலோ மீட்டர் துாரத்தில், கோவில் அமைந்துள்ளது.
– நமது நிருபர் –