கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன்
முகவரி :
கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் திருக்கோயில்,
கண்ணமங்கலப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630502.
இறைவன்:
பட்டத்தரசி அம்மன்
அறிமுகம்:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள ஊர் கண்ணமங்கலப்பட்டி. இங்குகோயில் கொண்டிருக்கும் பட்டத்தரசிஅம்மன், பிள்ளைவரம்அருளும்நாயகியாய்அருள்பாலிக்கிறாள். பிள்ளை வரம் வேண்டி, `மதலைகள்’ எனப்படும் குழந்தை வடிவ களிமண் பொம்மைகளை கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள். இங்ஙனம் சேர்ந்த மதலைகள், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
புராண முக்கியத்துவம் :
பட்டத்தரசி அம்மனுக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர் துவராபதி அம்மன். பட்டத்தரசிக்கு 16 பிள்ளைகள்; துவராபதி அம்மனுக்கோ குழந்தைகள் கிடையாது. ஒருமுறை பட்டத்தரசியைப் பார்க்க வந்தாள் துவராபதி. அப்போது, `எங்கே தன் சகோதரியின் கண் பட்டு பிள்ளைகளுக்கு ஏதும் ஆகிவிடுமோ’ எனும் எண்ணத்தில், குழந்தைகள் அனைவரையும் கோழி அடைக்கும் கூடைக்குள் பதுக்கிவைத்தாள் பட்டத்தரசி.
சகோதரி வந்து சேர்ந்தாள். `பிள்ளைகள் எங்கே’ எனக் கேட்டாள். `அவர்கள் வீட்டில் இல்லை’ என்று பதில் சொன்னாள் பட்டத்தரசி. இங்ஙனம் அவள் கூறியதிலிருந்தே `சகோதரி பட்டத்தரசி ஏதோ மறைக்கிறாள்’ என்பதை யூகித்தறிந்த துவராபதி, வருத்தத்துடனும் கோபத்துடனும் ஏதும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டாள்.
அவள் சென்றதும் கூடையை நிமிர்த்தினாள் பட்டத்தரசி. அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்! அவளின் பிள்ளைகள் அனைவருக்கும் பார்வை பறிபோயிருந்தது. தவறை உணர்ந்த பட்டத்தரசி, தன் சகோதரியைத் தேடி ஓடினாள். அவளிடம் மன்னிப்பு வேண்டினாள். துவராபதியும் கோபம் தணிந்தாள். பட்டத்தரசியிடம் திருநீறு கொடுத்து, பிள்ளைகளுக்குப் பூசிவிடச் சொன்னாள். பட்டத்தரசி அம்மனும் அப்படியே செய்ய, பிள்ளைகள் பார்வை பெற்றனர்.
இன்றைக்கும் குழந்தை இல்லாமல் எவரும் தவிக்கக் கூடாது என்று, தன் சந்நிதியைத் தேடி வரும் அன்பர்களுக்கெல்லாம் பிள்ளை வரம் தந்து அருள்பாலிக்கிறாள் பட்டத்தரசி அம்மன். அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் எனும் கிராமத்தில், துவராபதி அம்மனுக்கும் கோயில் இருக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
பட்டத்தரசி அம்மன் ஆலயத்தில் நடைபெறும்வ் அழிபாடுகள் குறித்து கோயில் அர்ச்சகரிடம் விவரம் கேட்டோம். “புதிதாகத் திருமணம் முடிந்த தம்பதியர் கோயிலுக்கு வந்து அம்மனை வணங்கி, `எவ்வித குறையுமின்றி விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கவேண்டும். பிள்ளை பிறந்ததும் மதலை வாங்கி வைக்கிறோம்’ என்று பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வார்கள். அவ்விதம் குழந்தை பிறந்ததும் மீண்டும் வந்து மதலை வாங்கி வைத்து வழிபடுவார்கள்.
அதேபோல், நீண்ட காலம் குழந்தை இல்லாமல் தவிக்கும் அன்பர்கள் இங்கு வந்து வழிபட்டு, கோயிலில் இருந்து மதலை வாங்கிச் செல்வார்கள். குழந்தை பிறந்த பின்னர் குழந்தையுடன் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். வரும்போது கோயிலில் ஏற்கெனவே அவர்கள் வாங்கிச் சென்ற பழைய மதலையுடன், புதிய மதலை ஒன்றையும் கொண்டு வந்து கோயிலில் சமர்ப்பித்து வழிபடுவார்கள். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இங்கு வந்து வேண்டிக்கொண்டால், விரைவில் வேண்டுதல் பலிக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.’’ என்கிறார் அர்ச்சகர்.
திருவிழாக்கள்:
பங்குனி மாதம் பட்டத்தரசி அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். அப்போதும் மதலைகள் வாங்கிவைத்து வழிபாடு செய்யலாம்
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்ணமங்கலப்பட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை