கடலாடி கரைகண்டேசுவரர் சிவன் கோவில், திருவண்ணாமலை
முகவரி
கடலாடி கரைகண்டேசுவரர் சிவன் கோவில், கடலாடி,கலசபாக்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் – 606601. Mobile: +91 94446 88734
இறைவன்
இறைவன்: கரைகண்டேசுவரர் இறைவி: பெரிய நாயகி
அறிமுகம்
சப்த கரைகண்ட ஆலயங்களில் 2ம் ஆலயமாம், பெரிய நாயகி சமேத கரைகண்டேசுவரர் ஆலயம், கடலாடி, காஞ்சி கிராமம், செங்கம் போளூர் வழியில், பர்வதமலைக்கு முன்பாக, தெற்குப் புறத்தில் உள்ளது. 11ம் நூற்றாண்டு முதலாம் குலோத்துங்கன் காலக் கோவில், பின் பல மன்னார்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமான் தம் பிரம்மஹத்தி தோஷம் தீர அமைத்த 7 கரைகண்ட ஆலயங்களில், இது இரண்டாம் ஆலயமாம். பெரிய வளாகத்தில், தெற்கு நோக்கிய நுழைவாயிலுடன் கூடிய கோயில். மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கருவறை வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் இரண்டு சிவலிங்கங்களும் உள்ளன. மூன்று தள விமானம், கருவறைக்கு மேலே அழகூட்டுகிறது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை அம்மன் கோஷ்டங்களிலும்; சண்டிகேசுவரர் கோமுகத்திற்கு எதிரேயும் இடம் பெற்றுள்ளனர். கிழக்கு நோக்கிய சந்நதியில் அன்னை பெரியநாயகி அருள்பாலிக்கிறாள். நின்ற திருக்கோலம். மிகவும் சிதலமடைந்து காணப்படும் இப்பெரிய ஆலயம் விரைவில் சீர்படுத்தப்பட வேண்டும்.
புராண முக்கியத்துவம்
அண்ணாமலையாரின் இடதுபாகம் இடம்பெற வேண்டும் என்று காஞ்சியில் அவதரித்த காமாட்சியம்மை தவம் மேற்கொண்டாள். கம்பை ஆற்றைவிட்டு விட்டு, அண்ணாமலையை நோக்கித் தனது பயணத்தைத் துவக்கினாள். வாழைப்பந்தல் என்று தற்போது அழைக்கப்படும் இடத்தை அடைந்த அன்னை, கமண்டல நதி சங்கமிக்கும் இடத்தில், மண்ணினால் சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி வழிபடத் துவங்கினாள். பூஜைக்குப் புனிதநீர் வேண்டுமே! அதற்கு எங்கே போவது! என்றெண்ணி மைந்தன் முருகனை அழைத்தாள். அன்னையின் பூஜைக்குப் புனிதநீர் வேண்டி, முருகப்பெருமான், உமாமகேசுவரர்களை நினைத்து, ஜவ்வாது மாமலையை நோக்கி, தனது வேலை வீசினார். அதன் குறி செங்கண் நோக்கிச் சென்று பாய்ந்தது. மலையைத் துளைத்தது வீரவேல்! முருகப்பெருமான் வீசிய வீரவேலும் விரைந்து சென்று, செல்லும் வழியில் இருந்த ஏழு குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையைத் துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்திச் சொருகிக் கொண்டது. அந்த இடமே மேல்குப்பம் என்று இன்று அழைக்கப்படும் சிற்றூர் ஆகும். மலையைத் துளைத்த வேல், புனிதநீரைப் பெருக்கெடுத்திடச் செய்து, நீர்வீழ்ச்சியாக ஓடச் செய்தது. தெய்வத் திருமகன் உருவாக்கிய அந்த ஆறுதான் சேயாறு. தென் கயிலாயமான பர்வதமலையையொட்டிப் பெருகி வடக்கு, வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றுடன் சங்கமித்து, சதுரங்கப்பட்டினத்தில் கடலோடு சேருகிறது. பிரம்ம குமாரர்கள் ஏழுபேர்! முருகப்பெருமான் அறிந்திருக்கவில்லை, அந்த மலையடிவாரத்தில், பாவவிமோசனம் வேண்டி ஏழு அந்தண குமாரர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர் என்று! அனந்தமாபுரத்தைச் சேர்ந்த அந்த எழுவர், முறையே போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன், வாமன் என்பவராவர். முருகப்பெருமானின் வீரவேல், மலையைத் துளைத்துச் சென்றபோது, இவ்வேழு அந்தண குமாரர்களின் சிரங்களையும் கொய்து எறிந்துவிட்டது. சேய் உருவாக்கிய ஆறு, செங்குருதியாறு’ ஆகியது. வீரவேலினால் அந்தணகுமாரர்களுக்கு முக்தியும், பாவ விமோசனமும் கிட்டியது. ஆனால் முருகப்பெருமானை பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது. காமாட்சியம்மை, ஆற்றுநீர் செங்குருதியாகப் பாய்வதைக் கண்ணுற்று திடுக்கிட்டாள். ஞான திருஷ்டியால் நிகழ்வுகளை அறிந்தாள். பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, உடனே சேயாற்றின் கரையிலேயே ஏழு சிவலிங்கத் திருமேனிகளை அமைத்து, பூஜித்திடுமாறு முருகப் பெருமானுக்கு உணர்த்தினாள் அன்னை. அப்பொழுது எழுந்தன இந்த ஏழு ஆலயங்கள். அதில் இது இரண்டாவது ஆலயம்.
சிறப்பு அம்சங்கள்
இங்குள்ள அண்ணாமலையார் பாதத்தை வணங்கிய பின்னரே பக்தர்கள் பர்வதமலை’ ஏறத்துவங்குவர். கடவுளின் பாதம் பட்ட மலையடியே கடவுளடியாகி’ இன்று கடலாடி என்று மருவியுள்ளது என்றும் கூறுவர். இக்கோவில் 10ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கம்பண்ண உடையார் கல்வெட்டுகள் உள்ளன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடலடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவண்ணாமலை
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி